கடத்தல் சந்தேக நபரைக் கைது செய்ய வேடமிட்டு சென்ற பொலிஸார்
இலங்கை
தாய்லாந்தின் லோப்புரி மாகாணத்தில் நடைபெற்ற வீதி நடனத் திருவிழா ஒன்றின் போது, 'மேகா பா-வாப்-வாப்' என்ற போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபரைக் கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டனர்.
இதற்காக ஐந்து ஆண் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு பெண் அதிகாரி என மொத்தம் ஆறு பேர், பளபளப்பான கவர்ச்சியான ஆடைகளை அணிந்து சென்றனர்.
அதிகாரிகள் அந்த சந்தேக நபரை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 53 மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் மாத்திரைகள், போதைப்பொருள் விற்பனைக்குப் பயன்படுத்தப்படும் 200 பிளாஸ்டிக் பைகள் மற்றும் சட்டவிரோத சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கைபேசி ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
அவர் மீது போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் சட்டவிரோத இணைய வழி சூதாட்டத்தை நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கைக்குப் பின்னர் அதிகாரிகள் தங்களின் நடன ஆடையுடன் சந்தேக நபருக்குப் பின்னால் நின்று காவல் நிலையத்தில் வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
"நாங்கள் சும்மா சென்று அவரை எப்படிக் கைது செய்வது? ஆடை வாடகைக்கு எடுத்த பணம் வீணாகிவிடுமே!" என்ற நகைச்சுவையான தலைப்புடன் இந்த புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.























