• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தென் கொரிய அதிபரின் உதவியாளரின் மின்னஞ்சல்களை ஹேக் செய்த வட கொரியா

கடந்த நவம்பர் மாதம், தென் கொரியாவின் அதிபர் யூன் சுக் யோல் (Yoon Suk Yeol), 3-நாள் சுற்று பயணமாக இங்கிலாந்து சென்றிருந்தார். அப்போது அவர் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கையும் சந்தித்து பேசினார்.

யூன், இங்கிலாந்து சென்ற காலகட்டத்தில் அவரின் முக்கிய உதவியாளரின் மின்னஞ்சல்களை வட கொரியா "ஹேக்கிங்" செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிபரின் உதவியாளர், தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை அலுவலக பணிக்கு பயன்படுத்திய போது அதை வட கொரியா ஹேக் செய்தது. இந்த ஹேக்கிங் மூலம், அதிபர் யூனின் பயண அட்டவணையையும், அதிபர் அனுப்பிய செய்திகளையும் வட கொரியா களவாடியுள்ளது.

ஆனால், ஹேக்கிங் மூலம் என்னென்ன தகவல்கள் களவு போனது எனும் விவரத்தை தென் கொரிய அரசு இதுவரை வெளியிடவில்லை.

தென் கொரிய அதிபரின் உதவியாளர் குழுவை சேர்ந்த ஒருவரின் மின்னஞ்சல் கணக்குகளை வட கொரியா ஹேக்கிங் செய்திருப்பது இதுதான் முதல்முறை.

வட கொரியா, தனது நாட்டின் ராணுவ மற்றும் அணு ஆயுத தேவைகளுக்கான பணத்திற்காகவும், தென் கொரியாவின் அரசாங்க ரகசியங்களை தெரிந்து கொள்ளவும், தென் கொரியா மீது நீண்ட காலமாக பல வழிமுறைகளை கையாண்டு சைபர் தாக்குதல் நடத்தி வருகிறது. அணு ஆயுத பரிசோதனைகளுக்கு தேவைப்படும் பணத்திற்கு, இணையவழியாக கிரிப்டோகரன்சிகளை திருடுவதை வட கொரியா பல முறை முயன்றுள்ளது.

தென் கொரிய அதிபர் இங்கிலாந்து செல்லும் முன்னரே ஹேக்கிங் குறித்து கண்டறியப்பட்டு, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக இது குறித்து தென் கொரியா தெரிவித்தது.
 

Leave a Reply