48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்... சுவிஸ் தூதரக அலுவலருக்கு வடகொரியா உத்தரவு
North Korea orders Swiss diplomatic office chief to leave within 48 hours: சுவிஸ் தூதரக தலைமை அலுவலர், வடகொரியாவிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
வடகொரியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான மோதல் போக்கு அதிகரித்துள்ளது.
இம்மாதம், அதாவது, நவம்பர் மாதம் 4ஆம் திகதி, வடகொரியாவிலுள்ள Wonsan நகரில் முகாம் ஒன்று நடத்தப்பட்டது.
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைன் பகுதிகளிலிருந்து சிறுபிள்ளைகளை வடகொரியாவுக்கு கொண்டுவந்து, அவர்களை ரஷ்யர்களாக்குவதற்கான முயற்சிகள் அந்த முகாமில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த முகாமை சுவிட்சர்லாந்து தனது தடைகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக அறிவித்தது.
அதனால் ஆத்திரமடைந்த வடகொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங், சுவிட்சர்லாந்து தடைகள் விதித்துள்ள விடயத்தைக் கடுமையாக கண்டித்திருந்தார்.
அத்துடன், வடகொரியாவில் திறக்கப்பட்ட சுவிஸ் தூதரக அலுவலகத்தை மூட வெளியுறவு அமைச்சகத்துக்கு ஆலோசனை கூற இருப்பதாகவும், தக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் மிரட்டியிருந்தார் கிம் யோ ஜாங்.
48 மணி நேரத்தில்...
இந்நிலையில், சுவிஸ் தூதரக தலைமை அலுவலர், வடகொரியாவிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
வடகொரிய அரசு ஊடகமான KCNA வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், வடகொரியாவில் உள்ள சுவிஸ் தூதரக அலுவலகத்தின் தலைவரை, விரும்பத்தகாத நபர் என அறிவித்துள்ள வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகம், அவர் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடகொரிய வெளியுறவு அமைச்சகத்தின் ஐரோப்பியத் துறையின் தலைமை இயக்குநரான பாக் ஹியோன் சூ, சுவிஸ் தூதரக அலுவலகத்தின் தலைவரான சில்வைன் ஆஸ்டியரை வரவழைத்து, சுவிஸ் தூதரக அலுவலகத்தை மூடுமாறு வலியுறுத்தும் வடகொரிய வெளியுறவு அமைச்சகத்தின் குறிப்பாணை ஒன்றை அவரிடம் வழங்கியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வடகொரியாவின் சர்வதேச குழந்தைகள் முகாமைத் தடைகள் பட்டியலில் சேர்த்த சுவிஸ் அதிகாரிகளின் பகிரங்கமான விரோதச் செயல் தொடர்பில், ஆஸ்டியரை வட கொரியாவை விட்டு வெளியேறுமாறு வடகொரிய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் KCNA தெரிவித்துள்ளது.





















