போயஸ் கார்டன் இல்லத்தில் ரசிகர்களை சந்தித்த நடிகர் தனுஷ்
சினிமா
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது 43-வது பிறந்தநாளையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதிகாலை முதலே திரண்டனர்.
தனது வீட்டின் முன் திரண்டிருந்த ரசிகர்களைச் சந்திக்க நடிகர் தனுஷ் நேரில் வெளியே வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் களிப்புடனும் உற்சாகக் கூச்சலுடனும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ரசிகர்களின் அன்பை ஏற்றுக் கொண்ட தனுஷ், கையசைத்துத் தனது நெகிழ்ச்சியான நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடிகர் தனுஷ் பிறந்த நாளையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் மன்ற விழாவில் தனது ரசிகர் மன்றத்திற்கு வெள்ளை - சிகப்பு நிறத்தின் நடுவில் நட்சத்திரம் குறிக்கப்பட்டு, அதன் நடுவே தனது உருவப்படம் இருப்பது போன்று கொடியினை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பேசிய தனுஷ், "நமக்கு இருக்கும் இந்த ஒற்றுமையையும் பலத்தையும் சமூகத்திற்குப் பயன்படும் வகையில் மாற்ற வேண்டும்;
உங்களைச் சுற்றியுள்ள மக்களின் சிரமங்களைப் புரிந்துகொண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களில் ஒருவராக இருங்கள்" என்று ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படியே தற்போது தனுஷ் ரசிகர்கள் நற்பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் விரைவில் மாவட்டம் வாரியாக சென்று ரசிகர்களை சந்தித்து, தனது மன்றங்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் மூலம் மக்களை சந்திப்பதற்கான திட்டத்தை வகுத்து வருகிறார் நடிகர் தனுஷ். எனவே 2031-ம் ஆண்டுக்குள் நடிகர் தனுஷ் அரசியல் கட்சி தொடங்குவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள தனுஷிற்கு, இந்த 43-வது பிறந்தநாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நடிப்பு, இயக்கம், தயாரிப்பு எனப் பன்முகத்தன்மையுடன் வலம் வரும் தனுஷிற்குத் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளைப் பொழிந்து வருகின்றனர்.






















