5 நிலக்கரி கப்பல்களும் தரமற்றவையாக காணப்படுகின்றன- சஜித் பிரேமதாச
இலங்கை
இதுவரை, சுமார் 5 நிலக்கரி கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன, அவை அனைத்திலும் தரமற்ற நிலக்கரிகளே காணப்பட்டுள்ளன. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து தலா 300 மெகாவாட் 3 என்ற அடிப்படையில் அதாவது 900 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்டமைந்து காணப்பட்ட போதிலும், இந்த தரமற்ற நிலக்கரி காரணமாக உரிய உற்பத்தித் திறனை எட்ட முடியாது போயுள்ளன. இது தொடர்பான நேரடி தரவுகள் கூட இருப்பதால், துறைசார் மேற்பார்வைக் குழுவில் நான் உரிய தரப்பிடம் கேள்வி எழுப்பியபோது, அவற்றுக்கு அவர்களால் பதில் வழங்க முடியாது போனது. முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வந்து, நாட்டிற்கு பக்க பலத்தைப் பெற்றுத் தருவோம் என கூறிக்கொண்டே அரசாங்கம் இவ்வாறு நடந்து வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெரலிஹெல கிராமத்தில் விவசாயிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் விஜயத்தின் போதே இன்று (14) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
பொய்களையும் ஏமாற்றுகளையும் அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் நடத்தாது என்றும், மக்களுக்கு நல்ல வாழ்க்கை வழங்குவதே தங்களின் நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார். தற்போதைய வருமான நிலை மக்களின் அடிப்படை தேவைகளுக்கே போதாமை நிலவுவதாகவும்இ பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் குடும்பங்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றன என்றும் அவர் கூறினார்.
அறுவடை காலம் நெருங்கி வரும் நிலையில், ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.120 என்ற விலை கிடைக்குமா என்ற அச்சம் விவசாயிகளிடையே நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் காலத்தில் நெல்லுக்கு உத்தரவாத விலை வழங்குவோம் என கூறியவர்கள் இன்று அதனை நிறைவேற்றவில்லை என அவர் குற்றம்சாட்டினார். அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்ய தேவையான களஞ்சிய வசதிகளையும் தயார் செய்யவில்லை என்றும்இ உற்பத்திச் செலவைக் கூட ஈடுகட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேபோல், இடைநிலை மற்றும் துணைப் பயிர்ச்செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கீரை வகைகள் உள்ளிட்ட பயிர்களுக்கு நிலையான விலை கிடைக்காததால் விவசாயிகள் இப்போது அவற்றையும் கைவிட்டு வருகின்றனர். விவசாயத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் — விதைத் தரம், உரத் தரம், உள்ளீட்டு செலவுகள், உற்பத்தி விலை — அனைத்திலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தரமற்ற உரம் இறக்குமதி செய்யப்பட்டதாலும், அறுவடை குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கான ஒழுங்குமுறை கண்காணிப்பு இல்லாததே பிரச்சினையின் மூல காரணம் என அவர் சுட்டிக்காட்டினார். நாட்டிற்கு ஸ்மார்ட் விவசாயக் கொள்கை அவசியம் என்றும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தித் திறனை உயர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூர் பயணத்தின் போது ரோபோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் ஒரு தொழிற்சாலையை பார்வையிட்டதாகவும்இ அங்கு ஸ்மார்ட் விவசாயம் நடைமுறையில் உள்ளதை நேரில் கண்டதாகவும் அவர் கூறினார். நவீன முறைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் தொழிலாளர்களின் உணவாக பயன்படுத்தப்படுவதை அவர் எடுத்துக்காட்டினார். இதுபோன்ற முன்னேற்றங்களை இலங்கையிலும் செயல்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும்இ மனித-யானை மோதலை தீர்க்க ரூ.500 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், நிலையான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். மனித வளம், வன வளம் மற்றும் விவசாயத்தை பாதுகாக்க ஒருங்கிணைந்த திட்டம் அவசியம் என அவர் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அவர் கூறினார். சமீபத்தில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, நாட்டில் பாதுகாப்பு நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அவர் தெரிவித்தார். இன்று நாட்டில் பொய் சொல்லும் சுதந்திரமே அதிகமாக காணப்படுகிறது என அவர் கடுமையாக விமர்சித்தார்.
மொத்தத்தில், தற்போதைய அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், பொய்கள் மற்றும் ஏமாற்றுகளின் மூலம் ஆட்சி நடத்தி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.






















