• Welcome to TamilsGuide
செய்திகள் 1

என்னுடன் விவாதிக்க தயாரா? - டிரம்பிற்கு சவால் விடும் நிக்கி ஹாலே

2024 வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.

குடியரசு கட்சியிலேயே டிரம்பிற்கு மாற்றாக தென் கரோலினா மாநில முன்னாள் கவர்னராகவும், ஐ.நா. சபையின் முன்னாள் அமெரிக்க தூதராகவும் பணிபுரிந்த நிக்கி ஹாலே (Nikki Haley) ஆதரவு கோரி பிரசாரம் செய்து வருகிறார்.

தற்போதைய நிலவரப்படி குடியரசு கட்சியில் டிரம்ப் முன்னிலை வகித்தாலும், நிக்கி போட்டியிலிருந்து பின்வாங்கவில்லை.

தென் கரோலினாவில் இருவரும் தங்கள் பிரசாரத்தில் ஒருவரையொருவர் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், தனது பிரசாரத்தில் டொனால்ட் டிரம்ப், நிக்கி ஹாலேவை விமர்சிக்கும் வகையில், "அவரது கணவருக்கு என்ன ஆனது? எங்கிருக்கிறார்? அவர் ஏன் நிக்கிக்கு ஆதரவாக பிரசாரத்திற்கு வரவில்லை?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து நிக்கி தெரிவித்திருப்பதாவது:

தென் கரோலினா பிரசாரத்தில் டிரம்ப் எனது கணவரின் ராணுவ சேவையை கேலி செய்தார். என் கணவருக்காக நான் பெருமைப்படுகிறேன். ராணுவத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் அந்த தியாகம் புரியும்.

டொனால்ட் டிரம்ப் அவர்களே, மைக்கேல் (என் கணவர்) நாட்டிற்கு சேவை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்படி என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியாது.

உங்களுக்கு என்னை பற்றி ஏதாவது கருத்து கூற வேண்டுமென்றால் என்னுடன் நேருக்கு நேராக விவாதத்திற்கு வாருங்கள். அங்கு என் முகத்திற்கு நேராக கேள்விகளை கேளுங்கள்.

போர்க்களத்தில் நாட்டிற்காக போராடுபவரை நீங்கள் கேலி செய்வீர்கள் என்றால் நீங்கள் – அமெரிக்க அதிபர் பதவிக்கு மட்டும் அல்ல - அமெரிக்க ஓட்டுனர் உரிமம் பெற கூட தகுதியற்றவர்.

இவ்வாறு நிக்கி கூறினார்.

Leave a Reply