• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியாவில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை

வவுனியா மாவட்டத்தில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள் உள்ளனர் எனவும் இவ்வருடம் 2 புதிய தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும்  வவுனியா பொது வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்புப்  பிரிவின் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி திருமதி அருள்மொழி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச எய்ட்ஸ் தினமான இன்று (01.) வவுனியா பொது வைத்தியசாலையில் பாலியல் நோய் தடுப்பு பிரிவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” ”சமூகத்தை வலுப்படுத்துவோம்- எய்ட்ஸ் தடுப்போம்” எனும் தொனிப்பொருளில் 35 ஆவது எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இலங்கை எச்.ஐ.வி நோய் பரவல் குறைந்த நாடாகவே கருதப்படுகின்றது. இங்குள்ள சனத்தொகை அடிப்படையில்  0.1 வீதத்துக்கு குறைவானவர்களே தொற்றுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.  இதில் 86 விதமான எச்.ஐ.வி தொற்று பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் ஏற்படுகின்றது. ஓரினச்சேர்க்கையாளர்கள் கூடிய அளவில் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்கள் குறிப்பாக 52 வீதமாக காணப்படுகின்றார்கள்.

வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரையில் 2002 ஆம் ஆண்டு முதல் 33 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் 19 ஆண்களும் 13 பெண்களும் அடங்குகின்றனர். இதில் 12 பேர் இறந்துள்ளார்கள். தற்போது வவுனியாவில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள் சிகிச்சை சுகதேகிகளாக உள்ளனர். இவர்களில் 12 ஆண்களும், 09 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவ்வருடம் 2 பேர் அடையாளங்கள் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இருவரும் ஆண்களாக காணப்படுகின்றனர்.

2030ல் எயிட்ஸ் முடிவுக்கு கொண்டுவரும் மகத்தான இலக்கை நோக்கிய முதலாவது படியாக எச்.ஐ.வி பரிசோதனை உள்ளது. இந்த பரிசோதனையை இலங்கையில் உள்ள அனைத்து எஸ்டிடி சிகிச்சை நிலையங்களிலும் இலவசமாக செய்ய முடியும். அதன் முடிவுகள் இரகசியமாகவும் பேணப்படும்” இவ்வாறு அருள்மொழி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply