• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவஜோதி ஞாபகார்த்த விருது

இலங்கை

பின்தங்கிய பிரதேசத்தில் முன்மாதிரியாகச் சிறந்த கல்விப் பணியாற்றியமைக் கௌரவிக்கும் முகமாக லிற்றில் எயிட் (Little Aid) திறன் விருத்தி மையம் கிளி/ விவேகாந்த வித்தியாலயத்தின் அதிபர் திருமதி ஜெயா மாணிக்கவாசகனுக்கு சிவஜோதி ஞாபகார்த்த விருதினை அளித்துள்ளது. 

ரூ.150000/= (ஒன்றரை லட்சம் ரூபாய்) பணமும் விருதுக் கேடயமும் நேற்று கிளிநொச்சியிலுள்ள லிற்றில் எயிட் திறன் விருத்தி மையத்தில் அவருக்கு வழங்கப்பட்டது. 

இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டதைப் பற்றி  லிற்றில் எயிட் திறன் விருத்தி மையம் தெரிவிக்கையில்- 

“பின்தங்கிய நிலையில் காணப்பட்ட  அம்பாள்குள கல்வி நிலையை முன்னோக்கி நகர்த்தியதிலும் அப்பாடசாலையை மையமாக கொண்டு அக்கிராமத்தின் கல்வி நிலையை வலுப்படுத்தியதிலும் திருமதி ஜெயலட்சுமி மாணிக்கவாசகன் காத்திரமான பங்களிப்பை ஆற்றியதால் கிளிநொச்சி மற்றும் தமிழர் கல்விச்சூழலில் நன்கு அறியப்பட்டவராக மாற்றமுற்றார். இந்த நிலையிலையே ஜெயலட்சுமி மாணிக்கவாசகன் அவர்களின் கல்விப்பணியை பாராட்டி சிவஜோதி ஞாபகார்த்த விருதின் அன்பளிப்பு தொகையான இந்த ஒருலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. வழமையாக ரூபா ஒரு லட்சம் இந்த விருது அன்பளிப்பு தொகையாக வழங்கப்பட்டாலும் கூட இந்த வருடம் மட்டும் ஜெயலட்சுமி மாணிக்கவாசகன் பணிபுரியும் பாடசாலையின் இணைய வசதியை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த தொகையை நாம் வழங்குகின்றோம்.“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

விருதினைப்  பெற்றுக் கொண்ட ஜெயா மாணிக்கவாசகன் குறிப்பிடுகையில் - 

“எந்த ஓர் கிராமத்தில்  மாணவர்கள் படிக்கிறார்கள் இல்லையோ – கல்வியில் பின்தங்கியுள்ளார்களோ அந்த பாடசாலையையே நான் தெரிவு செய்வேன். 2011ஆம் ஆண்டு விவேகானந்தா வித்தியாலயம் சின்னதான ஒரு கொட்டில் போட்டு திரு.முருகேசு சந்திரகுமார் அவர்களால்  ஆரம்பிக்கப்பட்டிருந்தது.  எனினும் சிலர் என்னைப்பார்த்து இந்த பாடசாலையை ஆரமப்பிப்பது தேவையற்ற விடயம் பயனில்லாததது என்றார்கள். அப்போது நாம் நம்பிக்கையுடன் நகர்ந்தோம். அதன் விளைவு நாம் பெறுபேறுகள் சார்ந்தும் சமூக மாற்றம் தொடர்பிலும் பல வெற்றிகளை பெற்றுள்ளோம். தேசிய அளவில் பல சாதனைகளையும் எமது பாடசாலை பதிவு செய்துள்ளதும் கவனிக்கத்தக்கது. GREEN AND CLEAN SCHOOL 2017 விருதினை இலங்கையின் 5 பாடசாலைகளே பெற்றிருந்தன. குறித்த விருது  சிங்கள பாடசாலைகள் நான்கிற்கும் ஒரே ஒரு தமிழ் பாடசாலைக்கும் வழங்கப்பட்டிருந்தது. அந்த தமிழ் பாடசாலை நமது பாடசாலையேயாகும். இப்படியாக பல துறைகளில் நமது பாடசாலை நிமிர்ந்துள்ளது. என்னுடைய சிறிய சமூக சேவையை மதித்து லிற்றில் எயிட் நிறுவனம் மற்றும் ஏற்பாட்டுக்குழுவினர் இந்த விருதினை வழங்கியமைக்காக நான் மனமகிழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார். 

லிற்றில் எயிட்ட மையத்துக்கு பாராட்டுகள். ஜெயா மாணிக்கவாசகனுக்கு வாழ்த்துகள்

பணிமுடிக்கும் வரையில் காத்திருக்காமல் பணியாற்றும்போதே வாழ்த்துவோம்.

Karunakaran Sivarasa

Leave a Reply