• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிப்ரவரி 11ல் பாராளுமன்ற பொதுத்தேர்தல் - தேர்தல் ஆணையம்

கடந்த 2022 ஏப்ரலில், பாகிஸ்தானில் அதுவரை நடைபெற்று வந்த பிரதமர் இம்ரான்கானின் ஆட்சி கூட்டணி கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் ஒரு இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்றது.

இவ்வருடம் ஆகஸ்ட் 10 அன்று அந்நாட்டின் பாராளுமன்றத்தை, அதன் காலம் முடிவடையும் 3 நாட்களுக்கு முன்பாகவே, பிரதமர் ஷாபாஸ் அளித்த பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி அரிஃப் ஆல்வி கலைத்தார்.

அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி அன்றிலிருந்து 90 நாட்களில் (நவம்பர் 7) பொதுத்தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், அந்நாட்டின் புதிய மக்கள்தொகை விகிதாசார தரவுகளுக்கு ஏற்ப புதிய பாராளுமன்ற எல்லைகளை நிர்ணயிக்கும் மறுசீரமைப்பில், தேர்தல் ஆணையம் தீவிரமாக இருந்ததால், தேர்தல் தள்ளி போடப்பட்டது.

இதனையடுத்து, பாராளுமன்றத்தின் 336 இடங்களுக்கு தேர்தலை விரைவாக நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் தங்கள் பதில் மனுவில், அந்நாட்டின் தேர்தல் ஆணைய வழக்கறிஞர், தேர்தல் தேதியை தெரிவித்தார். இதன்படி, வரும் 2024 பிப்ரவரி 11 அன்று அந்நாட்டில் பாராளுமன்றத்திற்கான பொதுதேர்தல் நடைபெறும்.

அந்நாட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்தும் தெஹ்ரிக்-ஏ-இன்ஸாஃப், முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நடத்தும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் பிலவல் பூட்டோ ஜர்தாரி நடத்தும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை தேர்தல் களத்தில் உள்ளன.
 

Leave a Reply