• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எஸ் பி முத்துராமன் எழுத்தில் தொடர்கிறது......

சினிமா

ஏவி.எம்.குமரன் சார் அவர்கள் சகலகலாவல்லவன், எங்கேயோ கேட்ட குரல் ஆகிய இரண்டு படங்களையும் பார்த்துவிட்டு, ‘‘டைரக்டர் கார்டை எடுத்துவிட்டு இரண்டு படங்களையும் போட்டுக் காட்டினால் நிச்சயம் இது ஒரே இயக்குநர் இயக்கிய படம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். இரண்டும் மாறுபட்டு இருக்கிறது. நீங்கள் இரண்டு படங்களை இரண்டு விதமாக எடுத்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள். இதுதான் உங்களுக்கான சாதனை’’ என்றார். அன்று ஏவி.எம்.குமரன் சார் சொன்ன வார்த்தைகள், ‘பத்ம’ விருதுகளுக்கு ஈடாக என் தாய்வீடான ஏவி.எம் தந்த விருதாகவே நினைக்கிறேன்.

இந்த வெற்றி எனக்கானது மட்டுமல்ல; என் ஒட்டுமொத்த குழுவுக்கும் சொந்தமான வெற்றி. குறிப்பாக இதில் பஞ்சு அருணாசலம் அவர்களுக்கு மிகுதியான பாராட்டுகள் போய்ச் சேர வேண்டும். இரண்டு வித்தியாசமான கதைகளையும் வெவ்வேறு கோணங்களில் அற்புதமாக உருவாக்கிய படைப்பாளி அவர் தான்.

என்னிடம், ‘‘கமலையும் ரஜினியையும் வைத்து பல படங்களை எப்படி இயக்கினீர்கள்?’’ என்று எல்லோரும் கேட்பார்கள். இன்றும் போகும் இடங்களில் எல்லாம் இந்தக் கேள்வி என்னைத் தொடர்கிறது.

ஒரு கதை தேர்வானதும், மாதத்தில் 10 நாட்களை ரஜினியிடமும், 10 நாட்களை கமலிடமும் கால்ஷீட்டாக வாங்கிக் கொள்வோம். 1-ம் தேதி முதல் 10 ம் தேதி வரை கமலிடம் வாங்கிக் கொண்டால், அடுத்து 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரைக்கும் ரஜினியிடம் கால்ஸீட் வாங்கிக் கொள்வோம். முதல் 10 நாட்கள் கமல் படப்பிடிப்பு முடிந்து ரஜினி படத்தின் ஷூட்டிங் வேலைகள் தொடங்கும்.

சில சமயம் படப்பிடிப்பில் ஒரு காட்சியை விளக்கும் போது ரஜினியை பார்த்து, ‘‘கமல் இப்படி வேண்டாம். அப்படி பண்ணுங்க?’’ என்று சொல்வேன். உடனே, ரஜினி ‘‘முத்துராமன் சார்… என்னதான் இருந்தாலும் உங்கக் குழந்தையைத் தானே நல்லா ஞாபகம் வெச்சிருக்கீங்க’’ என்பார் சிரித்துக்கொண்டே. ‘‘இல்லை ரஜினி… கமலோடு ஷூட்டிங்ல 10 நாட்கள் கூடவே இருந்ததால, அதே நினைவுல உன்னை கமல்னு கூப்பிட்டுட்டேன்’’ என்று சொல்வேன். அவர், அவரது ஸ்டைலில் சிரிப்பார்.

ரஜினி ஷூட்டிங் முடிந்து, அடுத்த 10 நாட்கள் கமல் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும். அப்போது கமலிடம், ‘‘இப்படி பண்ணினா நல்லா இருக்கும் ரஜினி’’ என்பேன். உடனே கமல், ‘‘பார்த்தீங்களா... வளர்த்த பிள்ளையை மறந்துட்டீங்க. வந்த பிள்ளையை ஞாபகம் வெச்சிருக்கீங்க!’’ என்பார். ‘‘இல்லை கமல். 10 நாட்கள் ரஜினியோடவே ஷூட்டிங்ல இருந்ததால அப்படிக் கூப்பிட்டேன். எனக்கு நீங்கள் இருவருமே இரண்டு கண்கள். உங்களை எப்படி மறப்பேன்” என்று அன்புடன் சொன்னதும், இருவருமே மகிழ்வார்கள்.

Solai Soles

Leave a Reply