• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழிலிருந்து சாய் முரளி வெளியேறினாலும் வடக்கு மக்களுடன் உருவாக்கிய உறவு தொடரும் - வடக்கு ஆளுநர் 

இலங்கை

யாழ்ப்பாணத்திலிருந்து சாய் முரளி வெளியேறினாலும், வடக்கு மாகாண மக்களுடன் அவர் உருவாக்கிய உறவும் நட்பும் தொடரும் என நம்புவதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரலாகப் பணியாற்றிய சாய் முரளியின் பிரிவுபசார நிகழ்வு நேற்றைய தினம் (23.11.2026) இரவு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக வடக்கு மாகாண மக்களுடன் நெருக்கமாகப் பணியாற்றிய ஒருவரை வழியனுப்புவது வெறுமனே உத்தியோகபூர்வ நிகழ்வாகத் தமக்குத் தெரியவில்லை எனக் குறிப்பிட்ட ஆளுநர், சாய் முரளி 2024 பெப்ரவரியில் கொன்சியூலர் ஜெனரலாகப் பொறுப்பேற்றதாகவும், அதே ஆண்டு செப்டெம்பர் மாத இறுதியில் தாம் வட மாகாண ஆளுநராகப் பொறுப்பேற்றதாகவும் நினைவுகூர்ந்தார்.

அதன் பின்னர் இருவருக்கும் இடையில் தொடர்ச்சியான நெருக்கமான தொடர்பும் கலந்துரையாடலும் இருந்ததாகத் தெரிவித்தார்.

உயர்ந்த பதவியில் இருந்தபோதிலும் எளிமையாக அனைவருடனும் பழகக்கூடியவராகவும், புன்னகையுடன் அனைவரையும் அணுகுபவராகவும் சாய் முரளி விளங்கியதாக ஆளுநர் பாராட்டினார்.

யாழ்ப்பாணச் சமூகத்துடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட நெருக்கமான உறவுகளே அவரது பணிக்காலத்தின் மிகப்பெரிய வெற்றியாகும் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு இராஜதந்திரத் தொடர்புகளுக்கு அப்பாற்பட்டது. குறிப்பாக, இந்தியாவுக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவு வரலாறு, மொழி, பண்பாடு மற்றும் உறவுமுறை எனப் பல பரிமாணங்களைக் கொண்ட தனித்துவமான பிணைப்பாகும்.

இந்த உறவை மக்களுடன் நேரடியாகப் பழகிப் பேணி வளர்ப்பதிலேயே கொன்சியூலர் ஜெனரலின் பணியின் உண்மையான பெறுமதி தங்கியுள்ளது. அந்த வகையில் சாய் முரளி சிறப்பாகச் செயற்பட்டுள்ளார் என ஆளுநர் தெரிவித்தார். கடந்த ஆண்டு டித்வா பேரிடர் ஏற்பட்டபோது முதலில் உதவிக்கரம் நீட்டிய நாடாக இந்தியா விளங்கியதையும் ஆளுநர் நினைவுகூர்ந்தார்.

ஒருங்கிணைப்புப் பணி முன்னெடுப்பு

இந்திய அரசாங்கத்தின் உதவிகளைப் பாதிக்கப்பட்ட மக்களிடம் உரிய நேரத்தில் கொண்டுசேர்ப்பதிலும், மாவட்ட மற்றும் மாகாண அதிகாரிகளுடன் இணைந்து ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னெடுப்பதிலும் சாய் முரளி முக்கிய பங்காற்றியதாகக் குறிப்பிட்டார்.

அதேபோன்று, வடக்கு மாகாணத்தின் பல்வேறு அபிவிருத்தித் தேவைகளுக்காக இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுப்பதிலும் அவர் அக்கறையுடன் செயற்பட்டுள்ளார். குறிப்பாக, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சுகாதார உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களின் ஒருங்கிணைப்பில் அவரது பங்களிப்பு நினைவுகூரத்தக்கது என்றார்.

சாய் முரளி தனது அடுத்தகட்டப் பணிக்காகப் புதுடில்லிக்குச் செல்லவுள்ள நிலையில், புதிய பொறுப்புகளிலும் மேலும் உயரங்களை அடைவார் எனத் தாம் நம்புவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், எதிர்காலத்திலும் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் தேவைகளுக்காக இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுப்பதில் அவரால் இயன்ற பங்களிப்பைத் தொடர்ந்தும் வழங்குவார் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

ஒருவர் தான் பணியாற்றிய இடத்தைவிட்டுச் செல்லும்போது, அவர் வகித்த பதவியைவிட அங்கு விட்டுச் செல்கின்ற உறவுகளே அவரது உண்மையான அடையாளமாக அமையும். அந்த வகையில் சாய் முரளி இங்கு உருவாக்கிய நட்பையும் நம்பிக்கையையும் வடக்கு மாகாண மக்கள் மதிப்பார்கள் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், அரச உயர் அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு சாய் முரளிக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
 

Leave a Reply