• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மின் கட்டமைப்புச் சரிவு: ஆரம்பகட்ட அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்

இலங்கை

ஒக்டோபர் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடையுடன் தொடர்புடைய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் (National System Operator – NSO), இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பித்துள்ளது. 

குறித்த அறிக்கையின்படி, சம்பவம் இடம்பெற்ற தினம் முற்பகல் 11.43 மணியளவில் நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி அலகில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட 187 மெகாவோட் மின்சாரம், வெறும் 450 மில்லி செக்கன்களுக்குள் தேசிய மின் கட்டமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மின் கட்டமைப்பின் அதிர்வெண் (Frequency) வேகமாக வீழ்ச்சியடைந்து 48.75 ஹேர்ட்ஸ் ஆகக் குறைந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து, சம்பவம் இடம்பெற்ற 4.1 செக்கன்களுக்குள் நாட்டின் முழுமையான மின் கட்டமைப்பும் சரிந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின் கட்டமைப்பின் அதிர்வெண் வீழ்ச்சியடையும் சந்தர்ப்பங்களில் அதன் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்காகச் செயற்படுத்தப்படும், அதிர்வெண் குறைவு அடிப்படையிலான மின்சுமை துண்டிப்பு பொறிமுறையின் (Under Frequency Load Shedding – UFLS) ஐந்து கட்டங்களும் குறித்த சம்பவத்தின்போது செயல்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, மொத்தமாக 449.2 மெகாவோட் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

மின்சாரத் தடை ஏற்படுவதற்கு முன்னர் தேசிய மின் கட்டமைப்பில் காணப்பட்ட 1,135 மெகாவோட் மொத்த மின் உற்பத்தியில் இது 39.6 சதவீதமாகும்.

எனினும், பாதுகாப்பு பொறிமுறைகள் அனைத்தும் செயல்படுத்தப்பட்ட போதிலும், தேசிய மின் கட்டமைப்பு முழுமையாகச் சரிவடைவதைத் தடுக்க முடியவில்லை என ஆரம்பகட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல மின் உற்பத்தி நிலையங்களின் அலகுகளும் செயலிழப்பு

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி அலகுகளுக்கு மேலதிகமாக, விக்டோரியா, கொத்மலை, ரந்தெனிகல, சமனலவெவ மற்றும் லக்சபான உள்ளிட்ட நீர்மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தி அலகுகளும் அவற்றின் பாதுகாப்பு கட்டமைப்புகள் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தானாகவே செயலிழந்துள்ளன.

மின் கட்டமைப்பு சரிவடைந்ததைத் தொடர்ந்து, தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் உடனடியாக மீளமைப்புப் பணிகளை ஆரம்பித்துள்ளார்.

இதற்கமைய, முழுமையான மின் பரிமாற்றக் கட்டமைப்பையும் வழமைக்குக் கொண்டுவருவதற்கு 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் எடுத்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீளமைப்புப் பணிகள் நான்கு பிரதான கட்டமைப்புகளின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மகாவலி கட்டமைப்பின் ஊடாக கொத்மலை மற்றும் விக்டோரியா மின் உற்பத்தி நிலையங்களும், லக்சபான கட்டமைப்பின் ஊடாக நியூ லக்சபான மற்றும் விமலசுரேந்திர நீர்மின் நிலையங்களும் மீளச் செயற்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோன்று, சமனலவெவ மற்றும் தெற்கு கட்டமைப்பின் ஊடாக சமனலவெவ மற்றும் குக்குலேகங்கை மின் உற்பத்தி நிலையங்களும், கொழும்பு கட்டமைப்பின் ஊடாக கெலனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையமும் பயன்படுத்தப்பட்டு மின் விநியோகம் மீளமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து பிரதான உப மின் நிலையங்களும் மாலை 4.58 மணியளவில் வெற்றிகரமாக மீளச் செயற்படுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீளமைப்பின்போது தொழில்நுட்பக் கோளாறுகள்

மின் கட்டமைப்பை மீளமைக்கும் நடவடிக்கைகளின்போது சில மின் உற்பத்தி அலகுகளில் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் செயற்பாட்டுத் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி அலகு ஒன்றை மீளச் செயற்படுத்தும்போது, அதன் துணைச் செயற்பாட்டு கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி அலகு திடீரெனத் துண்டிக்கப்பட்டதற்கான குறிப்பிட்ட அடிப்படைக் காரணம் இதுவரை ஆரம்பகட்ட அறிக்கையில் கண்டறியப்படவில்லை.

இது தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையைப் பின்னர் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளது. 

Leave a Reply