களுத்துறை இரட்டைக் கொ*லை - நபரொருவர் கைது
இலங்கை
களுத்துறை, நாகொட பகுதியில் உணவக உரிமையாளரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை குற்றப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர், கடுவல, ரணால பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2026 ஒக்டோபர் 9 ஆம் திகதி நாகொட பகுதியில் அமைந்துள்ள உணவகமொன்றுக்கு முன்னால் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்துசெய்திகள்
இதில் 54 வயதுடைய உணவக உரிமையாளர் உயிரிழந்ததுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவரது மனைவி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பிரதான துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் நபர் கடுவல பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, களுத்துறை குற்றப் பிரிவினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
மேலும், ‘திப்பிட்டிகொட சக்தி’ என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர் ஒருவரின் உறவினருக்குச் சொந்தமான வீட்டில் சந்தேகநபர் மறைந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 32 வயதுடைய பதுளை பகுதியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘களுத்துறை நவீன்’ என அழைக்கப்படும் நபர் ஒருவரின் உத்தரவின் பேரிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொலைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட T-56 ரக துப்பாக்கி மற்றொரு நபரால் துப்பாக்கிதாரிக்கு வழங்கப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டின் பின்னர், குறித்த துப்பாக்கி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகில் மற்றொரு நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





















