• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கோவாவில் புருஷன் படப்பிடிப்பில் விபத்து: நடிகர் விஷால் பலத்த காயம்

சினிமா

பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால், கோவாவில் நடைபெற்ற தனது புதிய திரைப்பட படப்பிடிப்பின் போது சண்டைக்காட்சியில் நடித்தபோது எதிர்பாராத விதமாக காயமடைந்துள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் 'புருஷன்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டைக்காட்சிகள் கோவாவில் தீவிரமாக படமாக்கப்பட்டு வந்தன. மிக முக்கியமான ஒரு சண்டைக்காட்சியில் டூப் எதுவும் இல்லாமல் சுயமாக நடித்தபோது, எதிர்பாராத விதமாக அவருக்கு முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தைத் தொடர்ந்து உடனடியாக அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், காயம் குணமடைய குறைந்தது 3 வாரங்கள் முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

மருத்துவர்களின் தீவிர ஓய்வு அறிவுறுத்தலைத் தொடர்ந்து, இன்று நடைபெறவிருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மிக முக்கியமான ஆண்டறிக்கை மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நேரில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் இதுவரை எண்ணற்ற ஆபத்தான சண்டைக்காட்சிகளில் நடித்திருந்தாலும், இந்தச் சம்பவம் எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்து என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "கடந்த வாரம் மிகவும் கடினமாக அமைந்தது. முதுகுக்காயம் காரணமாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மிக முக்கியமான பொதுக்குழு கூட்டத்தில் என்னால் நேரில் கலந்து கொள்ள முடியாமல் போனது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்தச் கூட்டம் எனக்கு மிகவும் முக்கியமானது. உடல்நிலை ஒத்துழைக்காததால் நேரில் வர முடியாவிட்டாலும், எனது எண்ணங்களும் சிந்தனைகளும் கூட்டத்தின் நடவடிக்கைகள் மற்றும் அதில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவருடனுமே இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். விஷால் விரைவில் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் இணைய வேண்டும் என்று அவரது ரசிகர்களும் திரை உலகினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
 

Leave a Reply