ஹார்முஸ் நம்பிக்கையால் எண்ணெய் விலை சரிந்தது
செவ்வாய்க்கிழமையன்று (04) மசகு எண்ணெய் விலைகள் கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கியமான ஹார்முஸ் நீரிணைப் பாதையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் ஏற்படக்கூடும் என்ற நம்பிக்கையை அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த சர்வு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, எண்ணெய் விலைகளுக்கான உலகளாவிய அளவுகோலாகத் திகழும் ‘பிரெண்ட்’ (Brent) மசகு எண்ணெயின் ஒரு பீப்பாயின் விலை சுமார் 5% சரிந்து, 80 டொலருக்கும் குறைவாகக் குறைந்தது.
பிரென்ட் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியுடன், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் விலையும் 5%க்கும் மேல் சரிந்து, ஒரு பீப்பாய் 76 டொலராக குறைந்தது. இரண்டு ஒப்பந்தங்களும் ஜூலை 13 ஆம் திகதிக்குப் பிறகு தங்களின் மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்தன.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் திறைசேரியின் அமைச்சர் ஸ்காட் பெசென்ட் ஆகிய இருவரும், ஹார்முஸ் நீரிணையூடான சரக்குக் கப்பல் போக்குவரத்தை இந்த வாரத்திலேயே மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பை உருவாக்கும் வகையிலான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டுள்ளதாக அறிவித்தனர்.
ஈரான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுடன், அந்த நீரிணை வழியாகக் மேலதிக கப்பல்களைச் செலுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரூபியோ கூறினார்.
அதேநேரம், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் செவ்வாய் அல்லது புதன்கிழமையன்றே எட்டப்படலாம் என்று பெசென்ட் கூறினார்.
அதேசமயம் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதலைத் தணிப்பதற்கான அண்மைக்கால பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், எண்ணெய் சந்தையில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.






















