கனடாவில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து - 4 பேர் பலி, 4 பேர் காயம்
கனடா
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் நிகழ்ந்த விபத்தொன்றில் குழந்தை உட்பட நான்கு பேர் பலியாகியுள்ளார்கள்.
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள கால்கரி நகரில் நிகழ்ந்த விபத்தொன்றில் குழந்தை உட்பட நான்கு பேர் பலியாகியுள்ளார்கள்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11.00 மணியளவில், கால்கரி நகரிலுள்ள Stoney Trail என அழைக்கப்படும் நெடுஞ்சாலையில், கார் ஒன்று தவறான திசையில் வேகமாக சென்றுள்ளது.
அதிவேகத்தில் சென்ற அந்தக் கார், எதிரே வந்துகொண்டிருந்த இரண்டு கார்களுடன் மோதியதில், இரண்டு கார்களில் தீப்பற்றியுள்ளது, ஒரு கார் கடும் சேதமடைந்துள்ளது.
துயரம் என்னவென்றால், தவறான திசையில் பயணித்து விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியான 30 வயது மதிக்கத்தக்க நபரும், அவரது காரிலிருந்த பெண்ணும், ஒரு குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள்.
அந்தக் கார் மோதிய மற்றொரு காரின் சாரதியான 43 வயது நபரும் பலியாகிவிட்டார்.
விபத்தில் சிக்கிய மூன்றாவது காரிலிருந்த 52 வயது பெண்ணும், அவருடன் பயணித்த மூன்று பிள்ளைகளும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
தவறான திசையில் பயணித்து விபத்தை ஏற்படுத்திய நபர் மது அருந்தியிருந்தாரா என்பது போன்ற விடயங்கள் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.






















