சூடானில் மக்கள் கூடும் சந்தை மீது தாக்குதல்.. குழந்தைகள் உட்பட 153 பேர் உயிரிழப்பு
சூடானில் இருந்து 2011 இல் பிரிந்து தெற்கு சூடான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. இரு தரப்புக்கும் இடையில் உரசல்கள் இருந்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு, சூடான் மற்றும் தெற்கு சூடானுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியான அபியே நகருக்கு வடக்கே உள்ள அமியட் சந்தையின் மீது டிரோன் தாக்குதல் நடந்துள்ளது.
சந்தைக்குள் பல இடங்களில் டிரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் சந்தைக்கு அருகில் இருந்த பெட்ரோல் நிலையத்தில் தீப்பற்றி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
உயரமான தீப்பிழம்புகள் எழத் தொடங்கி சந்தை முழுவதும் தீ பரவ தொடங்கியதால் சந்தையில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடியதில் மேலும் எல்லா இடங்களிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
தாக்குதல் மட்டும் கூட்டநெரிசலில் குறைந்தது 153 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.
காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். தீ இன்னும் எரிந்து கொண்டிருப்பதால், இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவ படையான ஆர்எஸ்எப் படையினருக்கும் இடையே ஏப்ரல் 2023 முதல் உள்நாட்டு போர் நடந்து வரும் சூழலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இந்த தாக்குதலை சூடான் ராணுவமே நடத்தியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு சூடான் வெளியுறவு அமைச்சகமும் சூடான் ராணுவமே தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளது.
இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் உயிரிழப்புகளும் பெரும் சொத்து சேதங்களும் ஏற்பட்டதாகவும் கூறியது.
உள்நாட்டு போரினால் சமீப மாதங்களில் அதிகரித்துள்ள டிரோன் தாக்குதல்கள், பொதுமக்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.





















