அமைதி பேச்சுவார்த்தை தோல்வியா? - ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான உறவு புதிய மோதல் கட்டத்தை எட்டியுள்ளது.
அமெரிக்கா முன்வைத்துள்ள அணுசக்தி கட்டுப்பாடு மற்றும் அமைதி ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் ஏற்காவிட்டால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் நிராகரித்ததைத் தொடர்ந்து, ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரானுக்கான நேரம் மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் விரைவில் முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில், அந்நாட்டில் எதுவும் மிஞ்சாது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஈரானில் மீதமுள்ள முக்கிய இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் கடுமையான தாக்குதல்களை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா முன்வைத்துள்ள நிபந்தனைகளில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சர்வதேச கண்காணிப்புக்குள் ஒப்படைத்தல், அணுசக்தி நிலையங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தல் மற்றும் போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோராமை உள்ளிட்ட விடயங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு பதிலளித்துள்ள ஈரான் நிர்வாகம், தங்களது இறையாண்மையை பாதிக்கும் எந்த நிபந்தனைகளையும் ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது.
அதேவேளை, அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் மற்றும் சர்வதேச வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளை மீள வழங்க வேண்டும் என கோரியுள்ளது.
இதனிடையே, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னெடுத்த மத்தியஸ்த முயற்சிகளின் மூலம் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டிருந்த போதிலும், தற்போதைய நிலைமை மீண்டும் மோதல் சூழலை நோக்கி நகர்ந்து வருவதாக சர்வதேச அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இந்த புதிய பதற்றம், மத்திய கிழக்கில் மேலும் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உலக நாடுகளும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.






















