ஈரான் பேச்சுவார்த்தை - முன்னேற்றம் இருந்தாலும் முடிவு நிலுவை - அமெரிக்க துணை ஜனாதிபதி
ஈரானுடன் சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்ட முடிவுகளை எடுக்க வேண்டியது ஈரானின் பொறுப்பு எனவும் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றத்தை குறைக்கும் நோக்கில், பாகிஸ்தான் நடுவர் முயற்சியுடன் நடைபெற்ற 21 மணி நேர பேச்சுவார்த்தை முழுமையான உடன்பாட்டை எட்டாத நிலையிலேயே நிறைவடைந்தது.
இது குறித்து அமெரிக்க ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “பேச்சுவார்த்தை முழுமையாக தோல்வியடைந்ததாக நான் கூறமாட்டேன்.
சில விடயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் எங்கள் கருத்துகளை கவனமாக கேட்கும் நிலைக்கு வந்துள்ளது,” என்று வான்ஸ் குறிப்பிட்டார்.
ஆனால், பேச்சுவார்த்தையை போதுமான அளவில் முன்னெடுக்க ஈரான் தவறியுள்ளதாகவும், குறிப்பாக யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகளை நிறுத்தியிருந்தால் நல்ல முடிவை எட்டியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பேச்சுவார்த்தையில் ஈரான் பிரதிநிதிகள் இறுதி முடிவுகளை எடுக்க இயலாத நிலையில் இருந்ததாகவும், அவர்கள் தங்கள் உச்சத் தலைமையிடமிருந்து அனுமதி பெற வேண்டியிருந்ததாகவும் கூறினார்.
ஈரான் அணு ஆயுதம் பெறக்கூடாது என்பதில் அமெரிக்காவின் நிலைப்பாடு உறுதியாக இருப்பதாகவும், அது உலகளாவிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்குத் தொடர்புடையதாகும் என்றும் வான்ஸ் வலியுறுத்தினார்.
அத்துடன், எரிசக்தி விலைகள் உயர்வால் அமெரிக்க மக்களுக்கு ஏற்படும் சுமையை குறைப்பதற்காக பேச்சுவார்த்தைகள் தொடரப்படுவதாகவும், இதற்கான முயற்சிகளில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.






















