• Welcome to TamilsGuide
செய்திகள் 1

செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு அனுப்பிவைக்கப்பட்ட இறுதி தகவல்...! 

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக அனுப்பிவைக்கப்பட்ட இன்ஜெனியூட்டி ஹெலிகொப்டர் தனது இறுதி தகவலை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2021ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நாசா, செவ்வாய் கிரகத்தினை ஆய்வு செய்வதற்காக பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பிவைக்கப்பட்டது, இந்த ரோவரானது செவ்வாய் கிரகத்தில் ஜெசெரோ க்ரேடர் என்கிற இடத்தில் தரையிறங்கியது.

அந்தப்பகுதியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஏரி இருந்திருக்கலாம் என கருதப்படுகிற நிலையில், அங்குள்ள பாறை மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெர்சவரன்ஸ் ரோவருடன் இன்ஜெனியூட்டி என்கிற சிறிய ஹெலிகொப்டரும் (டிரோன்) அனுப்பப்பட்டிருந்தது. ரோவர் பயணிக்கும் செவ்வாய் கிரகத்தின் நில அமைப்புகளை கண்காணிப்பதற்காகவே இந்த ஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டது.

அதன்படி குறித்த ஹெலிகொப்டரானது ரோவரின் செயற்பாடுகளையும் கண்காணித்து அவ்வப்போது தகவல்களை அனுப்பி வந்தது.

இந்த ஹெலிகொப்டர் முதன் முறையாக 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ம் திகதி செவ்வாய் கிரகத்தில் பறந்து தனது பணியை தொடங்கியது, அன்றிலிருந்து இதுவரை சுமார் 72 முறை இந்த ஹெலிகொப்டர் பறந்துள்ளது.

அதேசமயம் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் பல்வேறு இடங்களில் பாறைகளை துளையிட்டு துகள்களையும் சேகரித்துள்ளது.

இந்நிலையில், இன்ஜெனியூட்டி ஹெலிகொப்டர் தனது இறுதி தகவலை பூமிக்கு அனுப்பியிருக்கிறது. இனி செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஒரு அசைவற்ற நிலையில், தரவுகளை சேகரிக்கக்கூடிய அமைப்பாக இன்ஜெனியூட்டி செயற்படும் என்றும், எதிர்காலத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியாளர்களுக்கு பயனளிக்கும் தரவை சேகரிக்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

மேலும், பெர்செவரன்ஸ் ரோவரால் சேகரிக்கப்பட்ட செவ்வாய் கிரக பாறை மாதிரிகளை பூமிக்கு விரைவாகவும் குறைந்த செலவிலும் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வதாக நாசா கூறியிருக்கிறது.

பட்ஜெட் அதிகமாகிவிட்டதாக கடும் விமர்சனம் எழுந்த நிலையில், நாசா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   
 

Leave a Reply