• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பம்பாய் படத்தின் பாடல்கள் வெளியான சமயத்தில்..

சினிமா

'பம்பாய்' படத்தின் பாடல்கள் வெளியான சமயத்தில், இன்று போல் இணைய புழக்கம் இருந்திருக்குமேயானால் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட பெயராக 'ஹரிஹரன்' இருந்திருப்பார். அந்த அளவிற்கு 'உயிரே உயிரே' பாடலை பாடிய அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் யார் என்ற தேடல் இருந்தது. கேசட் ரேப்பர்களிலும், வானொலி அறிவிப்புகளிலும் அறிய நேர்ந்த பின் அரவிந்த்சாமியே பாடுவது போல குரலைக் கொண்டிருக்கும் இந்த ஹரிஹரன் நிச்சயம் அரவிந்த்சாமியைப் போன்றே இருபதுகளின் மையத்தில் இருக்கும் ஓர் அழகிய இளைஞனாகத்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் யோசனையை முடுக்கிய குரல்வளம் அது. 

ரோஜாவின் 'தமிழா தமிழா', 'அண்ணன் என்னடா தம்பி என்னடா' படத்தில் 'ஆச மேல ஆச வச்ச ' என ஹரிஹரன் ஏற்கனவே பாடியிருந்தாலும், இந்த 'உயிரே உயிரே' வில் இருந்தே அவரின் வெற்றிப்பயணம் தமிழில் தொடங்கியது. 

உயிரே உயிரேவில், ஹரிஹரனின் குரல் ஜாலங்களை ஒவ்வொரு சொல்லிலும் ரசிக்கலாம். கஸல் பாடகரான ஹரிஹரன் இந்தப் பாடலில் ஒவ்வொரு வரியின் முடிவிலும் குழைய விடும் அந்த கஸல் தொனி, அன்றைய நாளில் புதிய விஷயமாவும், அந்தக் குரலின் மீது கிறுக்குப் பிடிக்க வைக்கும் இயல்பிலும் இருந்தது. இரண்டாவது சரணத்தில் சித்ரா நுழைந்து தன் பகுதியை முடித்த பின் வருகிற பல்லவியில்,  'உயிரே... உய்யிரே' என அதுவரைக்கும் பாடியே உயிரேவில் இருந்து மாறுபட்ட மாடுலேஷனில்  'என் சகலமும் நீதானடி' என்கிற பாவத்தோடு ஹரிஹரன் பாடுகிற ஓரிடம் போதும் ஹரிஹரனின் மொத்தத் திறனையும் விளக்க. அதுவும் நெஞ்சாக் கூட்டிலிருந்து கதறிக்கொண்டு வெளிவரும் அந்த இரண்டாவது 'உயிரே'வின் உச்சரிப்பை கேட்கிற போதெல்லாம் ,உணர்வு நிலையின் உச்சத்தில் நட்டுக்கொள்ளும் ரோமங்கள். இதே படத்தின் 'குச்சி குச்சி ராக்கம்மா' பாடலிலும் அவரின் குரலும், பாடும் முறையும் அன்றைய இளைஞர்களை பெரிதாக கவர்ந்தது. 

தொடர்ந்து வந்த 'இந்திரா' படத்திலும், ரஹ்மானின் இசையில் 'நிலா காய்கிறது' என்று அரவிந்த்சாமியின் குரலாகவே ஹரிஹரன் களம் இறங்கினார். அதன் பிறகு தேவாவின் இசையில் 'ஆசை' படத்தில் 'கொஞ்ச நாள் பொறு தலைவா' என்று அவர் பாடிய போது, அஜித்திற்கு அரவிந்த்சாமி பாடுவது போலவே ஒரு தோற்றம் இருந்தது. அந்த அளவிற்கு ஹரிஹரன் குரல் அரவிந்த்சாமியின் மேனரிஸங்களோடு பின்னி பிணைந்திருந்தது.

ஹரிஹரன் குரலுக்கென்று பெரிய ரசிகர் பரப்பு உருவாக தொடங்கிய அதே நேரத்தில், அன்றைய முன்னணி இசையமைப்பாளர்களும் ஹரிஹரனின் ரசிகர்களாக மாறிவிட்டது போல, தி பெஸ்ட் ட்யூன்கள் அனைத்தையும் ஹரிஹரனுக்கே வாரி வழங்க ஆரம்பித்தார்கள். அல்லது ஹரிஹரன் பாடினாலே அந்த ட்யூன்கள் அழகாக தெரிந்தன என்றுகூட சொல்லலாம். அந்த அளவிற்கு, சுமாரான மெட்டுக்களையும் சூப்பர் ஹிட்டாக்கும் வல்லமை ஹரிஹரனின் குரலுக்கு இருந்தது. 

வித்யாசாகரின் இசையில் 'உடையாத வெண்ணிலா' , 'ஒரு தேதி பாத்தா தென்றல் வீசும்', தேவாவின் இசையில் 'எங்கெங்கே எங்கெங்கே', இந்துமஹா சமுத்திரமே' , 'முதன் முதலில் பார்த்தேன்' , சிற்பியின் இசையில் 'ஆல்ப்ஸ் மலை காற்று வந்து', 'நீ இல்லை நிழல் இல்லை', எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் 'ஓ வந்தது பெண்ணா' , 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ', 'ஏதோ ஒரு பாட்டு' , பாலபாரதியின் இசையில் 'நீ பேசும் பூவா பூவனமா' , கார்த்திக் ராஜாவிற்கு 'கொஞ்சும் மஞ்சள் பூக்கள்' , யுவனின் இசையில் 'ஆல் தி பெஸ்ட்' என தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஏகப்பட்ட மெலடிகளை பாடி குவித்தார். இவற்றில் உச்சமாக ரஹ்மானின் இசையில் இவர் பாடிய 'வெண்ணிலவே வெண்ணிலவே' அமைந்தது.

1994ல் இருந்து அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் பாடிக் கொண்டிருந்தாலும், இளையராஜா மட்டும் சற்று நிதானமாகவே 1997 ல் வெளியான 'காதலுக்கு மரியாதை' படத்தின் 'என்னைத் தாலாட்ட வருவாளோ' பாடலுக்குத்தான் ஹரிஹரனை அழைத்தார், அதன் பிறகு பல பாடல்களை ராஜாவிற்கு ஹரிஹரன் தொடர்ச்சியாக பாடினார்.  குறிப்பாக ராஜா- ஹரிஹரன் காம்பினேஷனில் 'காசி' ஒரு மாஸ்டர் பீஸ் ஆல்பம். குறிப்பாக 'ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்' அன்றைய பாடலில் ஹரிஹரன் குரல் பெரிதாக வசியம் செய்யும் வகையில் இருந்தது.

1995 ல் இருந்து 2000த்தின் தொடக்க காலம் வரை தமிழ்த் திரையிசையில் ஹரிஹரன் குரல் சினிமா வியாபாரத்தில் ஓர் தவிர்க்க முடியாத அங்கமாக இருந்தது என்றால் மிகையில்லை. அதே போல ஹரிஹரன் ஹிட்ஸ் என்று அவர் பாடிய அனைத்து பாடல்களின் தொகுப்புகளை பதிவு செய்து காசு பார்ப்பதில் தீவிரமாக இருந்தன லோக்கல் பாடல் பதிவுக் கூடங்கள்.  தமிழ்த் திரையிசையில் ஒரு பாடகரின் குரலுக்கென்று வியாபாரச் சூழல் அமைந்தது எனக்கு தெரிந்து ஹரிஹரன் ஒருவருக்காக மட்டுமாகத்தான் இருக்கும்.

©நாடோடி இலக்கியன்
 

Leave a Reply