• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் - 15 நாளாகவும் தொடரும் போராட்டம்

இலங்கை

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீது தொடர்ச்சியான நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக, முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று (02) 15 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இதன்போது, பிரதேச செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயல்பட்டு வந்த குறித்த பிரதேச செயலகம், 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டதையடுத்து, 1993 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் அவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

அதன்பின்னர், ஒருசில அரசியல்வாதிகள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சுட்டிக்காட்டினர்.

திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிர்வாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது எனவும், அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை வழங்கும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

Leave a Reply