• Welcome to TamilsGuide
செய்திகள் 1

49 சுற்றுலாத் தலங்களை இனங்கண்டுள்ளோம் -டயனா கமகே

இலங்கை

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக மேலும் 49 சுற்றுலாத் தலங்கள் இனங்கண்டுள்ளதாகவும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவற்றை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  நாட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு நடக்கும் தொல்லைகள் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

நான் இது குறித்து குரல் எழுப்பி வருகின்றேன். சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்தல், சுற்றுலாத் தலங்களுக்கு செல்லக் கூடிய ரயில் டிக்கெட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் குறிப்பாக இலங்கை தொடர்பாக பிரபல்யப்படுத்தி பிரச்சார வீடியோக்களை ஒளிபரப்பி வருகின்ற ஒரு சுற்றுலாப் பயணியை பாலியல் வன்புணர்வுக்கு  உட்படுத்தியமை போன்ற பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இவ்வாறு ஒரு சிலரால் நமது நாட்டின் நற்பெயருக்கு பங்கம் ஏற்பட வழிவிடக்கூடாது. அதிக விலைக்கு ரயில் டிக்கெட் விற்பனை செய்தல் தொடர்பாக குறிப்பிடுவதாயின் அவை பெரும்பாலும் ஊழல் மிக்க அதிகாரிகளின் ஆதரவுடனேயே இடம்பெறுகின்றன.

இவற்றைத் தடுப்பதற்காகவே ஒன்லைன் முறையில் டிக்கெட் கொள்வனவு செய்வதை முறைமைப்படுத்தி வருகின்றோம்.
இம்முறையை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதன் மூலம் இவ்வாறான ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்த முடியும்.

அதேபோன்று, சட்டவிரோத மது விற்பனையால் எமது நாட்டுக்கு கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான வரி வருமானம் இழக்கப்படுகின்றது. இவ்வாறான மோசடிகளைத் தடுக்கவும் கண்காணிக்கவும் தனியான குழுவென்றை நியமிக்க நான் பரிந்தரைத்துள்ளேன்.

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக மேலும் 49 சுற்றுலாத் தலங்களை இனங்கண்டுள்ளோம். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவற்றை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில் வெளியிடவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதன் ஊடாக எமது நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம்.

இந்நாட்டில் இயங்கும் ளுPயு மையங்கள் தொடர்பாக அண்மைக் காலங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இவை உண்மையில் ஏனைய நாடுகளில் ஆரோக்கிய மையங்களாகவே இயங்குகின்றன. மக்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவையாக அவை இருக்க வேண்டும்.

எனவே இந்நாட்டு மக்களின் சுகாதாரம், ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்தி அவற்றை முறைப்படுத்தி கண்காணிப்பு பொறிமுறைகளை உருவாக்க சுகாதார அமைச்சுடன் நாம் கலந்துரையாடி வருகின்றோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply