• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிரியாவில் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் - பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போரில் ஹமாசுக்கு லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் ஆதரவாக உள்ளது. இந்த இயக்கத்துக்கு ஈரான் தனது ஆதரவை அளித்து வருகிறது.

இதையடுத்து, சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரக கட்டிடம் மீது குண்டு வீசப்பட்டது.இதில் அக்கடடிடம் பலத்த சேதம் அடைந்தது. இந்த தாக்குதலில் ஈரான் புரட்சிகர படையின் 2 ராணுவ தளபதிகள், வீரர்கள், பொதுமக்கள் உள்பட 13 பேர் பலியானார்கள். இதில் ஈரான் ராணுவ வீரர்களும் அடங்குவர். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியது.

இதுகுறித்து ஈரான் தூதர் ஹொசைன் அக்பரி கூறுகையில், இஸ்ரேலின் எப்-35 போர் விமானங்கள் மூலம் ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் ஈரான் தூதரக ஊழியர்கள், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என தெரிவித்தார்.

ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி ஹொசைன் அமீர் அப்துல்லா ஹியன் கூறும்போது, சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலை ஆதரிப்பதால் அமெரிக்காதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
 

Leave a Reply