• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆரிடம் ஒரு பழக்கம் உண்டு. 

சினிமா

எம்.ஜி.ஆரிடம் ஒரு பழக்கம் உண்டு. சினிமாவை பொறுத்தவரை தனக்கு தேவையானவற்றை சம்பந்தப்பட்டவரிடம் கேட்டு வாங்கிவிடுவார். அது பாடலாக இருந்தாலும் சரி… பாடல் வரிகளாக இருந்தாலும் சரி.. அவருக்கு திருப்தி ஏற்படும்வரை விடமாட்டார். ஒரு பாடலுக்கு பல மாதங்கள் ஆன கதையெல்லாம் எம்.ஜி.ஆர் படங்களில் நடந்திருக்கிறது.

எம்.ஜி.ஆர் படத்தில் இடம் பெற்ற் ஒரு பாட்டுக்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் 30 மெட்டுக்கள் போட்டும் எம்.ஜி.ஆர் எல்லாவற்றையும் பிடிக்கவில்லை என்று சொன்ன சம்பவமெல்லாம் நடந்திருக்கிறது. சில சமயம் 10 டியூன்களில் மூன்றை தேர்ந்தெடுத்து பல்லவி சரணங்களை மாற்றிப்போட்டு அது ஒரு பாடலாக உருவாகும்.

எம்.ஜி.ஆர் சினிமாவில் ஹீரோவாக நடிக்க துவங்கிய காலத்தில் கவிஞர் கண்ணதாசனுடன் பயணித்தார். எம்.ஜி.ஆரின் படங்களில் கதை, வசனம் எழுதினார் கண்ணதாசன். அதோடு, எம்.ஜி.ஆர் நடித்த பல படங்களில் அவருக்கு காதல் மற்றும் தத்துவ பாடல்களை எழுதினார்.

ஆனால், அரசியல் காரணங்களாக இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. அதனால், தனது படங்களில் வாலியை பாடல்கள் எழுத வைத்தார் எம்.ஜி.ஆர். சில சமயம் வாலிக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே கூட சின்ன சின்ன உரசல்கள் ஏற்படுவதுண்டு. வாலியின் பாடல் வரிகளில் எம்.ஜி.ஆர் சில திருத்தங்களை செய்ய சொல்வார். ஆனால், வாலியோ அதில் தவறு ஒன்றும் இல்லை. நான் எழுதியிருப்பது நல்ல வரிகள்தான் என வாக்குவாதம் செய்வார். இது அடிக்கடி நடக்கும். சில நாட்கள் கழித்து இருவரும் சமாதானம் அடைந்து மீண்டும் சேர்ந்துவிடுவார்கள். இருவரும் அண்ணன் – தம்பி போலவே பழகினார்கள். 

நடிகர் அசோகன் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த படம் நேற்று இன்று நாளை. இந்த படத்திற்கு ஒரு பாடலை கண்ணதாசன் எழுதி இருந்தார். ஆனால், அந்த பாடல் வரிகளில் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை. எனவே, பல நாட்களாக பேசாமல் இருந்த வாலியை வீட்டிற்கு அழைத்து பாடலுக்கான சூழ்நிலையை சொல்லி அனுப்பிவிட்டார்.

மூன்று நாளில் பாடல் வரிகளுடன் வந்தார் வாலி. அதுதான் ‘தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று’ பாடல். பாடல் வரிகள் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப்போனது. எனவே, படத்தில் அந்த பாடலை பாடுவதற்கு முன் ‘இந்த பாடலை எழுதியவர் வாலி’ என சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர் பாடுவார். வாலிக்கு எம்.ஜி.ஆர் செய்த மிகப்பெரிய மரியாதை அது.

எம்.ஜி.ஆர் தனியாக அரசியல் கட்சியை துவங்கியிருந்த நேரம் அது. இந்த பாடல் அவரின் ரசிகர்களுக்கும், அரசியல் தொண்டர்களுக்கும் எழுச்சியை ஏற்படுத்திய பாடலாக அமைந்தது.

Leave a Reply