• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வைரம் நாடக சபாவில் மனோரமாவை ஒரு நடிகர் துரத்தி துரத்திக் காதலித்தார் 

சினிமா

விரட்டி விரட்டி அடித்தார் மனோரமா. அவர் விடவே இல்லை. அம்மா ராமாமிர்தம் எச்சரித்தார். அவன் நல்லவனில்லை. உன் நிம்மதி போய்விடும். வளரும் வயதில் காதல், திருமணம் வேண்டாம் என்று கெஞ்சிப் பார்த்தார். காதல் போதை கட்டுப்பாட்டை மீறி இருந்தது.

1954-ல் திருச்செந்தூரில் அந்த நடிகருக்கும் மனோரமாவுக்கும் திருமணம் -எளிமையாக அம்மாவுக்குத் தெரியாமல் நடந்தது. அதன் பிறகு அம்மாவுடன் பேச்சுவார்த்தை இல்லை. ‘வாழ்விலும் தாழ்விலும் உன்னை விட்டுப் பிரியேன்’ என்று சத்தியம் செய்து, கபடநாடகம் ஆடியவனின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட ஆரம்பித்தது.

திருமணமாகி 2 மாதங்களில் கருவுற்று விரைவில் கருச்சிதைவும் ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்டு கொட்டாம்பட்டி மருத்துவமனையில் மனைவியைச் சேர்த்த கணவன், மயக்கம் தெளிந்து பார்த்தபோது காணவில்லை. அம்மா மட்டும் எதிரில் காவல் தெய்வமாக நின்று கொண்டிருந்தார்.

வேறு ஊரில் நாடகம் போட கணவன் போய்விட்டார். மீண்டும் சமரசமாகித் தொடர்ந்து நாடகங்களில் அவரோடு நடித்தார். மீண்டும் சில மாதங்களில் வயிற்றில் அடுத்த குழந்தை. 9 மாதம் குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டே ஓய்வில்லாமல் நாடகங்கள். உடம்புக்கு முடியவில்லை என்றாலும் வற்புறுத்தி நடிக்கச் சொல்வார். வருமானம் குறையக் 

கூடாது அவருக்கு. 6 மாதமாக நாடகங்களில் நடித்ததற்கு காசு வரவில்லை. ‘நான் பார்த்துக் கொள்கிறேன், கவலைப்படாதே!’ என்றார். பிரசவத்திற்கு பள்ளத்தூர் தாய் வீடு வந்துவிட்டார். 9-வது மாதம் ஆஸ்பத்திரியில் ‘பிரசவத்திற்குப் பணம் வேண்டும்!’ என்று கேட்டால், ‘நான் வரும்போது கொண்டு வருகிறேன்’ என்றார் கணவன் வரவில்லை. பிரசவம் ஒரு கொடுமை. பணமில்லாத அவதி இன்னும் கொடுமை.

குழந்தை பிறந்தபோதும் ஆசையோடு மனைவி, குழந்தையைப் பார்க்க வரவில்லை. 15 நாள் கழித்து வந்தார். பணம் எதுவும் கொண்டு வரவில்லை. மனைவியைக் கொஞ்சவில்லை- மகனை அள்ளி எடுத்து முத்தம் கொடுக்கவில்லை. ‘சீக்கிரம் ரெடியாயிரு. நாடகங்கள் நடத்த தேதி கொடுத்துவிட்டேன்!’ என்றார். மனோரமா மூலம் பணம் சம்பாதிப்பது ஒன்றே அவரது நோக்கம்.

அம்மாவால் தாங்க முடியவில்லை. ‘பச்சை உடம்பு. ஒரு மாதம் கூட ஆகவில்லை. இந்த நிலைமையில் ஊர் ஊராக நாடகம் நடிக்க உடம்பு தாங்குமா? என்னய்யா மனுஷன் நீங்க?’ பொங்கிவிட்டார்.

இப்போது மனோரமா -தீர்மானமாக ‘இப்ப நான் வரமுடியாது’ என்றார்- முறுக்கிக் கொண்டு போய்விட்டார் கணவர்.

பின்னர் சென்னையில் குடியேறினார்கள். நாடகங்களிலும், சினிமாவிலும் வாய்ப்புகள் வந்தன. திடீரென்று கணவரிடமிருந்து விவாகரத்து கடிதம்? 1956-ல் விவகாரத்து - அவரது 19 வயதில் கணவனைப் பிரிந்தாயிற்று.

ஏன் விவகாரத்து? பிறந்த மகன் பூபதி ஜாதகத்தை ஜோதிடரிடம் கொடுத்திருக்கிறார் கணவன். தகப்பனை விழுங்கி அம்மாவை உயர்த்தும் ஜாதகம் என்றார் ஜோதிடர். அதாவது நாம் செத்துப் போவோம்! அதிர்ந்தார். விவகாரத்து வாங்கி உயிர் பிழைக்க ஓடிவிட்டார்.

சக நடிகரின் தங்கையை இரண்டாந்தாரமாக மணந்தார். 24 ஆண்டுகள் ஓடின. வேண்டா வெறுப்பாக வாழ்ந்த வாழ்க்கையில் மனோரமா மூலம் ஒரு ஆண் வாரிசு பிறந்தது. உருகி உருகி காதலித்து, கட்டிப்பிடித்து, வாழ்ந்தும் இரண்டாவது மனைவிக்குக் குழந்தை பிறக்கவில்லை.

இறைவன் ஒருவனை எப்படி தண்டிக்கிறான் பாருங்கள். 1990- டிசம்பர் 18-ம் தேதி மாஜி கணவர் இறந்த செய்தி மனோரமாவுக்கு தெரிவிக்கப்படுகிறது. துக்கம் விசாரிக்க மனோரமா வீட்டுக்குப் போனேன். ‘கணவன் இறந்ததற்கு அழுவதா? அறியாத வயதில் தன்னை ஏமாற்றி ஒரு குழந்தை கொடுத்து விட்டு, தலைமுழுகி விட்டுப் போனவனை நினைத்து சந்தோஷப்படுவதா தெரியவில்லை!’ என்றார்.

பூபதியை, தகப்பனாருக்கு கொள்ளி போட அனுப்பச் சொன்னேன். ‘பூபதியோ அவர் யாரென்றே எனக்குத் தெரியாதே!’ என்றான். ‘அவர்தான் உன் தகப்பன் என்று நான் சொல்கிறேன். தகப்பனுக்கு கொள்ளி போடுவது புண்ணியம் வா!’ என்று அழைத்துப் போய் இறுதி மரியாதை செய்து வந்தார்.

‘‘சிவா! யுத்தம் முடிந்துவிட்டது. இனி நான் எதற்கு இருக்க வேண்டும்? என் வாழ்க்கை எப்படிப் போனால் என்ன என்று, ஈவிரக்கமில்லாமல் என்னை உதறிவிட்டுப் போனவன் முன்னால் வாளெடுத்து சுழற்றி இத்தனை காலம் போராடி, நான் யார் என்று நிரூபிக்க உடல், பொருள், ஆவியை எல்லாம் செலவழித்தேன். எதிராளி வீழ்ந்துவிட்டான். வெறுங்கத்தியைச் சுழற்றிக் கொண்டு எப்படி வாழ்வது? போதும். போய் விடுகிறேன்!’’ என்றார்.

‘ராமாமிர்தம் அம்மா, இந்த மனிதனை நம்பி உங்களைப் பெற்றெடுக்கவில்லை. கலையுலகில் இமயத்தின் உச்சியைத் தொடப் பிறந்தவர் நீங்கள். இன்னும் கடமை பாக்கி இருக்கிறது தொடருங்கள்!’ என்றேன்.

பூபதியை டாக்டராக்க எவ்வளவோ முயற்சிகள் எடுத்தார். அது நிறைவேறவில்லை. பூபதியின் மகன் ராஜ ராஜனை டாக்டராக்கிவிட்டார். இரண்டு பேத்திகளும் இப்போது திருமணமாகி நன்றாக வாழ்கிறார்கள். 

நடிகர் சிவக்குமார்!

Leave a Reply