• Welcome to TamilsGuide
செய்திகள் 1

5 மொழிகளில் திரையிடப்பட்ட தில்லானா மோகனாம்பாள் உருவான கதை ...

சினிமா

தமிழ் சினிமாவின் பெருமிதங்களில் ஒன்று, நடிகர் திலகத்தின் கலை ஆளுமையை வெளிப்படுத்திய திரைப்படம், நாட்டிய பேரரசி பத்மினியின் ஆகச்சிறந்த திரைக்காவியம் என இதற்கு பல முக்கியத்துவங்கள் உண்டு.

தில்லானா மோகனாம்பாள் உருவாக பிரதான காரணமாக இருந்தவர்  எழுத்தாளரும், நடிகருமான கொத்தமங்கலம் சுப்பு. அப்போது மக்களுக்கான பொழுதுப்போக்கு என்றால் நாடகமும், சினிமாவும்தான். அதற்கு இணையாக பத்திரிகைகளில் வெளிவரும் தொடர்கதைகளை மக்கள் ஆர்வமாக வாசித்தார்கள். கல்கி, ஆனந்த விகடனில் அந்தக் காலத்தில் தொடர்கதைகள் எழுதியவர்கள் சூப்பர் ஸ்டார் அளவிற்கு மதிக்கப்பட்டார்கள். அகிலனின் தொடர்கதையில் மக்கள் மயங்கிப் போனதைக் கண்டு அந்தக் கதைகளை திரைப்படமாக்கியது தனிக்கதை.

கொத்தமங்கலம் சுப்பு 1957 - 58 இல் ஆனந்த விகடனில் தில்லானா மோகனாம்பாள் கதையை எழுதினார். வாராவாராம் வரும் தொடர்கதை. இசையும், நடனமும் செழித்திருந்த காவிரிக்கரையோர தஞ்சாவூர்தான் கதைக்களம். எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நாவல்களிலும் கர்னாடக சங்கீதமும், சங்கீதக்காரர்களும் நிறைந்திருப்பார்கள். கதைக்களம் இதே தஞ்சாவூர், கும்பகோணம். தாசி முறையையும் சில கதைகள் தொட்டுச் செல்லும். குறிப்பாக மோகமுள். அதில் நாயகியின் அம்மா இன்னொருவரின் தாலி கட்டாத மனைவி.

கொத்தங்கலம் சுப்புவின் கதையில் நாயகன் நாதஸ்வர சக்கரவர்த்தி ‘சிக்கல்’ சண்முகசுந்தரமும், நாயகி மோகனாம்பாளும் வாசகர்களுக்குப் பிடித்துப்போக தொடர் ஹிட்டானது. அதனை படமாக்க ஆனந்த விகடன் நிறுவனரும் ஜெமினி ஸ்டுயோஸ் அதிபருமான எஸ்எஸ் வாசன் விரும்பினார். அதனால், ஏ.பி.நாகராஜன் கதை உரிமை கேட்டு வந்த போது அவர் தரவில்லை.

சில காரணங்களால் தில்லானா மோகனாம்பாளை வாசனும் திரைப்படமாக்கவில்லை. ஏ.பி.நாகராஜன் மறுபடியும் முயற்சி செய்ய, கடைசியில் வாசன் தனது விருப்பத்தை ரத்து செய்து, கதை உரிமையை ஏ.பி.நாகராஜனுக்கு தந்தார். கதைக்காக 25,000 ரூபாய் கைமாறியது. இன்றைய மதிப்பில் பல லட்சம் ரூபாய். கதை உரிமை வாசனிடம் இருந்ததால் அவருக்கு பணம் தந்து முறைப்படி உரிமையை ஏ.பி.நாகராஜன் வாங்கிக் கொண்டார். அதுவே போதும். பொதுவாக அப்படித்தான் செய்வார்கள். ஆனால், அன்று மனிதர்களுக்கு சட்டத்தை மீறி மனசாட்சி என்று ஒன்றும் இருந்தது.

கதை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவை சந்தித்து பத்தாயிரம் ரூபாய் தந்தார் ஏ.பி.நாகராஜன். ஆனால், அவர் அதனை வாங்கவில்லை. நீங்க வாசனுக்குக் கொடுத்த பணத்தை அவர் அப்படியே எனக்குத் தந்திட்டார், அதனால, இந்தப் பணம் தேவையில்லை என்றிருக்கிறார். இன்று மீடியேட்டர்கள் மொத்த பணத்தையும் விழுங்கி கலைஞர்களுக்கு கால் காசு அரைக்காசு என தருகிறார்கள்.

ஏ.பி.நாகராஜன் தில்லானா மோகனாம்பாள் கதையை அதே பெயரில் படமாக்கினார். அவரது ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் படத்தைத் தயாரித்தது. சிவாஜி, பத்மினிக்கு அடுத்து தவில் வித்வான் முத்துராக்காக பாலையா பட்டையை கிளப்பினார். ‘சவடால்’ வைத்தி என்கிற வைத்தியநாதன் ஐயர் இன்னொரு முக்கிய கதாபாத்திரம்.  மோகனாம்பாள் போன்ற கலையில் ஈடுபடும் பெண்களை பணக்காரர்களின் கட்டிலுக்கு அனுப்பி வைக்கும் தரகு வேலை பார்ப்பதுதான் வைத்தி என்கிற வைத்தியநாதன் ஐயரின் தொழில்.

அந்தக்காலகட்டத்தில் நிறைய பேர் வைத்தியைப் போல இருந்துள்ளனர். அதனை பிரமாதமாக எழுத்தில் வடித்திருந்தார் கொத்தமங்கலம் சுப்பு. அதனை யாரோ ஒரு நடிகரை வைத்து சீரழித்துவிடப் போகிறார்களே என்று பயந்திருக்கிறார். ஆனால், நாகேஷ் அந்த வேடத்தில் பட்டையை கிளப்பினார். கொத்தமங்கலம் சுப்புவுக்கு பெரும் மகிழ்ச்சி. நுங்கம்பாக்கம் ஹைரோடில் நாகேஷ் போய்க்கொண்டிருந்த போது, கொத்தமங்கலம் சுப்பு அவரை எதிர்பாராமல் சந்தித்திருக்கிறார். “நீயும், சி.கே.சரஸ்வதியும் நடிச்சது என்னையும், சுந்தரி பாயையும் மனசுல வச்சு எழுதினது.

அந்த வேஷத்துல நீ நடிக்கிறேன்னு தெரிஞ்சதும், அற்புதமான கேரக்டர், எப்படி திரையில் வரப்போகுதோன்னு நினைச்சேன். நான் எப்படி நினைச்சு எழுதினேனோ அதே மாதிரியே நடிச்சு அசத்திட்டியேப்பா” என்று ரோடு என்றும் பார்க்காமல் நாகேஷை கட்டித்தழுவி முத்தம் கொடுத்திருக்கிறார்.

ஜில் ஜில் ரமாமணி வேடத்தில் மனோரமாவின் நடிப்பு மட்டும் மோசமா என்ன. சிவாஜி, பாலையா போன்ற சீனியர் நடிகர்கள் முன்னிலையில் நடிக்கப் பயந்தவருக்கு ஏ.பி.நாகராஜன் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார். கே.வி.மகாதேவன் இசையில் மறைந்திருந்துப் பார்க்கும் மர்மம் என்ன…, நலம்தானா… ஆகிய பாடல்கள் ஹிட்டாயின. தவில் வித்வானாக நடிக்க பாலையாவும், நாதஸ்வரம் வாசிக்க சிவாஜியும் முறைப்படி பயிற்சி எடுத்துக் கொண்டனர்.

பாலையாவுக்கு பின்னணி தவில் வாசித்தவர் திருவிடைமருதூர் வெங்கடேசன். அதேபோல் சிவாஜி, ஏவிஎம் ராஜனுக்கு பின்னணி நாதஸ்வர இசை வாசித்தவர்கள் சகோதரர்களான எம்.பி.என்.சேதுராமன் மற்றும் எம்.பி.என்.பொன்னுசாமி. இவர்கள் காரைக்குடியில் நடந்த திருமணம் ஒன்றில் வாசித்தததைப் பார்த்து, அவர்களை சென்னை வரவழைத்துள்ளார் ஏ.பி.நாகராஜன். அவர்கள் சென்னையில் தங்கி, கே.வி.மகாதேவன் சொன்னபடி ரிகர்சல் பார்த்து, வாசித்தனர்.

தில்லானா மோகனாம்பாள் ஆங்கில சப் டைட்லுடன் இந்தியாவின் பல பகுதிகளில் 5 மொழிகளில் வெளியிடப்பட்டது. படத்துக்கு ஆனந்த விகடன் 11 பக்கத்திற்கு விமர்சனம் எழுதியது. திரையிட்ட இடங்களில் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி 175 நாள்களை கடந்து வெள்ளிவிழா கண்டது. சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதும், சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதையும் படம் வென்றது. அத்துடன் ஐந்து மாநில அரசின் விருதுகளையும் கைப்பற்றியது. இன்றும் மக்களின் மனதில் மகத்தான இடத்தை தில்லானா மோகனாம்பாள் பெற்றுள்ளது என்பது அனைத்தையும்விட அப்படத்திற்குக் கிடைத்த உயரிய விருதாகும்.
 

Leave a Reply