• Welcome to TamilsGuide
செய்திகள் 1

'தமிழ் பாட்டால் அடிப்பேன் ஓடு'... கண்ணதாசனின் வித்தியாசமான பாடல் - வாலியை விமர்சித்தாரா?

சினிமா

முன்னணி கவிஞராக உயர்ந்த கவிஞர் வாலி, கண்ணதாசனுக்கு இணையாக பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

கவியரசர் கண்ணதாசனுக்கு போட்டியாள வாலி பாடல்கள் எழுத வந்திருந்தாலும், இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. ஆனாலும் கண்ணதாசன் எழுதிய சில பாடல்கள் கவிஞர் வாலியை விமர்சிக்கும் வகையில் இருந்ததாக சிலர் கூறுவார்கள். அப்படி ஒரு பாடல் தான் இந்த பாடல்.

தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர். அதேபோல் ஒரு கலக்கட்டத்தில் கண்ணதாசன் எழுத வேண்டிய ஒரு பாடல் கவிஞர் வாலிக்கு வந்தது அனைவரும் அறிந்த ஒரு தகவல்.

அதே சமயம் வாலி வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் அவர், எழுத வேண்டிய ஒரு பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார். சினிமாவில் வாய்ப்பு தேடிய கவிஞர் வாலி, வாய்ப்பு கிடைக்காத விரக்தியில், தனது நண்பருடன் டிவிஎஸ் கம்பெனியில் வேலைக்கு சேர மதுரை கிளம்பியுள்ளார். அப்போது கண்ணதாசன் எழுதிய ''மயக்கமா கலக்கமா'' என்ற பாடலை கேட்ட வாலி மதுரை செல்லும் எண்ணத்தை கைவிட்டு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருந்துள்ளார்.

அதன்பிறகு பல படங்களில் வாய்ப்பு கிடைத்து முன்னணி கவிஞராக உயர்ந்த கவிஞர் வாலி, கண்ணதாசனுக்கு இணையாக பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அதே சமயம் வாலியின் சில பாடல்களை கேட்டு கண்ணதாசனே வியந்து பாராட்டியுள்ளார். அப்படி கண்ணதாசன் வாலியின் பாடலை கேட்டு வியந்து பாராட்டி, நான் இறந்தால் எனக்கு நீதான் இறங்கல் கவிதை வாசிக்க வேண்டும் என்று கோரி்கையும் வைத்துள்ளார். இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தாலும், கண்ணதாசன் தனது பாடலில் கவிஞர் வாலியை விமர்சித்தாக கூறப்படுகிறது.

1966-ம் ஆண்டு பி.ஆர் பந்தலு இயக்கத்தில் வெளியான படம் எங்க பாப்பா. ரவிச்சந்திரன், பாரதி, ராஜம்மா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்தில் பேசி ஷகிலா குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, இந்த படத்தின் அனைத்து பாடல்களயும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். போலி கவிஞர்களை அடித்து விரட்டும் வகையிலான காட்சிக்கு ஒரு பாடலை கண்ணதாசன் எழுதியிருப்பார். இந்த பாடலில், சண்டையும், பாடலும் சேர்ந்தே இருக்கும். ‘’நான் போட்டால் தெரியும் போடு, தமிழ் பாட்டால் அடிப்பேன் ஓடு’’ என்று தொடங்கும் இந்த பாடலை டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருந்தார். பாடலில் முழுவதும் பல ‘’டா’’ பயன்படுத்தியிருப்பார் கண்ணதாசன்.

டி.எம்.சௌந்திரராஜன் குரலில் வித்தியாசமாக அமைந்த இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வாலியை விமர்சித்தே கண்ணதாசன் இந்த பாடல்களை எழுதினார் என்று பலரும் கூறுவது உண்டு.
 

Leave a Reply