• Welcome to TamilsGuide
செய்திகள் 1

14,000 அஸ்வெசும பயனாளிகளை வலுவூட்ட விசேட வேலைத்திட்டம்

இலங்கை

அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத் திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்தவுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அவஸ்வசும வேலைத்திட்டத்திற்கு சமுர்த்தி திட்டத்தை விடவும் மூன்று மடங்கு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, சமூர்த்திக்காக 60 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அஸ்வெசும திட்டத்திற்காக 180 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பொருளாதார நெருக்கடியினால் பெருமளவில் கஷ்டங்களை எதிர்கொண்ட மக்களுக்கான நிவாரணமாகவே அதனை வழங்குகிறோம்.

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களை வலுவூட்டும் நோக்கில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் திறைசேரி என்பன இணைந்து மேலதிக நிதி ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளன. அதன் கீழ், அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் உள்வாங்கி, கிராம சேவகர் பிரிவொன்றுக்கு 07 பேர் என்ற அடிப்படையில் தெரிவு செய்து, NAITA மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரசபை என்பன இணைந்து வேலைத்திட்டம் ஒன்றையும் செயற்படுத்தவுள்ளன.

அங்கு பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்வோருக்கு அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும், அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, 2000 ஹெக்டயாரில் தேயிலை நடுகைச் செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மீன்பிடித் தொழிலுக்கு விசேட கடன் நிவாரணம் வழங்கும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், கடற்றொழில் அமைச்சு, சமூக வலுவூட்டல் அமைப்புக்கள் மற்றும் சமுர்த்தி வங்கியுடன் இணைந்து உவர்-நன்னீர் மீனவக் குடும்பங்களை வலுவூட்டுவதற்கான சலுகைக் கடன்களை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன்  கடல் அட்டை உற்பத்திக்காக 400 குடும்பங்களுக்கு சலுகைக் கடன் வழங்கப்படவுள்ளது. மீன்பிடி படகுகள் உள்ளிட்ட மீன்பிடித் தொழில்துறைக்கு அவசியமான உபகரணங்களை வழங்குவதே இத்திட்டதின் பிரதான நோக்கமாகும். மேலும், பனை,கித்துல், தென்னை போன்ற உற்பத்திகளுக்கு தரப்படுத்தப்பட்ட கள்ளு அனுமதி வழங்குவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகிறன.

இவைதவிர  செயற்கை உற்பத்திகளுக்கு மாறாக, இயற்கை மதுபான உற்பத்தியை மேற்கொண்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஊடாக களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களை மையமாகக் கொண்டு 10,000 நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டத்தை ஆரம்பிக்கவும் எதிர்பார்க்கிறோம். உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன” இவ்வாறு இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார்.
 

Leave a Reply