• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவாஜியின் கல்யாண செலவு இவ்வளவு கம்மியா? சிம்பிளாக கோயிலில் முடிந்த சூப்பர் ஸ்டாரின் திருமண வரலாறு!

சினிமா

நாடகத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்த போது அனைவரையும் போல அடுத்தக்கட்டமாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை சிவாஜிக்குள்ளும் இருந்தது. அப்போது அவரது பெயர் சிவாஜி கணேசன் அல்ல வெறும் கணேசன். வீர சிவாஜியாக அவரது நடிப்பைப் பார்த்து பெரியார் அவருக்கு பிற்காலத்தில் அளித்த பட்டமே சிவாஜி. பட்டம் பெயருடன் நிலைத்து, கணேசன், சிவாஜி கணேசனானார்.

நூர்ஜகான் நாடகத்தில் சிவாஜியின் நடிப்பைப் பார்த்து வியந்த பி.ஏ.பெருமாள் தனது பராசக்தி படத்தில் சிவாஜியை நாயகனாக்கினார். பராசக்திக்கு முன்பு அதே பி.ஏ.பெருமாளின் பரிந்துரையில் அஞ்சலிதேவி தயாரித்து நடித்த பூங்கோதையில் நடிக்க சிவாஜிக்கு வாய்ப்பு கிடைத்தது. பூங்கோதையே முதலில் வெளியாகியிருக்க வேண்டும். பராசக்தி சிவாஜியின் முதல் படமாக வெளிவந்தால் அவரது சினிமா வாழ்க்கைக்கு அது அனுகூலமாக இருக்கும் என பி.ஏ.பெருமாள் கேட்டுக் கொள்ள, அதன்படி பூங்கோதை வெளியீட்டை அஞ்சலி தேவியும், அவரது கணவரும் தள்ளி வைத்தனர். பராசக்தி சிவாஜியின் முதல் படமாக வெளிவந்து சரித்திரம் படைத்தது.

பராசக்தி, பூங்கோதை என்று இரண்டு படங்களில் சிவாஜி ஒப்பந்தமாகி நடிக்க ஆரம்பித்ததும், இதுதான் அவர் திருமணம் செய்ய ஏற்ற நேரம் என்று முடிவு செய்த சிவாஜியின் தாயார் ராஜாமணி அம்மாள், 1952 மே 1 ம் தேதி சிவாஜிக்கும், அவரது முறைப்பெண் கமலாவுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார்.

சுவாமிமலையில் திருமணம் எளிமையாக நடந்தது. பி.ஏ.பெருமாள், எம்ஜி ராமச்சந்திரன், கலைஞர் மு.கருணாநிதி, கண்ணதாசன், டி.ஏ.மதுரம், எஸ்.வி.சகஸ்ரநாமம், கிருஷ்ணன் - பஞ்சு ஆகியோர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

தனது திருமணத்துக்கு சிவாஜி செலவளித்த மொத்தத் தொகை 500 ரூபாய். இதனை ஒரு பேட்டியில் அவரே தெரிவித்திருந்தார். அந்த நேரத்தில் அதிகம் செலவளிக்க என்னிடம் பணம் இல்லை, இருந்ததே அவ்வளவுதான் என்று கூறியிருந்தார். பிற்காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சரான கலைஞர், எம்ஜி ராமச்சந்திரன் கலந்து கொண்ட, நடிகர் திலகத்தின் திருமணத்தின் மொத்தச் செலவே 500 ரூபாய் என்பது ஆச்சரியமான உண்மை.

நியூஸ்18 தமிழ்

Leave a Reply