• Welcome to TamilsGuide
செய்திகள் 1

IMF க்கும் எதிர்கட்சிப் பிரதி நிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று  இன்று இடம்பெறவுள்ளது.

இந் நிலையில், சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் தாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் அறிவித்துள்ளன.

நாட்டுக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடந்த 7 ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. அதன்போது, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் செயற்படுவதைக் காட்டும் வகையில், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வழமைக்கு திரும்புவது மகிழ்ச்சியளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து அதன் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த 8ஆம் திகதி கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, இந்தக் கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இருப்பினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என அறியமுடிகிறது.
 

Leave a Reply