• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு விமானப்படை வீரர் தீக்குளிப்பு

பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் படையினர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இந்த சண்டை நடந்து வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் என 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.

காசாவில் நடந்து வரும் போரை நிறுத்துமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வந்த போதிலும் அதனை இஸ்ரேல் நிராகரித்து வருகிறது. தொடர்ந்து காசாவில் குண்டுகளை வீசி வருகிறது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவில் விமான படையை சேர்ந்த வீரர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரக அலுவலகம் உள்ளது. நேற்று பிற்பகல் விமான படை வீரர் உடை அணிந்த ஒருவர் இந்த அலுவலகத்துக்கு வந்தார். திடீரென அவர் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதனால் அவர் அலறி துடித்தார். இதைபார்த்த அங்கிருந்தவர்கள் அவர் மீது பற்றிய தீயை அணைத்து அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர் எதற்காக இந்த முடிவை மேற்கொண்டார் என தெரியவில்லை. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அவர் தீக்குளிப்பதற்கு முன்பு பேசியது இடம் பெற்றுள்ளது. அவர் இனிமேலும் நான் இனப்படு கொலைக்கு (காசாவில்)உடந்தையாக இருக்க மாட்டேன். நான் ஒரு தீவிர எதிர்ப்பு செயலில் ஈடுபட உள்ளேன் என கூறி உள்ளதாக தெரிகிறது.

இந்த தீக்குளிப்பு சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேல் தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Leave a Reply