• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வலிகாமம் வடக்கில் 500 ஏக்கர் சுவிகரிப்பு விமான நிலைய அபிவிருத்திக்கானதா?

இலங்கை

யாழ்ப்பாணம் விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் விமான நிலையத்திற்கு எதிர் திசைகளிலும் நிலத்தை அபகரிக்க  முயற்சிக்கப்படுவது பெரும் சந்தேகத்தை ஏறபடுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

பலாலி விமான நிலையம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டபோது, அதற்கு செல்வதற்கான பிரதான வீதி கிழக்குத் திசையில் பலாலி வீதியில் இருந்து மேற்குத் திசையில் உள்ள கட்டுவன் மயிலிட்டி வீதிக்கு  மாற்றப்பட்டது. 

ஏற்கெனவே ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் இன்னும் இலங்கை பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், இப்போது விமான நிலையத்தைச் சுற்றி மேலும் நிலங்களை கபளீகரம் செய்யும் செயல்பாடும் தொடங்கியுள்ளன.

தற்போது சிவில் விமானப்போக்குவரத்து அதிகார சபை 500 ஏக்கர் நிலத்தை  சுவீகரித்து தருமாறு கோருவதன் நோக்கம் விமான நிலைய ஓடுபாதை மற்றும் விமான நிலைய அபிவிருத்தி எனக் கூறப்படுகின்றது. 

யாழ்ப்பாணம் சர்வதே விமான நிலையத்தில் இன்று தரை இறக்கப்படும் 80 ஆசணங்களைக்கொண்ட விமானம் ஒன்றைத் தரை இறக்க 950 மீற்றர் ஓடு பாதையும் அடுத்த தர விமானமான 150 பயணிகள் பயணிக்கத்தக்க விமானங்களை தரை இறக்குவதானால் 2300 மீற்றர் ஓடு பாதையும் தேவையானது.  

ஆனால், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தற்போதே கைவசம் 2,300 மீற்றர் நீளமான ஓடு பாதை உள்ளபோதும் 950 மீற்றர் ஓடுபாதை மட்டுமே பயன்படுத்துவதன் காரணமாகவே இங்கே 150 பயணிகள் பயணிக்கத்தக்க விமானங்கள் தரையிறக்க முடியவில்லையே அன்றி 2300 மீற்றர் நீளமான ஓடுபாதை இல்லை என்பது தவறான கூற்று. இப்போது இருக்கும் 2300 மீற்றர் நீளமான ஓடு பாதையில் 500 மீற்றர் வரையான ஓடுபாதை செப்பனிடப்பட வேண்டும் என்பது மட்டுமே உண்மையானது. 

இதேநேரம் யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில் கிழக்குத் திசையில் இருந்தபோது காணப்பட்ட இடவசதிகள் தற்போதும் உள்ள போதும் அவை படையினரின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டு மேலதிக நிலத்தை சுவீகரிக்கவே தற்போதைய திட்டமாக காணப்படுகின்றது. 

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அமைத்துள்ள தற்போதை இடத்திற்கு பலாலி வீதி ஊடாக உள் நுழையும்போது பலாலி வீதியின் மேற்கே பெரும் பிரதேசம் காணப்படுவது மட்டுமன்றி பலாலி வீதிக்கு கிழக்கே எந்தவொரு விமான நிலைய பயன்பாடும் இன்றி வெறுமனே படையினரின் பிடியில் 642 ஏக்கர் நிலம் இன்றும் உள்ளது. 

இந்த 642 ஏக்கர் நிலத்தையும் முழுதையாக விடுவிப்பதாக அரசினால் பலதடவை படம் காட்டப்பட்ட போதும் அந்த நிலங்கள் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. தற்போது காங்கேசன்துறை வீதி எவ்வாறு கடற்கரை வரையில் செல்கின்றதோ அதேபோன்று பலாலி வீதியில் தற்போது வசாவிளானில் போடப்பட்டுள்ள இராணுவத் தடையை அகற்றி கடற்கரை வரையில் பயணிக்கவும் பலாலி வீதிக்கு கிழக்கே உள்ள 642 ஏக்கர் நிலம், குரும்பசிட்டியில் தற்போது படையினர் வசம் உள்ள 126 ஏக்கர் என்பவற்றுடன், மயிலிட்டியில் மீனவர்களின் குடியிருப்பு நிலமான 150 ஏக்கர் என மொத்தம் 918 ஏக்கரையும் விடுவிக்க நடவடிக்கை இடம்பெறுவதாக தற்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவின் ஏற்பாட்டில் மாவட்ட மேலதிக அரச அதிபர் வரைபடங்கள் தரவுகளுடன் கொழும்பிற்கு விரைந்தார். 

2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர்,  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட மேலதிக செயலாளர் முரளிதரன் உள்ளிட்டோர் முன்னிலையில் பிரதேச வரைபடம், அந்த நிலத்தில் குடியமர தயாராகவுள்ள மக்கள் எண்ணிக்கை போன்றவை விவரங்களுடன் ஆராயப்பட்ட போது ஏதோ உடனடியாக நிலம் விடுவிப்பதுபோன்ற மாயை உருவானது. 

இவ்வாறெல்லாம் விமான நிலையத்திற்கும் அப்பால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் வலி வடக்கிலே படையினரின் பிடியில் உள்ளபோதே தற்போது மேலும் 500 ஏக்கர் சுவீகரிப்பதற்கான முயற்சி இடத்பெறுவது மக்களிற்கு  பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. 

விமான ஓடுபாதை நீளம் போதாது எனக் கூறும் சிவில்  விமான போக்குவரத்து அதிகார சபை, விமான ஓடுபாதை உள்ள வடக்குத் தெற்குத் திசையில் நிலத்தை கோரவில்லை. மாறாக விமான ஒடுபாதையின் முன்பாக அலுவலகம், அதன் முன்னே பாரிய நிலப்பிரதேசத் உள்ளதற்கு முன்பாகவுள்ள கட்டுவன் மயிலிட்டி வீதிக்கும் மேற்குத் திசையில் உள்ள நிலங்களை கோரி நிற்பதே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. 

ஏனெனில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய பிரதான நுழைவாயில் அமைந்துள்ள கட்டுவன் மயிலிட்டி வீதியில் வெறும் 3 ஏக்கர் நிலத்தை விடுவிக்க மறுத்து மக்களின் காணிகளை ஊடறுத்து வீதி அமைக்கும்போது இதற்கு அப்பால் எக்காரணம் கொண்டும் இனி படையினர் நில அபகரிப்பில் ஈடுபடமாட்டார்கள் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டது. 

கோவில்களும், பாடசாலைகளும் சிக்கியுள்ளன

போர் முடிந்து 15 ஆண்டுகள் பின்னரும், படையினர் வலிந்து ஏராளமான ஏக்கர் நிலங்களை விடுவிக்காமல் இருப்பது தமிழ் மக்களின் மன வேதனையை மேலும் அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்கு என்று கூறி இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கும் நிலப் பகுதியில் சைவ ஆலயங்கள், பாடசாலைகள் ஆகியவை சிக்குண்டுள்ளன. அவ்வாறு சிக்குண்டுள்ள ஆலயங்களில் நித்திய பூசை கூட செய்ய முடியாத துர்பாக்கியமான சூழல் நிலவுகிறது, அது மிகவும் விசனமளிக்கிறது என்று அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் வருந்துகிறார். 

”வலிகாமம் வடக்கில் படையினர் வசம் தற்போதுள்ள நிலத்தில் 22ற்கும் மேற்பட்ட சைவ ஆலயங்கள் நித்திய பூசையின்றி அழிவடையும் அதேநேரம் 4 பாடசாலைகளும் படையினரின் பிடியிலேயே உள்ளது. 

மறுபுறத்தே காங்கேசன்துறையில் தல்செவன எனும் படையினரின் பிடியில் சிவ புண்ணியபூமியே உள்ளது. கீரிமலையில் 7 சைவ அடையாளங்களிற்கு என்ன நடந்தன என்பதனைக்கூட முழுமையாக கண்டறியமுடியாமல் திணறுகின்றோம். 

இந்த நிலைமையிலேயே தற்போது அபகரிக்க முயற்சிக்கப்படும் 500 ஏக்கர் நிலப் பரப்பிற்குள்ளும் , ஞானோதயாப் பாடசாலையுடன்  துரைகட்டி வயிரவர் ஆலயம், வீரபத்திரர் ஆலயம், பூதநாதர் கோயில், பிள்ளையார் ஆலயம் தண்ணித்தாழ்வு வயிரவர் ஆலயம் என்பவற்றுடன் மயிலிட்டி பிரதேச சபையின் உப அலுவலகம் ஒன்றும், குரும்பசிட்டி பொதுச் சந்தை என்பனவும் காணப்படுகின்றது”. 

எனவே இவை தொடர்பில் தமிழ் முஸ்லீம் பேதமின்றி வடக்கு கிழக்கின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் உரத்த குரல் எழுப்ப வேண்டுமென அகில இலங்கை இந்துமா மன்றத்தின் துணைத் தலைவர் ஆறு.திருமுருகன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். 

புதிதாக சுவீகரிக்கப்படவுள்ளதாக கூறப்படும் 500 ஏக்கரில் ஜே- 242, 238, 239, 240, 246 ஆகிய 5 கிராம சேவகர் பிரிவுகள் பகுதியளவிலோ அல்லது முழுமையாக இழக்கப்படும் அபாயம் உள்ளது என இப்பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

இவ்வாறு வலிகாமம் வடக்கு பிரதேச மக்களின் கவலை தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோரைத் தொடர்புகொண்டு கேட்டபோது:

”2024-02-16 இன்று யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் இடம்பெறவுள்ளது. அதிலே நிச்சயமாக இது தொடர்பில் உடனடியாக பிரஸ்தாபிக்கப்படுவதோடு அடுத்து வரும் நாடாளுமன்ற அமர்வுகள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகளின் கவனத்திற்கும் இந்த விடயம் எடுத்துச் செல்லப்படும். ஏனெனில், மயிலிட்டித் துறைமுகம் உள்பட இப்பிரதேசங்களை விடவே முடியாது என மகிந்த ராஜபக்சவும் அவரது அமைச்சர்களும் கூறிவந்த நிலையில் எமது விடாமுயற்சியால் மீட்கப்பட்ட பகுதியை திருட்டுத் தனமாகவோ அல்லது கபடத்தனமாகவோ அபகரிப்பதனை அனுமதிக்கவே முடியாது” என்றனர். 

இதேநேரம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட  காணிகளில் இருந்து மீளவும் 500 ஏக்கர் பரப்பளவு  காணிகளை சுவீகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்வது மீண்டும் அப்பகுதி மக்களை எத்தனை ஆண்டுகாலம் அலைய வைத்து, இன்னலுக்கு உள்ளாக்கும் முயற்சி என  வலிக்காமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் கேள்வி கேள்வி எழுப்புகின்றார்.

”கடந்த 30 வருடங்களுக்கு மேல், உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த பகுதிகள் 2018 ஆம் ஆண்டு எமது நீண்ட போராட்டங்கள், தொடர் முயற்சிகளின் பயனால்  விடுவிக்கப்பட்டிருந்தது. 

மக்கள் மீளக்குடியமர்ந்து தமது வாழ்வாதாரத்தை பகுதி பகுதியாக கட்டமைத்துக் கொண்டுவரும் வேளையில் , மக்களுக்கு இடி விழுந்தால் போல் மீளவும் 500 ஏக்கர் காணியை அரசாங்கம் சுவீகரிக்க முயற்சி செய்கின்றது. 

உண்மையில் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்காக காணிகள் சுவீகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதனை நம்ப மக்கள் தயாராக இல்லை. இதற்கு எதிராக மீண்டும் மக்கள் போராட்டங்கள் இடம் பெறும் இதற்கு மக்கள் எதிர்ப்பினை வெளியிடுவார்கள். 

காணி அளவையாளர்கள் இங்கு வந்தால்  அவர்கள்  அடித்து விரட்டப்படுவார்கள்.   இங்கு வருபவர்களை கண்டறிவதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏனைய மக்களுக்கு இதனை  தெரியப்படுத்தி எதிர்ப்பில் ஈடுபடுவார்கள்” என்றார்.

( சிறப்பு கட்டுரை)
நடராசா லோகதயாளன்.

Leave a Reply