• Welcome to TamilsGuide
செய்திகள் 1

படிப்புக்காக கடன் வாங்கியவர்- சொந்த நிறுவனத்தில் 500 ஊழியர்களை கோடீஸ்வரராக உயர்த்திய தமிழர் 

சினிமா

மென்பொருள் நிறுவனமான Freshworks, தங்களின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு வழங்கவிருந்த செயல்திறன் அடிப்படையிலான 6 மில்லியன் மதிப்பிலான பங்குகளை ரத்து செய்து மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Freshworks மென்பொருள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகரியாக செயல்பட்டு வருபவர் திருச்சியை சேர்ந்த கிரிஷ் மாத்ருபூதம். 2021ல் Freshworks நிறுவனமானது பங்குச் சந்தையில் நுழைந்ததை அடுத்து, அதன் 500 ஊழியர்கள் கோடீஸ்வரர்களாக உயர்ந்தனர்.

இந்த 500 ஊழியர்களில் குறைந்தது 70 பேர்கள் 30 வயதுக்கும் குறைவானவர்கள். மட்டுமின்றி, இதில் பலர் கல்லூரி பட்டம் பெற்றதும் வேலைக்கு சேர்ந்தவர்கள். திருச்சியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் கிரிஷ் மாத்ருபூதம்.

பல இன்னல்களை எதிர்கொண்டு தற்போதைய நிலைக்கு உயர்ந்தவர். தனது MBA படிப்புக்காக பலரிடம் கடன் வாங்கியவர். 2010ல் Freshworks மென்பொருள் நிறுவனத்தை தொடங்கினார்.

2010 அக்டோபர் முதல் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். Freshworks மென்பொருள் நிறுவனம் சென்னையில் வைத்து தொடங்கப்பட்டாலும், அதன் தலைமையகம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது.

Freshworks மென்பொருள் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு என்பது ரூ 95,000 கோடி என்றே கூறப்படுகிறது. சராசரி மாணவனான கிரிஷ் மாத்ருபூதத்தால் IIT-ல் நுழைய முடியவில்லை. இதனையடுத்து சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் படித்தார்.

பின்னர் மட்ராஸ் பல்கலைக்கழகத்தில் MBA முடித்தார். பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட காலகட்டம் அது. குடும்பத்தினரிடம் இருந்து கடன் வாங்கியே 1992ல் கிரிஷ் MBA பட்டம் பெற்றார்.

பணத்தின் முக்கியத்துவத்தை அப்போது உணர்ந்த கிரிஷ், பெரிய அளவில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். Freshworks மென்பொருள் நிறுவனத்தை தொடங்கும் முன்னர் பல தோல்விகளையும் இடையூறுகளையும் எதிர்கொண்டார்.

2010ல் தமது நண்பர் ஷான் கிருஷ்ணசாமியுடன் இணைந்து Freshworks மென்பொருள் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 2011ல் 1 மில்லியன் டொலர் முதலீட்டை ஈர்த்தது Freshworks மென்பொருள் நிறுவனம்.

2021ல் வருவாய் மட்டும் 300 மில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியது. கலிபோர்னியா மட்டுமின்றி, பாரிஸ், நெதர்லாந்து உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் Freshworks மென்பொருள் நிறுவனத்தின் அலுவலகங்கள் செயல்படுகின்றன.

தொடங்கிய ஒன்றரை வருடத்தில் 200 மில்லியன் டொலர் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக உயர்ந்தது. மேலும், Freshworks நிறுவனத்திற்கு தற்போது உலகெங்கும் 50,000 வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் Freshworks நிறுவனம் செயல்திறன் அடிப்படையில் 6 மில்லியன் மதிப்பிலான பங்குகளை கிரிஷ் மாத்ருபூதத்திற்கு வழங்குவதை ரத்து செய்துள்ளதுடன், 2024 இல் அவருக்கு வருடாந்திர நீண்ட கால ஈக்விட்டி ஊக்கத் தொகையை வழங்கவும் முடிவு செய்துள்ளது.
 

Leave a Reply