• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்ஜிஆரையும் சிவாஜியும் இணைத்தவர் டி.ஆர் ராமண்ணா 

சினிமா

எம்ஜிஆரையும் சிவாஜியும் இணைத்தவர் டி.ஆர் ராமண்ணா - இவரின் படங்களாக இது?

தமிழ் சினிமா இயக்குநர் டி.ஆர் ராமண்ணா:

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அடித்தளத்தில் இருந்து திரைக் களத்தில் கால் பதித்தவர்கள் எத்தனையோ பேர் வெற்றியடைந்துள்ளனர். அப்படிப்பட்ட கலைஞர்களில் ஒருவர் தான் தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன் ராமச்சந்திரன் என்கின்ற டி.ஆர் ராமண்ணா.

வயிற்று வலியால் தந்தை உயிரிழந்த காரணத்தினால் தமிழ் சினிமாவில் தனது மூத்த சகோதரி சென்றது போலவே தானும் செல்ல வேண்டும் என நினைத்து தஞ்சாவூரில் இருந்து சென்னைக்குக் கிளம்பி வந்தார். இவரது மூத்த சகோதரி அப்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த டி.ஆர் ராஜகுமாரி ஆவார்.

முதலில் சிட்டி ஸ்டுடியோவில் ஒளிப்பதிவாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, படிப்படியாகத் திரைப்பட இயக்குநராக வளர்ந்தார். தனது மூத்த சகோதரியான டி.ஆர் ராஜகுமாரியுடன் இணைந்து ஆர்.ஆர் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.

வித்தியாசமான கதைகளைக் கொண்ட பல திரைப்படங்களில் அதிலும் வெற்றிப் படங்களை ராமன் இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராகத் தமிழ் சினிமாவில் இடம் பிடித்தார்.

சரித்திரத்தில் இடம் பிடித்த திரைப்படமான கூண்டுக்கிளி திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான சிவாஜி கணேசனையும், எம்ஜிஆரையும் சேர்ந்து நடிக்க வைத்தார். இன்று வரை தமிழ் சினிமாவில் அழியாமல் இருக்கும் குலேபகாவலி, புதுமைப்பித்தன், காத்தவராயன், பெரிய இடத்துப் பெண், பணக்கார குடும்பம், குமரிப்பெண், என்னைப்போல் ஒருவன் எனப் பல வெற்றி திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.

எம்ஜிஆரின் திரைப்படத்தின் பல முக்கிய வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர்களில் இவருக்குத் தனி இடம் உண்டு. இவர் தயாரித்து வெளியிட்ட திரைப்படத்தில் துலாபாரம் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த் எனத் திரை ஜாம்பவான்களாகத் திகழ்ந்த அத்தனை நடிகர்களையும் இவர் இயக்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார். இவற்றில் பெரும்பான்மையான படங்கள் மிகப்பெரிய வெற்றியைக் கண்டன என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கிய பெரும்பான்மையான படங்களில் எம்.ஆர் ராதா, எஸ்.ஏ அசோகன், மனோகர் உள்ளிட்டோரை வில்லன் கதாபாத்திரத்தில் கட்டாயம் நடிக்க வைப்பார்.

தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்த கதாநாயகன், கதாநாயகி, வில்லன், நகைச்சுவை நடிகர்கள் என அனைத்து நடிகர்களையும் இவர் இயக்கியிருக்கிறார் என்பதே மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயமாகும். 1953 இயக்குநராகக் காலடி எடுத்து வைத்த இவர் 1987இல் தனது பயணத்தை முடித்துக் கொண்டார்.

மே மாதம் 22ஆம் தேதி 1997 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ஜாம்பவானாக விளங்கிய இயக்குநர் ராமண்ணா காலமானார். இன்றுடன் இவர் இறந்து 36 ஆண்டுகள் ஆனாலும் ஆகச்சிறந்த கலைஞர்களுக்கு அழிவு இல்லை என்பதற்கு இயக்குநர் ராமண்ணா ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும்.
 

Leave a Reply