• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் நடந்த இசைக்  கலவரம்

சினிமா

''யாழ் இசைக்  கலவரத்தினால் கலை ,கலாசாரம், பண்பாடு ,பாரம்பரியத்தின் விளை நிலமான யாழ்ப்பாணத்தின் மாண்பு மாசுபடுத்தப்பட்டுள்ளதுடன் நடிகை தமன்னாவின் ''காவாலா '' ஆட்டத்தை பார்க்க ஆசைப்பட்ட யாழ்ப்பாணத்து இளைஞர்கள் இன்று ''காவாலி''களாக்கப்பட்டுள்ளார்கள்''

தென்னிந்திய சினிமா  பிரபலங்கள் அழைத்துவரப்பட்டு யாழ்ப்பாணத்தில்  இசை,கலை நிகழ்ச்சிகள்  தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டு வருவதால் கலை,கலாசார,பண்பாட்டு  சீர்கேடுகள் ஏற்படும் என குற்றச்சாட்டுகள்  முன்வைக்கப்பட்டு வரும் நிலையில்  கடந்த 9 ஆம் திகதி   வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட பிரபல பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட  கலவரம்  இவ்வாறான குற்றச் சாட்டுக்களை புறந்தள்ளிவிட முடியாது என்பதனை நிரூபித்துள்ளதுடன் இவ்வாறான ''கலை நிகழ்ச்சிகள்'' என்றபெயரில் நடக்கும் ''காசு பிடுங்கும்''பின்னணியையும்  அம்பலப்படுத்தியுள்ளது

நெதேர்ன் யுனிவர்சிற்றி என்கிற தனியார் நிறுவனத்தால் இந்த இசை  நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து சென்று கனடாவில் வசிக்கக்கூடிய தமிழ் தொழிலதிபரான இந்திரன் என்பவரின் நிறுவனமே நெதோன் யுனிவர்சிற்றி. இந்திரன் அவரது மனைவியான நடிகை ரம்பா   இவர்களின் நிறுவனம் தான் வலி. வடக்கில் தனியார் காணிகளை  ஆக்கிரமித்து முன்னாள் இலங்கை ஆட்சியாளர்களான  ராஜபக்சக்களால் கட்டப்பட்ட அரச மாளிகையை பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புக்களுக்கு  மத்தியிலும் . ரணில் அரசுடன் இரகசிய மாகப் பேச்சு நடத்தி தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்காக  பெற்றுக்கொண்டுள்ளது.

பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச் சியையும் நெதேர்ன் யுனிவர் சிற்றியை பிரபல்யப்படுத்துவதற்காக ஒழுங்குபடுத்தியிருந்தார்கள். அந்தநிறுவனம் வெளிநாட்டுப்பல்கலைக்கழங்களின் பட்டங்களை தொலைக் கல்விமுறை மூலம் இங்கு வழங்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. எனவே அதற்கு ஆட்களைத் திரட்டுவதற்கான ஒரு 'புரொமோசன்' நிகழ்ச்சியாகவே ''Hariharan Live in Concert and Star Night '' என்ற இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தாங்கள் இந்த நிகழ்ச்சியை பல கோடிகள் செலவழித்து நடத்துவதாகவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு  தமிழ் மக்களை மகிழ்விக்கே நடத்துவதாகவும் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவோம்  என்றெல்லாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தார்கள். இருந்தாலும் நிகழ்ச்சி   முழுக்க முழுக்க ''பணம் பிடுங்கும்''   நோக்கத்திலான ஏற்பாடுகளுடன்தான் நடந்தது

 யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஹரிகரனின்  ''Hariharan Live in Concert and Star Night '' என்ற இசைநிகழ்ச்சியை நடத்த கடந்த டிசம்பர் மாதம்  ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில்  பின்னர் சீரற்ற காலநிலை காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு  9  ஆம்திகதி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.ஆரம்பத்தில் இசை நிகழ்ச்சி இலவசமாக ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறப்பட்ட போதிலும் பின்னர் ஆசனங்களுக்கு ஏற்ற வகையில் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு ரிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.

அதேபோன்று இசை நிகழ்ச்சியில் பங்குபற்றும் பிரபலங்களுடன் விருந்து அருந்தி புகைப்படமெடுக்க 30ஆயிரம் ரூபா அறவிடப்படும் என வெளியான அறிவிப்பு யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.அத்துடன் கலை நிகழ்ச்சியை பார்வையிட 25000, 7000 , 3000 ரூபாக்களும்   என்ற அடிப்படையில் ரிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு ஆசனங்கள் ஒதுக்கப்பட்டதுடன், இலவசமாக நின்றவாறும் இசை நிகழ்ச்சியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனுடன்   தென்னிந்திய சினிமா பிரபலங்களான   நடிகைகளான தமன்னா, ரம்பா,ஐஸ்வர்யா ராஜேஷ்   பிரபல  நடன இயக்குநர் கலா மாஸ்டர்,நடிகர்கள்  சிவா, யோகிபாபு  பாலா, சாண்டி மாஸ்டர், சின்னத்திரை நடிகர்,நடிகைகளான  சஞ்சீவ்,திவ்ய தர்சினி, ஆல்யமானசா , நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பலர்  யாழ்ப்பாணம் பலாலி  சர்வதேச விமான நிலையம் ஊடாக 8 ஆம் திகதி   வியாழக்கிழமை  மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.  

பொலிஸ் மற்றும் தனிப்பட்ட பாதுகாவலர்களின் பாதுகாப்புடன் கலை நிகழ்ச்சி திட்டமிட்டவாறு 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பமான போது கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் பெரும்பாலானவர்கள் அனுமதிச் சீட்டுகள் இல்லாமல் நுழைந்ததால்    கலவரம்   ஏற்பட்டது.  25000 ரூபா,அனுமதிச் சீட்டு, 10000 ரூபா ,அனுமதிச் சீட்டு, 5000 ரூபா  அனுமதிச் சீட்டு என கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்ந்தும் அதன்பின்னே இலவசமாக நின்றவாறும் இசைநிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனாலும் கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் பெரும்பாலான கூட்டம் அனுமதிச் சீட்டுகளே இல்லாமல்  தடுப்புகள் உடைக்கப்பட்டு பலர் குறுகிய இடத்திற்குள் நுழைந்ததுடன், பணம் செலுத்தியும் கதிரைகள் இல்லாமல் நின்றவர்களோடு மோதுண்டு பலர் நிலைதடுமாறி கீழே விழுந்ததையடுத்து பெரும் மோதல் நிலை  உருவானது.  

இக்கலவரத்தினை    அடக்க மேலதிக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்ட போதும் நிலைமை கட்டுங்கடங்காது சென்றது.கதிரை, தண்ணீர் தாங்கி உள்ளிட்ட பல பொருட்கள் சேதமாகின.பலர் காயமடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.நடிகை ரம்பாவின் கணவரின் தனிப்பட்ட  பாதுகாவலர்களினாலும் கடுமையாக தாக்கப்பட்டனர்.  பொலிஸாரும்  ரகிசர்கள் மீது மிலேச்சத்தனமாக தாக்குதல்களையும் நடத்தினர்.இதன்போது ஒருவர் மயக்கமுற்றதுடன் மேலும் பலர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.  

இக் கலவரத்திற்கு  நிகழ்ச்சி குறித்த அறிவிப்புகள், நுழைவுச்சீட்டுகளினால் ஏற்பட்ட குழப்பங்கள், பங்கேற்கும் கலைஞர்களில் இறுதி நேரத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள், மைதான ஏற்பாடுகள், பாதுகாப்பு சார் குறைபாடுகள் .போதைப் பொருள் பாவனையாளர்கள் என பல்வேறு சர்ச்சைகள்  குழப்பத்தின் காரணிகளாக சுட்டிக்காட்டப்படுகின்றன.மேலும், இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்த புலம்பெயர் முதலீட்டார் யாழ்  பலாலி விமான நிலையத்தில் தெரிவித்திருந்த கருத்தும் பலரிடம் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதுமட்டுமன்றி  இந்த இசை   நிகழ்ச்சியில் திட்டமிடப்பட்டு குழப்பம் ஏற்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த இசை நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பில் ஆரம்பம் முதலே எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வந்தன. சமீப காலமாக தென்னிந்திய பிரபலங்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து நிகழ்ச்சிகள் நடத்தும் போக்குகள் அதிகரித்து வருகின்றன.இதனை கலாசார ஒழுங்கீனம் என்று குறிப்பிட்டு வரும் ஒரு தரப்பினர் இவ்வாறான நிகழ்வுகளுக்கு எதிரான கருத்துகளையும் வெளியிட்டு வந்தனர்.

அது போலவே  இந்த இசை நிகழ்வுக்கும் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டு வந்தனர்.  அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி மு.தம்பிராசா நடத்திய ஊடக சந்திப்பிலே ''யாழ்ப்பாணம் என்பது தமிழர்களுடைய பண்பாட்டுக்கும் கலாசாரத்திற்கும் உலக அளவில் பெயர் பெற்ற இடமாகும். இந்திய திரைப்படங்களில் கூட யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தைப் பற்றி பெருமையாக பேசியுள்ளார்கள். ஆனால், இங்கே சினிமா நடிகைகளை அழைத்து வந்து அவர்களோடு புகைப்படம் எடுப்பதற்கு பணம் பெறுகின்ற கேவலமான செயலை குறித்த தனியார் நிறுவனம் நடத்த முற்படுகின்றது.

உண்மையிலேயே புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து வந்து இங்கே முதலீடுகளை செய்பவர்களினால் எங்களுடைய மக்களுக்கோ அல்லது இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பையும் அல்லது பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்க வேண்டுமே அல்லாமல் இளைஞர்களை திசை திருப்பும் முகமாக எமது தமிழ் இளைஞர்களின் தமிழ் தேசிய உணர்வை மழுங்கடிக்கும் முகமாக இவ்வாறு நடிகைகளோடு கட்டணம் கட்டி புகைப்படம் எடுக்கின்ற செயற்பாட்டை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த இசை நிகழ்வானது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மகிழ்விக்கவும் அவர்களை ஆற்றுப்படுத்தவும் இலவசமாகவே நடத்துகின்றோம் என்று சொல்லி நிகழ்வு ஒழுங்குகளை செய்தவர்கள் இன்றைக்கு 25,000 ரூபா பெற்று டிக்கெட் விநியோகிப்பதை நாங்கள் கண்டு கொண்டிருக்கின்றோம்.  இலட்சக்கணக்கான பணத்தினை பெற்று யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தனியார் பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளவர் எங்கள் மக்களுடைய கலாசாரத்தை அழிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தின் பண்பாட்டை சீர்குலைக்கும் முகமாக இவ்வாறான செயற்பாட்டை நடத்த முற்படுகின்றார்.இவ்வாறான நிகழ்ச்சிகளின் பெயரால் எங்கள் மக்களை வைத்து வியாபாரம் செய்வார்களானால் அவர்களுக்கு எதிராக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு எந்த அளவுக்கு சென்று போராடவும் ஒருபோதும் பின்நிற்காது . இவற்றை தென்னிந்திய நடிகைகளும் நடிகர்களும் உணர்ந்து எங்கள் மக்களுடைய வலிகளையும் துன்பங்களையும் உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும். இல்லையேல் நீங்கள் தங்கியுள்ள இடங்களை முற்றுகையிடுவோம் என எச்சரித்திருந்தார்.

இந்த இசைக் கலவரத்திற்கு  இவ்வாறு  பல காரணங்கள் ,குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் யாரை மகிழ்விப்பதற்காக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்களோ,அவர்களின்   25000.10000.3000 ரூபாவுக்கு டிக்கெட் வாங்க முடியாத ஏழ்மையை காரணம் காட்டி   அவர்களைத்   தூரத்திலேயே ''நின்று பார்க்கும் பார்வையாளராக  நிறுத்தி வைத்ததன் விளைவே இந்த ''இசைக்  கலவரம்'' .போரால் பாதிக்கப்பட்டு. பொருளாதார  நெருக்கடியால் சின்னாபின்னமாகி நின்ற யாழ்ப்பாணத்து சாதாரண மக்கள்  கூட்டத்தால் தூரத்தில் தெரிந்தஇசை மேடையையும் வர்ண விளக்குகளையும் மட்டும்தான் பார்க்க முடிந்ததே தவிர,   நடிகர் நடிகைகளை அவர்களினால் பார்க்க முடியவில்லை.அந்த கவலை, இயலாமை ,கோபம் ஆகியவற்றின் வெளிப்பாடே இன்று யாழ் இளைஞர்களை தென்னிந்திய ,தென்னிலங்கை ,சமூக  ஊடகங்கள் ''காவாலிகளாக'',''காடையர் கூட்டமாக''  அடையாளப்படுத்த காரணமாகியுள்ளது .

இந்த  ''இசைக்  கலவரம்'' திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதா அல்லது ரசிகர்களின் ஆர்வக்கோளாறினால் ஏற்பட்டதா என்பது ஒருபுறமிருக்க இந்த இசைக்  கலவரத்தினால் கலை ,கலாசாரம், பண்பாடு ,பாரம்பரியத்தின் விளை நிலமான யாழ்ப்பாணத்தின் மாண்பு மாசுபடுத்தப்பட்டுள்ளதுடன் நடிகை தமன்னாவின் ''காவாலா '' ஆட்டத்தை பார்க்க ஆசைப்பட்ட யாழ்ப்பாணத்து இளைஞர்கள் இன்று ''காவாலி''களாக்கப்பட்டுள்ளார்கள்.

கே.பாலா

Leave a Reply