• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முதல் லேடி சூப்பர் ஸ்டார்... பன்முக திறமை கொண்ட அஞ்சலி தேவி 

சினிமா

50-களில் கனவுக்கன்னி... முதல் லேடி சூப்பர் ஸ்டார்... பன்முக திறமை கொண்ட அஞ்சலி தேவி தெரியுமா?

1927-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி பெத்தாபுரம் பகுதியில் பிறந்தவர் தான் நடிகை அஞ்சலி தேவி.

நடிகை, தயாரிப்பாளர், மாடல் என தென்னிந்திய சினிமாவில் பன்முக திறமையுடன் 60 ஆண்டுகளுக்கு மேலான ஆதிக்கம் செலுத்திய நடிகை அஞ்சலி தேவி குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

1927-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி பெத்தாபுரம் பகுதியில் பிறந்தவர் தான் நடிகை அஞ்சலி தேவி. அஞ்சனி குமார் என்ற நிஜ பெயர் கொண்ட இவர் தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து வந்த நிலையில், 1936-ம் ஆண்டு வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து 1940-ம் ஆண்டு எல்.வி.பிரசாத் இயக்கத்தில் வந்த கஷ்டஜீவி என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த படம் வெளியாகவில்லை. இதனிடையே சினிமா நாயகியாக சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக 40-களில் சென்னை வந்த இவர், நாடகங்களில் நடித்து வந்துள்ளார். அப்போது இவரது நடிப்பை பார்த்த இயக்குனர் புல்லையா, தனது கொல்ல பாமா என்ற படத்தில் நாயகியாக நடிக்க வைத்தார்.

அதன்பிறகு அப்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர், நாகேஷ்வரராவ், உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து தமிழ் தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள அஞ்சலி தேவி, 1955-ல் ஜெமினி கணேசனுடன் கணவனே கண் கண்ட தெய்வம், சிவாஜி கணேசனுடன் முதல் தேதி, நான் சொல்லும் ரகசியம், சக்ரவர்த்தி திருமகள், மன்னாதி மன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்த அஞ்சலி தேவி, 50-களில் இந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வந்தார்.

தெலுங்கில் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ள அஞ்சலி தேவி லவகுசா படத்தில் சீதையாக நடித்து புகழ்பெற்றார். இந்த படத்தில் என்.டி.ஆர் நாயகனாக நடித்திருந்தார். தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை 1940-ம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் ஆதிநாராயணா என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அஞ்சலி தேவிக்கு 2 மகன்கள் உள்ளனர். நடிப்பில் முத்திரை பதித்த அஞ்சலி தேவி தயாரிப்பிலும் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தார்.

50 களில் முன்னணி நடிகையாக கலக்கிய அஞ்சலி தேவி, எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்த நிலையில், உரிமைக்குரல் படத்தில் அவருக்கு அண்ணியாக நடித்திருப்பார். அதேபோல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அன்னை ஓர் ஆலயம் படத்திலும் நடித்திருப்பார். கடைசியாக கடந்த 1987-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் காதல் பரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார் அஞ்சலி தேவி. தென்னிந்தியாவில் நடிகர் சங்க தலைவியாக இருந்த இவர், முதல் பெண் தலைவி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

4 முறை ஃபிலிம்பேர் விருது பெற்றுள்ள அஞ்சலி தேவி, தெலுங்கு திரையுலகில் நீண்ட காலமாக பணியாற்றியதற்காக கடந்த 2005-ம் ஆண்டு ரகுபதி வெங்கையா விருது பெற்றிருந்தார். நடிப்பிலும், பட தயாரிப்பிலும் தனக்கென தனி ஆளுமையை செலுத்தி இருந்த அஞ்சலி தேவி கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது 86-வது வயதில் மரணமடைந்தார்.

தமிழச்சி கயல்விழி

Leave a Reply