• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விசா விதிகளை கடுமையாக்கும் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா, தனது குடியேற்றக் கொள்கையை மேலும் கடுமையாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமது நாட்டில் குடியேறுவோரின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அந்த நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.
  
குடியேறுவோரின் எண்ணிக்கை குறைக்கும் அவுஸ்திரேலியா அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜுன் மாதத்திற்குள் கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர் இருந்ததை போன்று வருடாந்தம் உள்வாங்கப்படும் குடியேற்றவாசிகள் எண்ணிக்கையை 2 இலட்சத்து 50 ஆயிரமாக மட்டுப்படுத்தவுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

புதிய திட்டத்தின் கீழ் சர்வதேச மாணவர்கள் மற்றும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான விசா விதிகளும் கடுமையாக்கப்படவுள்ளது.

அவுஸ்திரேலியாவில் குடியேறுவோரின் எண்ணிக்கை சாதனை மட்டத்தை பதிவுசெய்துள்ளது. இது வீட்டு வசதி மற்றும் உட்கட்டமைப்பு போன்ற விடயங்களில் நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

எனினும் திறமையான தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை காணப்படுகின்ற நிலையில், அவ்வாறானவர்களை ஈர்ப்பதற்கு நாடு சவாலை எதிர்கொண்டுள்ளது.

இந்த நிலையிலேயே புதிய 10 ஆண்டுகால குடியேற்ற மூலோபாயத்தை அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் Clare O'Neil வெளியிட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கங்களால் இந்த குடியேற்ற கட்டமைப்பானது சிதைவடைந்துள்ளதாகவும் அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் ஜுன் மாதம் வரையான காலப் பகுதி வரை 5 இலட்சத்து 10 ஆயிரம் பேர் அவுஸ்திரேலியாவிற்குள் வந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த எண்ணிக்கையை தமது அரசாங்கம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் எனவும் இந்த ஆண்டு குடியேற்றத்தை 50 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

அந்த வகையில் புதிய நடவடிக்கைகளின் கீழ் சர்வதேச மாணவர்களுக்கான ஆங்கில மொழித் தேவை கடுமையாக்கப்படவுள்ளதுடன், விசாவிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மேலதிகமான ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு மேலதிக படிப்பும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ தரவுகளின்படி, அவுஸ்திரேலியாவில் சுமார் 650,000 வெளிநாட்டு மாணவர்கள் உள்ளதுடன், அவர்களில் பலர் இரண்டாவது தடவையாக புதுப்பிக்கப்பட்ட வீசாவிலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply