• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் பேரவையினரிடம் தீர்வு கோரிய நல்லை ஆதீன செயலாளர்

இலங்கை

நல்லை ஆதீனத்திற்கு பலர் வருகை தந்து சந்திப்புகளை மேற்கொள்கின்றார்கள். பிறகு அவ்வாறே போய்விடுவார்கள் ஆனால் எந்த முடிவோ எந்த தீர்வும் எட்டப்படுவதில்லை என உலக தமிழ் பேரவையினரிடம், தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் தலைவரும், நல்லை ஆதீனத்தின் செயலாளருமான கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார்.

உலக தமிழ் பேரவையினர், இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில், நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து கலந்துரையாடிய போதே , ஆறுதிருமுருகன் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் “நீங்கள் எல்லாருமாக இங்கே வந்திருக்கிறீர்கள். நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியவில்லை. உங்களைப்போல் பலர் இங்கே வருகை தந்து சந்திப்புகளை மேற்கொள்கின்றார்கள். பின்னர் அவ்வாறே போய்விடுவார்கள். அதனால், எந்த முடிவோ எந்த தீர்வோ எட்டப்படுவதில்லை.

குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூட நீங்கள் இருக்கும் கதிரையில் இருந்து என்னிடம் பல பிரச்சினைகளை கேட்டறிந்தார். நாங்களும் பல விடயங்களை கூறினோம். அவ்வாறே போய்விட்டார். எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் திருப்பணிவேலைகளை செய்ய முடியாதுள்ளது அங்கே பல இடர்பாடுகள் தொல்பொருள் திணைக் களத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றது.

அதேபோல காங்கேசன் துறை பகுதியை எடுத்துக்கொண்டால், எங்களுடைய சித்தர்கள் இருந்த இடங்கள் சமாதிகளை இடித்து புராதன கோவில்களை இடித்து ஜனாதிபதி மாளிகையினை கட்டி விட்டு இன்று அந்த இடத்தை வேறு யாருக்கோ விற்க முற்படுகிறார்கள்.

இது எல்லாம் பிழையான விடயம் தானே ? முதலில் இந்த பிரச்சனைகளுக்கு, தீர்வு காணும் போது தான் எமக்கு ஒரு நம்பிக்கை வரும். தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்று தருவீர்கள் என்று.

எனவே, இந்த விடயத்தை உடனடியாக கருத்தில் எடுத்து இதனை செயல்படுத்த நீங்கள் முன் வாருங்கள் பார்ப்போம். அதேபோல இந்த பிரச்சனை தொடர்பில் அஸ்திரிய பீடத்தினர் கூட இங்கே வருகை தந்து ஆதினத்தை சந்தித்த போது பல விடயங்களை எடுத்துரைத்தோம்.

அவையும் , காற்றில் போய்விட்டது. அதேபோல நீங்களும் போக கூடாது. நீங்களும் இந்த விடயங்களை கருத்தில் எடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் “என தெரிவித்தார்.
 

Leave a Reply