• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரான்சில் நிறைவேறியது புதிய சட்டம் 

பிரான்சில், கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு ஆதரவாக, ‘கிராமப்புற ஒலிகள் மற்றும் நாற்ற சட்டம்' ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களிலிருந்து கிராமங்களுக்கு புதிதாக வருபவர்களிடமிருந்து விவசாயிகளுக்கு கூடுதல் பாதுகாப்பளிக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

பிரான்சில் இனி கால்நடைகளின் சத்தம் தொந்தரவு செய்வதாக புகாரளிக்கமுடியாது

பிரான்ஸின் கிராமப்புறங்களுக்குச் செல்லும் நகர மக்கள், சேவல்கள் கூவும் சத்தம், நாய்கள் குரைக்கும் சத்தம், விவசாய இயந்திரங்கள் சத்தம், அல்லது தாங்க முடியாத அளவிலான சாணத்தின் நாற்றம் ஆகியவற்றைக் குறித்து இனி புகார் கொடுப்பது அவ்வளவு சுலபமாக இருக்காது.

அக்கம்பக்கத்து வீடுகளுக்கிடையே ஏற்படும் மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும், புதிதாக கிராமங்களுக்கு வாழ வரும் நகர்ப்புறவாசிகள், விவசாயிகளுக்கு எதிராக தொடரும் வழக்குகளைத் தவிர்ப்பதற்காகவும் ஒரு சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Nicole Le Peih என்பவரால் முன்வைக்கப்பட்ட இந்த மசோதா, ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானின் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 78 க்கு 12 என்ற வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்த மசோதா, அடுத்து செனேட்டுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

இது தொடர்பாக எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள நீதித்துறை அமைச்சரான Eric Dupond-Moretti, இந்த சட்டம், நமக்கு உணவளிக்கும் தங்கள் ஒரே வேலையைத் தவிர வேறு எதையும் செய்யாத விவசாயிகளுக்கு எதிரான முறைகேடான வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply