• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வட மாகாணத்தின் கல்வி தரத்தை உயர்த்துவதாக ஆளுநரிடம் அதிபர்கள் சங்கம் உறுதி

இலங்கை

வடக்கு மாகாண கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்வதற்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக வட மாகாண அதிபர்கள் சங்கத்தினர், மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் உறுதியளித்தனர்.

வட மாகாண அதிபர்கள் சங்கத்தின் தலைவர் த. ஜெயந்தன் தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்துக்கு வருகை தந்தபோதே இவ்வாறு உறுதியளித்தனர்.

வட மாகாணத்தில் அதிகரித்துள்ள பாடசாலை இடைவிலகல், பிரத்தியேக வகுப்புகளுக்கு அதிக நேரத்தை செலவிடுதல், இணை பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பு குறைந்திருத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தனது கவலையை வெளியிட்ட ஆளுநர், இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும் எனவும் கூறினார்.

மாணவர்கள் மீது அதிக அழுத்தங்களை பிரயோகிப்பதால், அவர்கள் மனநிலை ரீதியாக பாதிக்கப்படுவதாகவும், வாழ்க்கையின் அடுத்த நகர்வுக்கு அது இடையூறாக அமைவதாகவும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஆகவே, பாடசாலை கற்பித்தல் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதோடு, இணை பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர், வட மாகாண அதிபர்கள் சங்கத்தினர் ஆளுநரின் ஆலோசனைகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக தெரிவித்ததோடு, இவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

அத்துடன் வட மாகாண கல்வி மேம்பாட்டை முன்னெடுப்பதற்கு தேவையான 19 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினையும் அதிபர்கள் சங்கத்தினர் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் கையளித்தனர்.
 

Leave a Reply