• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரையுலகில் பணக்காரனாவது ஒரே இரவில் நடந்துவிடும் மாயம்.

சினிமா

அது வரை அன்னக்காவடிகள் அடுத்த நாள் அடித்த ஜாக்பாட்டாக வாழ்க்கை அப்படியே மாறிவிடும்.ஆனால் அதே ஜாக்பாட் கனவுகளிலேயே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தால் அதள பாதாளத்திற்கு சத்தமில்லாமல் இழுத்துச் செல்வதும் இதே திரையுலகம் தான்.இங்கு சம்பாதித்தவர் ஏராளம்.தொலைத்தவர்கள்  தாராளம்.தக்க வைத்துக்கொண்டவர் வெகு சிலர் தான்.அதில் முக்கியமானவர் காதல் மன்னன் கணேசன்.
திரையுலகில் சேர்த்து வைத்த சொத்துக்களை மென் மேலும் பெருக்கியவர் ஜெமினி.சினிமாவில் சம்பாதித்த சொத்துக்களை  வீண் செலவுகள் செய்யாமல் புத்திசாலித்தனமாக முதலீடு செய்த வெகு சிலரில் அவரும் ஒருவர்.அவரது புத்திசாலித்தனத்திற்கு அடையாளமாக இன்றும் நிற்கிறது அந்த பங்களா.ரெட் லின்ச் என்ற பெயரில் கொடைக்கானலில் ஜெமினியின் திரைப்படங்களைப் போலவே ஒரு நினைவுச் சின்னமாக இன்றும் நிற்கிறது இந்த பங்களா.இது வந்த வரலாறு சுவார்ஸ்யமானது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஏறக்குறைய பத்து கிரவுண்ட் நிலத்தை வாங்கிய ஜெமினி அதில் அருமையானதொரு பங்களாவைக் கட்டினார்.புது மனை புகு விழாவை அமர்க்களமாக அவர் கொண்டாடினார்.அன்றைய திரைத் துறை பிரபலங்கள் போக ரசிகர்களும் வந்திருந்து வாழ்த்தினார்கள்.அவருக்குப் பிரியமான காமராஜரோடு அண்ணா கருணாநிதி என திராவிட இயக்கமும் அதில் கலந்துகொண்டது நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம்.ஆனால் இந்த கொடைக்கானல் பங்களா வந்த விதம் நிறைய பேருக்குத் தெரியாது.

பாசமலர் படப்பிடிப்பிற்காக சாவித்திரி ஜெமினி ஜோடி கொடைக்கானலில் வந்திறங்கியது.அப்போது தான் இந்த ரெட் லின்ச் ஜெமினி கண்ணில்பட்டது.நல்லாயிருக்கில்லம்மா.!.. அருகிலிருந்த சாவித்திரியிடம் காட்ட அவரது பங்காக பியூட்டிஃபுல்.நான்கு ஏக்கர் பரப்பளவு.சுற்றிலும் ரம்மியமான தோட்டம்.பல வகை வண்ண மலர்களோடு வித்தியாசமான பழ மரங்கள்.நட்ட நடுவே அமைதியான பங்களா.யாரப்பா ஓனரு.?. ஐயா ஒரு வெள்ளைக்கார துரைங்க.பேரு ஹேவர்ட்ஸ் துரை.ஏது இந்த பிரான்டி விஸ்கி தயாரிக்கும் ஹேவர்ட்ஸா?. அவரேதாங்க.பிரிட்டீஷ் ஆட்சியில துரை வாங்கிப்போட்டது.ஆட்சி போனதும் ஒருத்தரை கவனிக்கச் சொல்லீட்டு துரை லண்டன் போயிட்டாருங்க.விக்கிற மூடுல தான் துரை இருக்காரு.அப்படியா!.. செட்டியாரு வந்து பாத்திட்டு போனாரு.எந்த செட்டியார்.மதுரைல கருமுத்து செட்டியாருங்க.டி.வி.எஸ்.குரூப் கூட வாங்கப்போறதா பேசிக்கிறாங்க.ஜெமினி ஆர்வமானார்.
 

செட்டியாரை அவருக்கு நன்றாகவே தெரியும்.ஷூட்டிங் முடிந்து கீழே இறங்கினார்.நேராக செட்டியார் வீட்டுக்குப் போனார்.வாங்க வாங்க!.. ஏது இந்தப் பக்கம்?. கொடைக்கானல்ல ஒரு ஷூட்டிங்.அப்படியே உங்களையும் பாத்திட்டு போகலாம்னு வந்தேன்.அப்புறம் செட்டியார் என ஆரம்பித்தார் ஜெமினி.கொடைக்கானல்ல எனக்கொரு நல்ல பங்களா வேணுமே.அதுக்கென்ன ஏற்பாடு செஞ்சிட்டாப் போச்சு. வர்ர வழியில அழகான பங்களா ஒண்ணு பார்த்தேன்.ரெட் லின்ச்.அடடே!.. நம்ம ஹேவர்ட்ஸ் பங்களா.செட்டியார் சிக்கினார்.துரை உங்க ஃபிரெண்டுன்னு கேள்விப்பட்டேன்.ஆமாம்மா!.. பங்களாவை விக்கச் சொல்லீட்டாரு.அதோட டீடெல்ஸ் கொஞ்சம் வேணுமே.நீங்க தான் கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும்.செட்டியாருக்கு வேறு வழியில்லை.

அதனாலென்ன பேஷா செஞ்சிடலாம்.உங்கிட்ட சொல்றதுல என்ன?. நானே வாங்கணும்னு தான் நெனச்சிட்டு இருந்தேன்.நீங்களே விரும்பி கேக்குறீங்க.ஹேவார்ட்ஸூக்கு நானே எழுதி போடறேன்.சொல்லிவிட்டாரே ஒழிய ஜெமினி சும்மாயிருக்கவில்லை.அட்ரஸ் வாங்கி தனது கைப்பட அவரே ஹேவர்ட்ஸூக்கு ஒரு கடிதம் எழுதினார்.

ஹலோ ஹேவர்ட்ஸ் என ஆரம்பித்து கொடைக்கானல் ஷூட்டிங் போனபோது உங்க பங்களாவை பார்த்தேன்.நீங்க விற்க இருப்பதாக செய்தி கிடைத்தது.என் மனதில் பதிந்துவிட்ட அந்த பங்களாவை எனக்கே கொடுத்தால் சந்தோஷப்படுவேன்.இப்படிக்கு ஜெமினி கணேசன்.பின் குறிப்பு.இவ்வளவு அழகான பங்களாவை விற்க எப்படி சார் மனசு வந்தது?. நானாக இருந்தால் கண்டிப்பாக விற்கமாட்டேன்.வெள்ளைக்காரர்களுக்கு ஒரு பழக்கம்.தனது சொத்துக்களை யார் ஒழுங்காக பராமரிக்கிறார்களோ அவர்களிடம் ஒப்படைக்கத் தான் விரும்புவார்கள்.ஹேவார்ட்ஸ் பதில் கடிதம் போட்டார்.

டியர் ஜெமினி சார் உங்களுக்கு என் பங்களா பிடித்ததில் சந்தோஷம்.மெட்ராஸில் ஜப்பார் என்பவரிடம் எல்லா பொறுப்புகளையும் ஒப்படைத்திருக்கிறேன்.நான் அவரிடம் உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன்.நீங்கள் அவரை நேரடியாக அணுகலாம்.
வணக்கம் ஜப்பார்.நான் ஜெமினி கணேசன்.ஹேவர்ட்ஸ் என்னைப் பத்தி ஏதாவது  சொன்னாரா?. வாங்க சார்.அந்த கொடைக்கானல் பங்களா என்ன ரேட்டப்பா?. என்ன விலை தரலாம் சார்.ஜெமினி அடித்த பந்தை அவரிடமே திருப்பி அடித்தார் ஜப்பார்.நீங்க மூணு லட்சம் எதிர்பார்ப்பதாக கேள்விப்பட்டேன்.ஃபைனல் ரேட்டை நீங்க தான் சொல்லணும்.திரும்பவும் பந்து ஜப்பாரிடமே சென்றது.அவர் சிரித்தபடியே ஒரு லட்சம் சார் என்றார்.ஆச்சரியம் அடைந்தார் ஜெமினி.என்னப்பா இது!.. உண்மையாகவா?. ஒரு லட்சத்து பத்தாயிரம் தர்ரேன்.இப்பவே முடிச்சிடலாம்.இந்தாங்க அட்வான்ஸ் என  பத்தாயிரத்திற்கான செக் கை மாறியது.சிரித்துக்கொண்டே வாங்கிய ஜப்பார் சார் ஒரு நிமிஷம்.இந்த தந்தியைப் பாருங்க.ஹேவர்ட்ஸ் அனுப்பியிருந்த தந்தி.அதில் ஜெமினி என்ன விலை சொன்னாலும் பங்களாவை அவருக்கே கொடுத்துவிடவும் என அதில் எழுதியிருந்தது.

சார் நீங்க வெறும் பத்தாயிரம் தான் தருவேன் என்றிருந்தாலும் பங்களாவை உங்களுக்கே தந்திருப்பேன்.என்ன பண்றது.நானொரு பிஸினஸ் மேன்.அதனால தான் விலையை பேசீட்டு தந்தியை காட்டினேன் என்றார்.ஜெமினி வாயடைத்துப்போனார்.1961 ல் வெறும் லட்சத்து பத்தாயிரம்.இன்றைய அதன் மதிப்பு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.ஜெமினியின் பின் குறிப்பு அழகாக ஒர்க் அவுட் ஆக இன்று அவரது வாரிசுகள் கோடையில் இளைப்பாறி மகிழ அருமையான ரெட் லின்ச் ஒவ்வொரு கோடைக்கும் அவர்களை வரவேற்க காத்துக்கொண்டிருக்கிறது குளு குளு கொடைக்கானலில்.

Meena Gandhi
 

 

Leave a Reply