• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உச்சக்கட்ட போரால் முடங்கிய மருத்துவமனை - 179 சடலங்கள் மொத்தமாக புதைக்கப்பட்ட அவலம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் காரணமாக காசா பகுதியில் அமைந்து இருக்கும் மிகப் பெரிய மருத்துவமனையில் கண்கலங்க செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. போர் காரணமாக கடந்த 72 மணி நேரத்திற்கும் அதிகமாக மின்சாரம், தண்ணீர் மற்றும் உணவு என எந்த விதமான அத்தியாவசிய சேவையும் கிடைக்காமல் மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

அத்தியாவசிய வசதிகள் இல்லாத காரணத்தால், அல் ஷிஃபா மருத்துவமனையின் செயல்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மருத்துவமனையில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழந்த சடலங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அடக்கம் செய்வதற்கான வசதிகள் இல்லாத அவல நிலை உருவாகி இருக்கிறது. 

இதன் காரணமாக 179 சடலங்கள் அல் ஷிஃபா மருத்துவமனை வளாகத்தின் உள்ளேயே மொத்தமாக புதைக்கப்பட்டதாக மருத்துவமனையின் தலைவர் முகமது அபு சல்மியா அதிர்ச்சி தகவல் தெரிவித்து இருக்கிறார். வேறு வழியில்லாமல் சடலங்களை மொத்தமாக புதைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மருத்துவமனை வளாகம் முழுக்க சடலங்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக செய்தியாளர் ஒருவர் தகவல் தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர், இங்குள்ள சூழல் மனிதாபிமானமற்றதாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். இதோடு மருத்துவமனையில் மின்சாரம், தண்ணீர் மற்றும் உணவு என எதுவுமே இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

அல் ஷிஃபா மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்த காரணத்தால், வெளியுலகத்துடனான தொடர்பை இழந்துள்ளது. மருத்துவமனைகளின் அடிதளத்தில் சுரங்கப்பாதை அமைத்து ஹமாஸ் அமைப்பினர் மறைந்து இருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி அதற்கான ஆதாரங்களையும் சமீபத்தில் வெளியிட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஹமாஸ் மற்றும் காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் முழுமையாக மறுத்துள்ளனர்.

இது குறித்து ஐ.நா. வெளியிட்டு இருக்கும் அறிக்கையின் படி, அல் ஷிஃபா மருத்துவமனையினுள் நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் இடம்பெயர்ந்த குடிமக்கள் என மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என்று தெரிவித்து இருக்கிறது. கடுமையான மோதல் காரணமாக மருத்துவமனையில் இருந்து தப்பிக்க முடியாமல் அவர்கள் சிக்கியிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

Leave a Reply