• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முதல் நூல்

இலங்கை

எமது  முதல் நூல்  1979 இல் வெளிவருகிறது.அது எனது  தனி நூல் அல்ல  கூட்டாக எழுதிய நூல்.   நான், எம் ஏ  நுஃமான், மௌ சித்திரலேகா  மூவரும் இணைந்து  எழுதிய நூல்   அது.அப்போது  நான் பாடசாலை  ஆசிரியர்  சித்திரலேகாவும்  நுஃமானும்  யாழ் பல்க லைக் கழக  விரிவுரையாளர்கள்
 அதன் பெயர் 
 20 ஆம் நூற்றாண்டு  ஈழத்து தமிழ் இலக்கியம் என்பதாகும்
இந்நூல், இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சிப் போக்குகளைத் திரட்டிக் கூறுகின்றது.
பல்கலைக்கழகப் பரீட்சைகளுக்குத் தமிழை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும், ஈழத்து இலக்கியத்தில் அக்கறையுள்ள பொது வாசகர்களுக்கும், 
ஈழத்து நவீன தமிழ் இலக்கியம் பற்றி அறியும் ஆர்வமுடைய ஈழத்தவர் அல்லாத தமிழ் வாசகர்களுக்கும் பயன்படத்தக்கமுறையில் இந்நூல் அமைந்துள்ளது.
ஈழத்து  இலக்கியத்தை  அறிய விரும்புபவர்களுக்கு  அவர்களை  ஆற்றுப்படுத்தும்  விதத்தில்  ஓர் பின்னிணைப்பையும்  இணைத்திருந்தோம்
116  பக்கங்கள் கொண்டது  இந்நூல்
. அதன்
உள்ளடக்கம்  இவை
முன்னுரை
ஈழத்து இலக்கிய வரலாறு-
ஓர் அறிமுகம் 
கவிதை 
நாவல் 
சிறுகதை 
நாடகம் 
விமர்சனம் 
அதன் முன்னுரை  இவ்வாறு அமைந்திருந்தது
முன்னுரை
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின், இன்று வரையுள்ள பொதுவான வளர்ச்சிப் போக்குகளைத் திரட்டிக் கூறுவதே இந்நூலின் நோக்கமாகும். பல்கலைக் கழகப் பரீட்சைகளுக்குத் தமிழை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும் ஈழத்து இலக்கியத்தில் அக்கறையுள்ள பொது வாசகர்களுக்கும், ஈழத்து நவீன தமிழ் இலக்கியம் பற்றி அறியும் ஆர்வம் உடைய ஈழத்தவர் அல்லாத தமிழ் வாசகர்களுக்கும் பயன்படத்தக்க வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
'ஈழத்தில் தமிழ் இலக்கியம் ஆரோக்கியமான திசையில் வளர்ச்சியடைந்துள்ளது' என்ற ஒரு பொதுவான அபிப்பிராயம் இன்று நிலவுகின்றது. தமிழகத்தில் ஈழத்து இலக்கியம் பற்றி அறியும் ஆர்வம் பரவலாகக் காணப்படுகின்றது. ஆயினும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றையும், வளர்ச்சி நிலைகளையும் முழுமையாகக் கூறும் நூல் எதுவும் இன்று வரை தோன்றவில்லை. 
எனினும் அத்தகைய முழுமையான நூல் ஒன்று எழுதப்படுவதற்கான சான்றுகளையும், தகவல்களையும் திரட்டிக் கூறும் பல நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் இங்கே வெளிவந்து ள்ளன.
பொதுவாக இவற்றை நாம் மூன்று பிரிவுகளுக்குள் அடக்கலாம்.
1. ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றையும், அவர்கள் எழுதிய நூல்கள் பற்றிய குறிப்புகளையும் தருவன. 1856ல் வெளிவந்த சைமன் காசிச் செட்டியின் 'தமிழ் புளூட்டாக்' முதல் 1967ல் வெளிவந்த மு.கணபதிப்பிள்ளையின் 'ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்' வரை இப்பிரிவில் அடங்கும்.
2. ஈழத்தவரின் தமிழ்தொண்டு பற்றியன. தமிழ் உரைநடை வளர்ச்சியில் ஈழத்தவரின் பங்கு, பதிப்புப் பணியில் ஈழத்தவரின் இடம், முஸ்லீம்களின் தமிழ்த்தொண்டு போன்ற விசயங்களை மதிப்பிடும் முயற்சிகள் இவற்றுள் அடங்கும். பேராசிரியர்கள் க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம், சு. வித்தியானந்தன், கலாநிதி பொ. பூலோகசிங்கம், எம்.எம்.உவைஸ், எஸ்.எம். கமால்தீன் முதலியோர் இத்துறையில் பல கட்டுரைகள் எழுதியுள்ளனர். பொ. பூலோகசிங்கத்தின் 'தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞர் பெரு முயற்சிகள்' இவ்வகையில் முக்கியத்துவம் உடைய நூலாகும்.
3. வரலாற்று நோக்கில் வெவ்வேறு கால கட்டங்களுக்குரிய ஈழத்து இலக்கிய முயற்சிகள் பற்றி இலக்கியவடிவ ரீதியாகவும் பொதுவாகவும் தொகுத்துக் கூறுவன. பேராசிரியர். ஆ.சதாசிவம் தொகுத்த 'ஈழத்துத் தமிழ் கவிதைக் களஞ்சியம் '(1966) முதல், பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஈழத்தில் தமிழ் இலக்கியம் வரை இப்பிரிவில் அடங்கும். பேராசிரியர் க. கைலாசபதியும் இவ்வகையில் அநேக கட்டுரைகள்எழுதியுள்ளார்.
இவ்வாறு, ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி வெளிவந்த நூல்கள், முக்கியமான கட்டுரைகள் பல இடம்பெற்ற சிறப்பிதழ்கள் பற்றிய விபரங்களை இந்நூலின் இறுதியில் பின் இணைப்பாகச் சேர்த்துள்ளோம். 
மேற்குறிப்பிட்ட வகையான ஆய்வு நூல்கள் இன்னும் பல வெளிவர வேண்டும். இவ்வாறு பல்வேறு ஆய்வுகளூம் வெளிவந்து ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய ஐயப்பாடுகள் தெளிவான நிலையில்தான் ஈழத்து இலக்கியம் பற்றிய முழுமையான வரலாற்று நூல் எழுதப்படுதல் சாத்தியமாகும். 
இருபதாம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சி நெறிகளைத் தொகுத்துக் கூறும் இந்நூல் அத்தகைய ஒரு முழுமையான வரலாற்று நூல் உருவாகுவதற்குப் பயன்படக்கூடிய முக்கியமான நூல்களுள் ஒன்றாக அமையும் என நம்புகிறோம்.
இந்நூல் ஆறு அத்தியாயங்களாக அமைந்துள்ளது. 
முதல் அத்தியாயம் ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு ஓர் அறிமுகமாக அமைவதோடு, இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இலக்கியத்தின் விசேடமான சில பொதுப் பண்புகளையும் திரட்டிக் கூறுகிறது. 
அடுத்துவரும் அத்தியாங்களில் கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், விமர்சனம் ஆகிய துறைகளில் காணப்படும் வளர்ச்சிப் போக்குகள் தனித்தனியாக ஆராயப்படுகின்றன. 

நாடகம் முற்றிலும் இலக்கிய வடிவம் அல்ல; அது ஓர் அரங்கக் கலையும் ஆகும். ஆகவே நாடக வளர்ச்சி பற்றிய கட்டுரையில் நாடக அரங்க அபிவிருத்திகளும் இணைத்து நோக்கப்பட்டுள்ளன.
இலக்கியம் சமுதாய நடைமுறையின் ஓர் வெளிப்பாடு ஆகும். சமுதாய வளர்ச்சிப் போக்குகளே இலக்கிய வளர்ச்சிப் போக்குகளை இறுதியாக நிர்ணயிக்கின்றன. அவ்வகையில் இந்த நூற்றாண்டின் ஈழத்து சமூக, அரசியல் வளர்ச்சிப் போக்குகளின் பின்னணியிலேயே இந்நூலின் ஈழத்து இலக்கியம் நோக்கப்பட்டுள்ளது. 
இலக்கிய வளர்ச்சி தனித்தனி வடிவங்களின் அடிப்படையில் நோக்கப்பட்டதால் சமுதாயப் பின்னணி பற்றிய குறிப்புக்கள் திரும்பத் திரும்ப இடம் பெறுவது தவிர்க்க முடியாததே. ஓரு வகையில் இலக்கியத்தின் சமுதாய அடிப்படையை அது மேலும் வலியுறுத்துவதாகவும் அமையும்.
சமகால ஈழத்து இலக்கியத்தில் ஏதோ ஒரு துறையிலேனும் ஈடுபாடு கொண்டுள்ள படைப்பாளிகள் அநேகர் உள்ளனர். 
குறிப்பாக கவிதை, சிறுகதைத் துறைகளில் இவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் உள்ளது. இவர்கள் எல்லோருடைய பெயர்களும் இந்நூலில் இடம் பெறுவது சாத்தியமல்ல;அது அவசியமுமல்ல. 
ஆயினும் பெயர்களை முடிந்த அளவு குறைத்து பொதுப்பண்புகளை மட்டும் சுட்டிச் செல்வதிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
 எழுத்தாளர்கள் இல்லாமல் இலக்கியப் பண்புகளும் இல்லை. ஆகவே ஏதோ ஒரு வகையில் முக்கியமானவர்கள் என்று கருதக்கூடியவர்களின் பெயர்கள் இந்நூலில் சற்று கூடுதலாகவே இடம் பெற்றுள்ளன. 
இடம் பெறாதவர்கள் இடம் பெறத்தகாதவர்கள் என்று பொருளாகாது.
 இந்நூலில் குறைபாடுகள் இருக்கலாம். அவை சுட்டப்படும்போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுவோம்
. ஆயினும் இந்நூல் எழுதப்பட்டதன் நோக்கத்தை இது நிறைவேற்றும் என்றே நம்புகின்றோம்.
இந்நூலாக்கத்தை ஆரம்பத்தில் இருந்தே ஊக்கப்படுத்தி உதவிகள் புரிந்த நண்பர்
 மு. நித்தியானந்தன், 
ஏ.ஜே. கனகரத்தினா 
ஆகியோருக்கும் அட்டை அமைப்பை வழங்கிய உ.சேரனுக்கும் 
அழகிய முறையில் இந்நூலை அச்சிட்டு உதவிய சித்திரா அச்சக உரிமையாளருக்கும் ஊழியர்களுக்கும் எமது நன்றிகள்.
ஆசிரியர்கள்.
பின்னிணைப்பு
ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு உதவும்
நூல்களும் சிறப்பிதழ்களும்
நூல்கள்
கணபதிப்பிள்ளை, சி. இலக்கிய வழி, சுன்னாகம், 1964
கணபதிப்பிள்ளை மு., ஈழநாட்டின் தமிழ்ச்சுடர்மணிகள். சென்னை, 1967
கணேசையர், ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம், யாழ்ப்பாணம், 1939
கந்தையா வி.சீ. மட்டக்களப்புத் தமிழகம், யாழ்ப்பாணம், 1964
குமாரசாமிப்புலவர், தமிழ்ப்புலவர் சரித்திரம், யாழ்ப்பாணம், 1916
சதாசிவம் ஆ., ஈழத்துத் தமிழ்க்கவிதை களஞ்சியம், கொழும்பு 1964
சதாசிவம்பிள்ளை ஆர்ணோல்ட், பாவலர் சரித்திர தீபகம், யாழ்ப்பாணம், 1886
சலீம் ஏ. ஆர். எம்., ஈழத்து முஸ்லீம் புலவர்கள், கொழும்பு, 1962
சிவத்தம்பி, கா, தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், சென்னை 1968,
சிவத்தம்பி, கா. ஈழத்தில் தமிழ் இலக்கியம், சென்னை, 1978.
சுப்பிரமணியம், நா., ஈழத்துத் தமிழ் நாவல்கள், நூல் விபரப்பட்டியல், யாழ்ப்பாணம், 1977.
சுப்பிரமணியம், நா., ஈழத்துத் தமிழ்நாவல் இலக்கியம், யாழ்ப்பாணம், 1978.
செந்திநாதன் கனக., ஈழத்துத் தமிழ்நாவல் வளர்ச்சி, சென்னை, 1967.
செம்பியன் செல்வன், ஈழத்துச் சிறுகதை மணிகள், யாழ்ப்பாணம், 1973.
சொக்கலிங்கம் க., ஈழத்துத் தமிழ்நாடக இலக்கியம்,யாழ்ப்பாணம், 1978.
சொர்ணலிங்கம், ஈழத்தில் நாடகமும் நானும், யாழ்ப்பாணம், 1968.
நடராசா, எம்.எக்ஸ்.சி. ஈழத்துத் தமிழ்நூல் வரலாறு, கொழும்பு, 1972.
பூலோகசிங்கம், பொ., தமிழிலக்கியத்தில் ஈழத்தறிஞர் பெருமுயற்சிகள், கொழும்பு, 1971.
Sivakumaran K.S. Tamil writings in Sri Lanka, Colombo, 1974
Cassiee Chetty Symon, Tamil Plutarch, 1859.
சிறப்பிதழ்கள்
இளந்தென்றல், தமிழ்ச்சங்கம், கொழும்பு வளாகம் 1971-72
தமிழ் சாகித்திய விழா மலர், இலங்கைக் கலாசாரப் பேரவை வெளியீடு, கல்முனை 1975.
தமிழ் இலக்கிய விழா மலர், இலங்கைக் கலாசாரப் பேரவை, யாழ்ப்பாணம், 1972
தினகரன் நாடக விழா மலர், கொழும்பு, 1969.
நாவலர் மாநாட்டு விழா மலர், ஆறுமுக நாவலர் சபை, யாழ்ப்பாணம், 1969.
பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு விழா மலர், நூற்றாண்டு விழாச்சபை வெளியீடு, யாழ்ப்பாணம்,1972.
புதுமை இலக்கியம், தேசிய ஒருமைப்பாட்டு எழுத்தாளர் மாநாட்டு மலர், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கொழும்பு, 1975.
மறுமலர்ச்சிக் காலம், இலக்கியச் சிறப்பிதழ். கலைப் பெருமன்றம், தெல்லிப்பளை, 1973.

Maunaguru Sinniah

Leave a Reply