• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பனிப்பூக்கள் வலையிலிருந்து.... 

சினிமா

விஸ்வநாதனுக்கு ராமமூர்த்தி வயதிலும் அனுபவத்திலும் பெரியவரானதால் அவர் பெயரை முதலில் போட விரும்பினார். ஆனால், என்.எஸ்.கே. ‘வி’ ஃபார் விக்டரி என்ற முறையிலும் பெரியவரானதால் பின்னிருந்து தாங்கிப் பிடிப்பார் என்றும் சமாதானப்படுத்தி விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற பெயரையே இந்த இரட்டையருக்கு வைத்தார். 1952 முதல் இவர்கள் இருவரும் தமிழ்த் திரையுலக இசையின் இலக்கணத்தையே மாற்றினர்.

அதுநாள் வரை சமூகப் படங்களிலும் கர்நாடக ராகங்களின் அடிப்படையில் அமைந்திருந்த திரையிசையை மெல்லிசை என்ற பாதைக்கு அழைத்துச் சென்றது இவர்கள் தான் என்றால் அது மிகையில்லை.

இவர்களின் பெரும்பாலான பாடல்களுக்கு எம்.எஸ்.வி,யின் ஆர்மோனியமே மெட்டமைத்தது. டி.கே.ஆர். அம்மெட்டுகளைப் பாடகர்களுக்கும், இசைக் கலைஞர்களுக்கும் சொல்லிக் கொடுத்து மெருகூட்டும் வேலையைச் செய்தார். இந்த இரட்டையரின் இசைச் சாதனைகளைப் பட்டியலிட்டுச் சுருக்கிவிட முடியாது. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த அதே வேளையில், இடையிசைகளில் புகுந்து விளையாடினர். ஒவ்வொரு படத்திலும் பல புதுமைகளைப் புகுத்தி வந்தனர்.

அக்காலப் பாடல்கள் பெரும்பாலும் காட்சிக்குத் தகுந்தாற்போல் எழுதப்பட்டுப் பின்னர் மெட்டமைக்கப்பட்டவை. படத்தின் கதாபாத்திரத்தின் தன்மைக்கும், காட்சிக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுடன் சொற்கள் எந்த விதத்திலும் சிதைந்து விடக் கூடாது என்பதில் பெரும் கவனம் செலுத்துபவர் எம்.எஸ்.வி. ‘கை கொடுத்த தெய்வம்’ படத்தில் ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ பாடலுக்கு மெட்டமைத்த சமயத்தில் அதில் வந்தவொரு வரி நெருடலை ஏற்படுத்த, கண்ணதாசனிடம்  இப்பாடல் எழுதியது யார் என்றாராம் அவர். கண்ணதாசன், ‘நான் எழுதவில்லை.. இது பாரதியார் எழுதிய பாடல்’ என்று சொன்னதுக்கு அவர் எந்த ஃப்ளோர் ரெகார்டிங்கில் இருக்கிறாரோ தேடி அழைத்து வாருங்கள். ‘பாட்டிசைத்து’ என்பது ‘பாட்டி செத்து’ ன்னு வருது என்ற வெகுளி அவர். இதற்குக் காரணம் தனது ஆரம்ப காலத்தில் பாபநாசம் சிவன், கண்டசாலாவின் குரலில் ‘உலகே மாயம்’ பாடலின் பதிவைக் கேட்டு எம்.எஸ்.வியைக் கூப்பிட்டுக் கன்னத்தில் அறைந்து ‘இவனை மாத்து…உல்கே மாயம் ன்னு பாடறான்’னு சொன்னது தான் என்பார்.

மேலும் அக்காலப் பாடல்களின் காட்சியமைப்புகள் சோகம், கோபம், வெறுப்பு, ஆற்றாமை, மகிழ்ச்சி, காதல், கேளிக்கை, பாசம், ஆன்மீகம் எனப் பலவித உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அமைந்தவை. பெரும்பாலான பாடல்கள் கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டை போன்ற ஜாம்பவான்களால் எழுதப்பட்டவை. பாடல்கள் மட்டுமே ஒரு பார்வையாளனைத் திரையரங்குக்குக் கொண்டு வரும் துருப்புச் சீட்டாகப் பயன்பட்டவை. பீம்சிங், கே.எஸ்.ஜி, கிருஷ்ணன் பஞ்சு போன்றவர்கள் குடும்பப் படங்களும், ஸ்ரீதர், திருலோகச்சந்தர் போன்றவர்கள் காதல் படங்களும், பாலச்சந்தர் சமூக, குடும்பப் படங்களும்  எடுத்து வர அத்தனை சவால்களுக்கும் ஈடுகொடுத்து தனது தனித்தன்மையை வெளிப்படுத்தியவர் எம்.எஸ்.வி.

பழனியப்பன் சுப்பிரமணியம்

Leave a Reply