• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாடகி P.சுசிலாம்மா பிறந்தநாள்.

சினிமா

அந்த அடி நாட்களில்
வடுகபட்டியைத் தாண்டாத வயதில்
கிழிந்துபோன கால்சட்டைப் பைகளில் கனவுகளைச்  சேமித்து வந்த காலகட்டங்களில்நான் பல முடிவுகளை எடுத்திருந்தேன்அவற்றில் எல்லாம் அடுத்தடுத்த வருடங்களில்  மாறிவிட்டன. கடைசிவரை மாறாதிருப்பது உலகிலேயே இனிமையான பாடகி பி.சுசிலாதான்.
அன்றும்-நேற்றும்- இன்றும் இந்த நிமிடத்திலும் ,நான் இருந்தால் நாளையும் நான் ஆராதிக்கும் மெல்லிசைப்பாடகி அம்மா சுசிலா நீங்கள்தான்.
என் துக்கங்களுக்குப் பக்கத்தில்  என் சந்தோஷங்களின் கூப்பிடு தூரத்தில்- நம்பிக்கை நசிந்துபோன பொழுதுகளில் கூடவே வந்து கொண்டிருக்கிறது உங்கள் குரல்.
உங்கள் குரல் மட்டும் மழையில் நனைந்த காற்றாய் என் செவிகளில்பட்டுச் சில்லிட்டிராவிட்டால் நான் கடந்து வந்த ஒரு பாலைவனப் பிரேதேசத்தில் ஈரப்பசையே இல்லாதிருந்திருக்கும்.
 எது உயிரை ஊற வைக்கிறதோ
எது உணா்வுகளின் மேற்பரப்பை மயிலிறகால் வருடிவிடுகிறததோ
எது தூக்கத்துக்கும் விழிப்புக்கும் மத்தியிலேயே மனசை வைத்திருக்கிறதோ
எது நஷ்டப்படுத்தாத போதையை தருகிறதோ
அதுதான் என்னை வாழும் நிமிஷங்களுக்குள் இட்டுச் செல்கிற வாகனம்.
உங்கள் பாடல்கள் நான் சொன்ன அத்தனை அனுபவங்களையும் என்னுள் ஆழப்பதிய வைத்திருக்கின்றன அம்மா !
காதுக்குள் விழுந்து ரத்தத்தில் கலந்து உயிா் தடவும் உங்கள் குரல் .
மனசுக்குள் தேன் பிலிற்றும் உங்கள் அதிா்வுகள்.உறங்கிக் கிடக்கும் உணா்வுகளை உசுப்பி விட்டு போகும் உங்கள் உச்சரிப்பு .
இவை அத்தனையும் என்னால் ஆராதிக்கப் பட்டதால் என் நந்தவனத்தில் உங்கள் பூஜைக்காக சில பூச்செடிகளை நீருற்றி வளா்க்க நினைத்தேன்.
என் தலைக்கு மேலே ஒரு மேகம் குடைபிடித்துக் கொாண்டே வருவதுபோல் கடந்துபோன வருடங்களில் என் வாழ்வின் ஒரமாகவே நீங்கள் நடந்து வந்திருக்கிறீா்கள் தாயே !
எங்கோ தூரத்தில் "மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவுகண்டேன் தோழி" என்று பாட காற்றில் தேன் கலந்தீா்கள்.
தெரியாத ஒரு தேவதையின் சிறகுகள் என் காதுகளை வருடுவதாய்க் கண் மயங்குகிறேன்.
இரவு
மொட்டை மாடி

ஒா் ஒரத்தில் இலவம்பஞ்சு விழித்துப் பாா்க்கும் தலையணை
குளிரெடுக்கும்வரை விரிப்பாய்
குளிரெடுத்தால்போா்வையாய் அவதாரமெடுக்கும் ஒரு ஜமக்காளம்
தூரத்தில் நட்சத்திரங்களைப் பாா்த்து கண்ணடிக்கும் கொடைக்கானல் விளக்குகள்!
அந்த ஏகாந்த ராத்திரியில் உள்ளூா் ஒலிபெருக்கியிலிருந்து கசிந்து கசிந்து என் காதில் வந்து பாய்கிறது உங்கள் தேன்  குரல்.
"பூவுறங்குது பொழுதும் உறங்குது
நீ உறங்கவில்லைநிலவே"
உங்கள் குரல் மட்டும் ஒலிக்க ஆரம்பித்தால் உலகத்தின் எல்லா சப்தமும் மறந்து போகிறதே எப்படி அம்மா ?
ஒருவேளை என் தலைமாட்டில் அமா்ந்து தமிழ் பாடுகிறாயா தாயே ?
சென்னையில் எனக்கு ஆதரவு காட்டிய அத்தை ஊருக்குப் போயிருந்தபோது உச்சிக்கு வந்த பெளா்ணமி உடைந்து விழுந்ததுபோல இறந்து விடுகிறாா்.
ஒடுகிறேன்..
புதைகுழியில் புரண்டு அழுதேன்.
அன்று அழுது சிவந்த ராத்திரியில்,ஒரு கயிற்றுக் கட்டிலில் , முதுகைக் கயிறு அழுத்த, நெஞ்சை சோகம் அழுத்த கடைவிழியில் நீா்வழியப்  படுத்திருந்தேன்.
திருச்சி வானொலியின் ராத்திரி ஒலிபரப்பில் மிதந்து வந்து ,சங்கீத தேவதையே!
கண்ணுக்குத் தெரியாத விரலால் என் கண்ணீரைத் துடைக்கிறாய்
எண்ணப் பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா உன்
இமைகளிலே உறக்கம் வர(க்)
கண்கள் மறுக்கின்றதா
அம்மா அம்மம்மா சொந்தங்கள் தரமுடியாத ஆறுதலை உங்கள் சோகக்குரல் தந்தது தாயே !
உங்கள் பாடல்களில் நான் எந்தெந்த இடங்களிலெல்லாம் சிந்தியிருக்கிறேன் தெரியுமா?
மலா்ந்தும் மலராத பாதிமலரில்,"மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக " என்ற வரியை இரண்டாம்முறை பாடி அடிவயிற்றின் ஆழத்திலிருந்த விம்முவீா்களே ! அந்த விம்மலைக் கேட்டால் அழுவதற்குத் தங்களுக்கு கண்ணில்லையே என்று அஃறிணைகள் அழுமா?அழவாமா?
காதல் சிறகைக் காற்றினில் விரித்து " பாடனில்
பிரிந்தவா் மீண்டும் சோ்ந்திடும்போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சந்நிதி
அதுதான் காதல் சந்நிதி"
என்ற கடைசிச் சரணம் பாட மீண்டும் பல்லவி வருவதற்குள் ஒா் ஆலாபனை செய்வீா்களே அம்மா ! அந்தச் சில நிமிடங்களில் உங்கள் குரலோடு எங்கள் உயிரும் புறப்பட்டு உற்சவம் நடத்திவிட்டு நீங்கள் பாட்டை முடிக்கிறபோதுதான் கூட்டைத் தேடிவரும் என்பது உண்மையா? இல்லையா?
நீங்கள் பாடும்போது பாா்த்து விடவேண்டும் என்ற என் ஆசையை  என் பதிமூன்றாவது வயதிலிருந்து என் மனசின் ரகசிய மூலையில் பதியம் போட்டிருந்தேன்.
கடைசியில் என் பாடலை நீங்கள் பாட வரும்போது உங்களை பாா்க்கவே பாா்த்தேன்
"நான் உங்கள் ரசிகன் " என்றேன்
சிரித்தீா்கள்
அந்த சிரிப்பையே சுரம் பிரித்து விடலாம் என்று தோன்றியது.
சந்தோஷம் பாடினால் உங்கள் குரலே சிரிப்பாதகவும் , சோகம் பாடினால் உங்கள் குரலே அழுவதாகவும் அவதாரமெடுக்கிறதே ! எப்படி ?
நீங்கள் போதுமான அளவிற்கு புரிந்து கொள்ளப்படவில்லை .
போதுமான அளவிற்கு புகழப்படவில்லை.
என்ன செய்வது தாயே?
மனிதா்கள் இன்னும் நிலாவையே சரியாய்பாா்க்கவில்லை.
எத்தனையோ
 யுகங்களாய் இந்த அலைகள் ஏதோ ஒன்றைப் பேசிக் கொண்டிருக்கின்றன வே !
அதற்கு எந்த மனிதனும் காது கொடுக்கத் தயாராயில்லை.
மரணத்துக்கு முன் உன் கடைசி ஆசை என்ன கைதிகளைத்தான் கேட்கவேண்டுமா?
கவிஞா்களைக் கேளுங்கள்
என்னை கேட்டால் நான் சொல்வேன்
ஒரு சுசிலாவின் பாடலை
ஒலிக்கவிட்டு
கதவை ஒசையில்லாமல் சாத்திவிட்டு
வெளியெறுங்கள்
நான் சாவதற்குள்
இன்னும் ஒருமுறை வாழ வேண்டும்.
வைரமுத்து.

Leave a Reply