• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரொரன்ரோவில் நினைவு நல்லது நூல் அறிமுகம்

கனடா

ரொரன்ரோவில் ‘நினைவு நல்லது’ நூல் அறிமுகம்
பதிவு – 2
நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முதல்நாள் ஏற்பட்ட மண்டபப் பிரச்சனையைத் தீர்த்து, இடமாற்றம்பற்றி அழைக்கப்பட்டவர்களுக்கு அறிவித்துவிட்டு அடுத்தநாள், நவம்பர் 04ஆம் திகதி சனிக்கிழமை, மாலை 4.30க்கு, குறித்த நேரத்தில் கொமாண்டர் பார்க் மண்டபத்தில் நிகழ்ச்சியை ஆரம்பித்தோம்.
என்னிடம் நூலின் பிரதி இருநூறு மட்டுமே இருந்தமையால், தெரிவுசெய்து இருநூறு பேரை மட்டுமே அழைத்திருந்தேன்.  அவர்களின் தொடர்பு விபரங்கள் என்னிடமிருந்ததால் இடமாற்றம்பற்றி அறிவிப்பதில் எவ்வித பிரச்சனையும் இருக்கவில்லை. 
அந்த அறிவிப்பைப் பெற்ற ரொரன்ரோவாழ் இளம் உடகவியலாளர்கள் பலர் அதைத் தமது முகநூல்களில் பகிர்ந்தமையால், இடமாற்றம் பற்றிய செய்தி தமிழ்மக்கள் மத்தியில் மிக விரைவாகப் பரவியது. இம்முறை எனது நூல் வெளியீடு பற்றிய அறிவித்தலை நான் வெளியிடத் தொடங்கியதுமுதல் பல ஊடகவியலாளர்கள் அவற்றைத் தமது முகநூல்களில் பகிர்ந்துகொண்டதை அவதானித்தேன்.  அது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.  அவர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 
நான்கு முப்பதுக்கு நிகழ்ச்சியை ஆரம்பிக்கும்போதே அனேகமானவர்கள் மண்டபத்திற்கு வந்துவிட்டார்கள்.  ரொரன்ரோவில் தமிழ் ஊடக, நாடக, கலை இலக்கிய வட்டத்தில் நன்கு அறியப்பட்ட துஷி ஞானப்பிரகாசம் நிகழ்ச்சிக்குத் தலைமைதாங்கி, தனக்கேயுரிய பாணியில் ஆர்ப்பாட்டமில்லாத, அமைதியான, அளவான தொனியில் அறிமுகங்களைச் செய்து நிகழ்ச்சியை நடத்திச்சென்றார். 
நிகழ்ச்சி செல்வி. க்ருதி கொட்வினின் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கனேடிய தேசிய கீதத்துடன் ஆரம்பமாகியது. க்ருதியின் தாயார் அருட்செல்வியும் தந்தையார் கொட்வினும் ரொரன்ரோ, தமிழ் ஒலிபரப்புத்துறையில் பணியாற்றியவர்கள்.  அருட்செல்வி ரொரன்ரோவுக்கு வந்தபுதிதில் நான் ‘தமிழோசை’ வானொலிக்காக எழுதித் தயாரித்த ‘வாழ்ந்து பார்க்கலாம்’ நாடகத்தில் நடித்தவர்.  கர்நாடக இசை பயின்று அதிலும் சிறந்து விளங்கும் அருட்செல்வி, மகள் க்ருதியை மிகச் சிறப்பாகப் பயிற்றுவித்திருக்கிறார்.  

தலைவர் துஷி ஞானப்பிரகாசம் அன்றைய நிகழ்வு பற்றிய அறிமுகத்தையும் வரவேற்புரையையும் வழங்கி நிகழ்ச்சியை ஆரம்பித்துவைத்தார்.
முதல் நிகழ்ச்சியாக ‘நினைவு நல்லது’ நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைநெறிப் பிரிவினரால் ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அறிமுகம் செய்துவைக்கப்பட்டபோது, அந்த நிகழ்ச்சிக்குத் தலைமைதாங்கி நடத்திவைத்த யாழ். பல்கலைக்கழகக் கலைத்துறைப் பீடாதிபதி பேராசிரியர். எஸ். ரகுராம் வழங்கியிருந்த சிறப்பான உரையின் ஒளிப்பதிவு, ரொரன்ரோ நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்தவர்களுக்குக் காட்டப்பட்டது. இருபது நிமிடங்களுக்கு நீடித்த அந்த உரை, நூல் பற்றிய சிறந்த அறிமுகத்தை அவையோருக்கு வழங்கியது.
தொடர்ந்து ரொரன்ரோவில் இயங்கும் ஏழு ஊடகவியலாளர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். 
ரொரன்ரோவில் முதல்முதலாக 1987ஆம் ஆண்டு, ‘தமிழ்ச்சோலை’ வானொலி நிகழ்ச்சியை ஆரம்பித்தவர்களில் ஒருவரான பா. சிறீஸ்கந்தன் வாழ்த்துரை வழங்க தொடர்ந்து, 1991ஆம் ஆண்டு, ரொரன்ரோவில் ‘தேமதுரம்’ வானொலி நிகழ்ச்சியையும் தேமதுரம் வீடியோ சஞ்சிகையையும் ஆரம்பித்த பரம். ஜி. என்று அறியப்படும் பி. ஞானேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார்.  வாழ்த்துரை வழங்கிய பி. ஞானேஸ்வரன் அவரது அண்ணியும் நூலாசிரியரின் துணைவியாருமாகிய சிவசக்தி விக்னேஸ்வரனை, நினைவு நல்லது நூலுருவாக்கத்தில் அவர் வகித்த முக்கிய பங்குக்காகப் பாராட்டி கௌரவித்தார். 
அவரையடுத்து, இலங்கையில் நீண்டகாலம் பத்திரிகைத் துறையிலும் பின்னர் வானொலியிலும் பணியாற்றிவிட்டு ரொரன்ரோவிலும் மிக நீண்டகாலமாக ‘தமிழர் தகவல்’ சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகத் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் திரு. எஸ். திருச்செல்வம் வாழ்த்துரை வழங்கினார். 
 அடுத்து, இலங்கையில் தமிழ் இலக்கியப் பரப்பில் செயற்பட்டு, ரொரன்ரோ வந்தபின்னர் இங்கு பத்திரிகைத் துறையில் ஈடுபட்டு ‘உதயன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே கலை இலக்கிய, சமூக செயற்பாடுகளில் தொடர்ந்து இயங்கும் என். லோகேந்திரலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். 
 அவரைத் தொடர்ந்து, நான் கல்விகற்ற நடேஸ்வராக் கல்லூரியில் எனது காலத்தின்பின்னர் படித்தவரும் மொன்றியல், ரொரன்ரோ நகரங்களில் நீண்டகாலம் தமிழ் ஒலிபரப்புத் துறையில் ஈடுபட்டவரும் இப்போது ஈஸ்ட் எஃப். எம். என்ற பல்கலாச்சார வானொலிச் சேவையின் அதிபராக விளங்குபவருமான நடா ராஜ்குமார் வாழ்த்துரை வழங்கினார். 
 தொடர்ந்து, காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி பயின்றவரும் இப்போது ரொரன்ரோவில் தமிழ் என்ரற்ரெயின்ற்மென்ற் தொலைக்காட்சி சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமாகிய ராஜி அரசரத்தினம் வாழ்த்துரை வழங்கினார்.  
இறுதியாக, ‘தாய்வீடு’ பத்திரிகையின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் ஒருவரும் ரொரன்ரோ தமிழ் ஊடகப் பரப்பில் இயங்கிக்கொண்டிருப்பவருமான கந்தசாமி கங்காதரன் நினைவு நல்லது தொடரை ஆறு வருடங்களாக வெளியிட்ட தாய்வீடு பத்திரிகையின் சார்பில் வாழ்த்துரை வழங்கினார். 
இந்த வாழ்த்துரைகளைத் தொடர்ந்து, காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவர்சங்கக் கனடாக் கிளையினர் நூலாசிரியரையும் அவரது துணைவியாரையும் வாழ்த்தி கௌரவித்தார்கள்.  
நினைவு நல்லது நூல் அறிமுக நிகழ்ச்சி பற்றிய மேலும் விபரங்கள் எனது அடுத்த பதிவில் தொடரும். 
இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒழுங்கில் கீழே படங்கள் தரப்பட்டிருக்கின்றன.

 

P Wikneswaran Paramananthan

Leave a Reply