• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்: 2 பெரிய ஆஸ்பத்திரிகள் முடங்கியது


இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 37-வது நாளாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா முனை பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

வான்வழி தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகின. காசாவுக்குள் இஸ்ரேலின் தரைப்படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா சிட்டியின் மையப் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்துக்கும்-ஹமாஸ் அமைப்பினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். தொடர் குண்டு வீச்சு காரணமாக ஆயிரக்கணக்கானோர் காசாவில் உள்ள அல்-ஷிபா, அல்-குத்ஸ், அல்-ரான்டி ஆகிய மூன்று பெரிய ஆஸ்பத்திரிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அங்கு காயம் அடைந்தவர்களுக்கும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஆஸ்பத்திரிகளுக்கு அருகே வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. அல்-ஷிபா ஆஸ்பத்திரி நுழைவு வாயில் முன்பு துப்பாக்கி சண்டை நடந்தது. ஆஸ்பத்திரிகளை சுற்றி தாக்குதல் நடந்து வருவதால் நோயாளிகள், தஞ்சம் அடைந்தவர்கள் தவிப்புக் குள்ளாகி இருக்கிறார்கள்.

ஏற்கனவே காசாவில் உணவு, குடிநீர், மின்சாரம், எரிபொருள் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்து வரும் நிலையில் தற்போதைய இஸ்ரேலின் தீவிர தாக்குதல்களால் இரண்டு பெரிய ஆஸ்பத்திரிகளின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியுள்ளது. மிகப்பெரிய மற்றும் முக்கிய ஆஸ்பத்திரியான அல்-ஷிபாவில் எரிபொருள் கையிருப்பு முற்றிலும் தீர்ந்துவிட்டது.

ஜெனரேட்டர்கள் இயங்காததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த 3 குழந்தைகள் உயிரிழந்தன. அந்த ஆஸ்பத்திரியில் குறை பிரசவத்தில் பிறந்த 45 குழந்தைகள் உள்ளன. அதேபோல் அல்-குத்ஸ் ஆஸ்பத்திரியும் முடங்கி உள்ளது.

இது தொடர்பாக அல்-ஷிபா மருத்துவமனை இயக்குனர் கூறும்போது, மின்சாரம் இல்லாததால் அல்-ஷிபா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறைகள் எதுவும் செயல் படவில்லை. காயம் அடைந்து வருபவர்களுக்கு முதல் உதவி தவிர வேறு எந்த சிகச்சை அளிக்க முடியவில்லை. அறுவை சிகிச்சையும் தேவைப்படுவோர் உயிரிழக்கும் சூழல் உள்ளது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை காப்பாற்ற ஊழியர்கள் முயற்சித்து வருகிறார்கள் என்றார்.

இன்குபேட்டரில் இருந்து குழந்தைகள் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இதற்கிடையே உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறும்போது, காசாவின் முக்கிய மருத்துவமனையான அல்-ஷிபாவில் ஒரு மோசமான ஆபத்தான சூழ்நிலை இருக்கிறது. மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்புகள், ஏற்கனவே சிக்கலான சூழ்நிலைகளை மோசமாக்கியுள்ளன. அல்-ஷிபா மருத்துவமனை முற்றிலும் செயல்படவில்லை.

இது வருத்தம் அளிக்கிறது. அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் மின்சாரம், தண்ணீர், இணைய தளம் இல்லை. இதனால் அத்தியாவசிய உதவியை வழங்குவதற்கான எங்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதற்கிடையே அல்-ஷிபா ஆஸ்பத்திரிக்கு 300 லிட்டர் எரிபொருள் வழங்கியதாகவும், ஆனால் அதை ஹமாஸ் அமைப்பு தடுத்ததாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

அல்-ஷிபா மருத்துவமனை கீழே ஹமாசின் நிலத்தடி கட்டமைப்பு செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால் இதை ஹமாஸ் அமைப்பு திட்டவட்டமாக மறுத்தது. இதற்கிடையே அல்-ஷிபா மருத்துவ மனையில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் கூட இல்லை என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள். 17 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.
 

Leave a Reply