• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நல்ல மனிதர்களை எங்கே தேடுவது?...

இலங்கை

தொண்டு செய்வதற்குரிய நிலையங்களை அமைப்பதற்குரிய நிலங்கள் இருக்கின்றது,
அங்கு கட்டடங்களை அமைப்பதற்கு,
பண உதவி செய்வதற்கு பல அன்பர்கள் முன்வருவார்கள் ஆனால் அந்த நிலையங்களில் இருந்து நமது சமூகத்திற்கு தொண்டு செய்வதற்குரிய மனிதர்களை எங்கே தேடுவது?...
நான் சிங்கபூர், மலேசியா போன்ற பல நாடுகளிற்கு சென்ற போது அங்கே உள்ள பல நிறுவனங்களில் ஆகக் குறைந்தது 5 மாற்று திறனாளிகள் பணி செய்து கொண்டு இருப்பார்கள். 
அங்கே உள்ள பல நிறுவனங்கள் மாற்று திறனாளிகளின் வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்தும் நோக்கில்,
தங்களது நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளிற்கு ஏதாவது சிறு சிறு தொழில் வாய்ப்பினை வழங்கி சமூகத்தில் அவர்களையும் தமது உறவுகள் என்ற உயர்ந்த நிலையில் வைத்திருக்கின்றார்கள்.
ஆனால் எமது சமூகத்தில் இந்த உயர்ந்த எண்ணங்கள் இன்னமும் இல்லாமல் இருப்பது மிக வேதனையாக உள்ளது. 
இன்று மாற்றுத் திறனாளிகளை ஆலய வாயில்களில் யாசகம் கேட்டு நிற்கும் காட்சிகளைதான் பார்க்க முடிகின்றதே அல்லாமல் நிறுவனங்களில் வேலை செய்வதை மிக அரிதாக காண முடிகின்றது.
தெய்வக் குழந்தைகளான மாற்று வலுவுடையோருக்காக உருவாக்கப்பட்ட சிவபூமி பாடசாலை உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 
எங்கள் மண்ணில் மாற்று வலுவுடைய தெய்வக் குழந்தைகளிற்கென தனியான பாடசாலை இல்லாத சூழ்நிலையில் சிவபூமி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
அமரத்துவம் அடைந்த கண் வைத்திய நிபுணர் குகதாசன் போன்ற பல நல்ல உள்ளங்களின் ஒத்துழைப்புடன் இந்த பணி வெற்றிகரமான நிறைவடைந்து இன்று பல நூறு பிள்ளைகள் இந்த பாடசாலையிலே கல்வி கற்கின்றார்கள்.
சர்வதேச விசேட ஒலிம்பிக் போட்டியில் மூன்று முறை பங்கு பற்றிய ஒரு வரலாற்று பாடசாலையாக இந்த தெய்வக் குழந்தைகளின் பாடசாலை பெரு விருட்சமாக திகழ்கின்றது.
இங்கு கல்வி கற்கும் பிள்ளைகள் ஆண்டு தோறும் பல நிகழ்வுகளில் பங்கு பற்றி பரிசில் பெற்றுக் கொண்டு இருக்கின்றார்கள். 
வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற நடன போட்டியில் எங்கள் பாடாசலையில் இருந்து கலந்து கொண்ட மாணவன் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளான்.
கடந்த 2020ம் ஆண்டு சிவபூமி மாற்று வலுவுடையோர் பாடசாலையானது இலங்கை முழுவதும் உள்ள பாடசாலைகளில் சிறந்த பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டு முதாலம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இங்கு கல்வி கற்கும் தெய்வக் குழந்தைகள் பிறப்பிலே சில குறைபாடுகளுடன் பிறந்தாலும் அவர்கள் அனைவரும் விசேட பல திறமைகளுடன் இருக்கின்றார்கள்.
இந்தப் பிள்ளைகளிடம் உள்ள பெருந்தன்மையானது இன்று சாதாரன மனிதர்களிடம் காண முடிவதில்லை. ஒரு பிள்ளை விழுந்தால் உடனே ஏனைய பிள்ளைகள் எல்லோரும் ஓடிச் சென்று அந்தப் பிள்ளையை தூக்கி அன்பாக அழைத்து வருவார்கள்.
ஒரு நாளும் இவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்  கொள்வதில்லை. உணவு உண்ணும் போது அருகில் உள்ள பிள்ளைகளிற்கு ஊட்டி விடுவார்கள். இறைவன் கொடுத்த பிறவி இரக்க குணம் இந்தப் பிள்ளைகளிற்கு நிறையவே உண்டு.
சிறு உணவுகளை கூட வீனாக கொட்ட மாட்டார்கள். 21 வருட வரலாற்றிலே இந்தப் பிள்ளைகள் எந்தவொரு கதிரை, மேசையினை உடைத்ததாக வரலாறே இல்லை அந்த அளவிற்கு மிகவும் பண்புடன் கல்வி கற்கின்றார்கள்.
சாதாரனமாக ஏனைய பாடசாலைகளில் ஒவ்வொரு ஆண்டும் உடைக்கப்படுகின்ற கதிரை மேசைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் ஆனால் இந்த தெய்வக் குழந்தைகள் அவ்வாறு நடப்பதில்லை. 

ஒரு பிள்ளை தவறுதலாக சிறு குப்பையினை கீழே பேட்டு விட்டால் எல்லா பிள்ளைகளும் ஓடிச் சென்று உடனே அந்த குப்பையினை எடுத்து தொட்டியிலே போடுவார்கள்.
இத்தகைய பண்புகள் தற்கால மனிதர்களிடம் காண்பது பெரிதும் அரிதாகவே உள்ளது. இந்த மாணவர்களின் நடத்தை மற்றும் ஒழுங்கை பார்த்து ஏனைய சாதாரண மாணவர்கள் திருந்தி நடக்க வேண்டும்.
எங்கள் பாடசாலையிலே பல நூறு பிள்ளைகள் படிக்கின்றார்கள் ஆனால் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒழுங்காக அனுப்பவதில்லை. 
அவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்றால் இவர்கள் வளர்ந்து என்ன செய்யப் போகின்றார்கள்?
உண்மையில் சிவபூமி பாடசாலையில் வாழ்வாதார பயிற்சி வழங்கப்படுகின்றது சிறு சிறு தொழில்களை செய்வதற்குரிய முறையான பயிற்சி வழங்கப்படுகின்றது. 
இங்கு படித்த பல மாணவர்கள் உத்தியோகம் பெற்று நல்ல முறையிலே தொழில் செய்கின்றார்கள்.
சிங்கப்பூர் நாட்டிலே பிரதமராக இருந்தவர் ஒரு அறிவிப்பினை வெளியிட்டார் அதாவது எந்த தொழிற்சாலையாக இருந்தாலும் நிறுவனமாக இருந்தாலும் மாற்று வலுவுடைய 5 பிள்ளைகளிற்கு தொழில் வழங்க வேண்டும் என்று.
சிங்கபூர் நாட்டிலே உள்ள கடைகளிலே நான் பார்த்த பொழுது ஸ்ரிக்கர் ஒட்டும் பணிகளிலே ஈடுபட்டு கொண்டு இருந்தார்கள். 
நான் ஒரு பிள்ளையயை பார்த்து உங்களை படம் எடுக்கலமா என்று கேட்ட பொழுது அந்தப் பிள்ளை என்னை தனது முகாமையாளிடம் அழைத்து சென்று தனது சைகையினாலே என்னை இந்த பெரியவர் படம் எடுக்க பார்க்கின்றார் என்று சொல்லியது.
உடனே அந்த முகாமயாளர் இதுதான் இந்தப் பிள்ளைகளின் நல்ல பண்பும் ஒழுங்கும் என பாராட்டி இனி நீங்கள் படம் எடுகக்கலாம் என தெரிவித்தார்.
அந்த அளவிற்கு இந்த தெய்வக் குழந்தைகள் மிகுந்த நற்பண்புகளுடனும் விசுவாசத்துடனும் பணி செய்கின்றார்கள்.
ஒரு முறை நான் மலேசியாவில் சென்று பார்த்த பொழுது அங்கு உள்ள விமான நிலையத்திலே பயணிகளிற்கு வழங்ப்படுகின்ற ஒலி கேட்கும் சாதரனங்களை சுத்தம் செய்து கொண்டு இருந்தார்கள்.
உலகத்தில் உள்ள பல நாடுகள் மாற்று வலுவுடையோர்கள் தொடர்பில் பல உயர்ந்த நிலையினை அடைந்து விட்டார்கள். ஆனால் எங்கள் மண்ணிலேதான் இந் தெய்வ குழந்தைகள் பற்றிய மகிமை இன்னமும் சரிவர புரியவில்லை.
எங்கள் மண்ணிலே எத்தனை கடைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளன ஆனால் இந்தப் பிள்ளைகளிற்கு யாருமே தொழில் வழங்குவதில்லை. அவர்கள் மாற்று வலுவுடையோர்களை மதிப்பதில்லை.
இதன் காரணமாகத்தான் மாற்று வலுவுடைய பலர் இன்று ஆலய வாசல்களிலே நின்று யாசகம் கேட்கின்றார்கள். பல நாடுகளிலே தற்காலத்தில் மாற்று வலுவுடையோர்கள் யாசகம் கேட்பதில்லை ஆனால் எங்கள் மண்ணிலே இந்த அவலம் தொடர்கின்றது.
எங்கள் சிவபூமி பாடசாலையிலே ஆசிரியர்கள் குருவாக மட்டுமன்றி தாயாக தாதியாக கடமையாற்றி இந்த தெய்வப் பிள்ளைகளை வளர்க்கின்றார்கள்.
மாற்று வலுவுடைய பிள்ளைகளிற்கு இங்கு சிறு சிறு தொழில் பயற்சிகளை வழங்கி வருகின்றோம் ஏனென்றால் இவர்கள் வீட்டிற்கு போனால் சமூகத்திற்கு போனால் இவர்களை சரியாக மதிக்கும் பக்குவம் எங்கள் மண்ணிலே இன்னமும் இல்லாத காரணத்தால்,
இவர்கள் தாமாக தமது சிறு தொழில் முயற்சிகளை தேடும் நோக்கில் நாங்கள் இந்த கடின பணியை செய்து வருகின்றோம்.
மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளிலே உள்ளதைப் போல எங்கள் மண்ணில் உள்ள வியாபார நிறுவனங்களில் சிறு சிறு தொழில் வாய்ப்புக்களை வழங்க முன்வர வேண்டும்.
சில பெற்றோர்கள் பாடசாலைக்கு போய் பெரிதாக என்ன செய்யப் போகின்றாய்? என்று ஏளனத்துடன் மறித்து வைத்திருக்கின்றார்கள். அவர்களிற்கு சிறு வயது தொடக்கம் ஊக்கத்தினையும் உற்சாகத்தினையும் கொடுக்க முன்வருவதில்லை.
தற்காலத்தில் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் மாற்று வலுவுடையோர்களின் விபரங்களை பதிவு செய்து பல திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றார்கள். 
வடக்கிலே பல ஆயிரம் மாற்றுவலுவுடையார் இருக்கின்றார்கள் ஆனால் பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெரிதாக யாரும் ஊக்கப்படுத்துவதில்லை
எங்களுடைய பிள்ளைகள் சர்வதேச ஒலிம்பிக் போட்டியிலே பங்கு பற்றி இருக்கின்றார்கள். இரண்டு மாணவர்கள் அமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதி ஒபாமா அவர்களின் பாரியாரிடம் சென்று பரிசு பெற்று வந்துள்ளார்கள்.
இந்த செய்தியை கூட எங்கள் யாழ்ப்பாணம் சரியாக கண்டு கொள்ளவில்லை. சரியாக கண்டு கொண்டால் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அறிவுள்ள சமுதாயம் பாடசாலைகளிலே கொண்டு வந்து சேர்த்து இருப்பார்கள்.
சில இடங்களிலே நான் பார்த்த பொழுது ஆழக்கான ஆடையுடன் தெருவிலே நடமாடுகின்றார்கள் அவர்களை யாரும் கவனிப்பதில்லை. 
எங்களுடைய முதியோர் இல்லத்திலே மாற்று வலுவுடைய பல முதியவர்களை கொண்டு வந்து விட்டு விட்டு எவ்வளவு செலவு என்றாலும் நாங்கள் அனுப்புறம் என்று சொல்லி விட்டு வெளிநாட்டுக்கு ஒடுகின்றார்கள்.
தன்னுடைய உடுப்பை கூட சரியாக கட்ட முடியாத முதியோர்களை முதியோர் இல்லங்களிலே விட்டு விட்டு வெளிநாட்டுக்கு ஓடித் தப்புகின்றார்கள்.
எனவே இந்த மன நிலை மாற வேண்டும். மாற்று வலுவுடையார்கள் தொடர்பில் நல்ல மனமாற்றம் எங்கள் மண்ணில் ஏற்பட வேண்டும்.
பாடசாலைகளிலே மாற்று வலுவுடையோருக்கு கல்வி வழங்குவதற்கு கட்டங்கள் கட்டுகின்றார்கள் ஆனால் அங்கு பிள்ளைகள் இருப்பதில்லை. கட்டடங்களிலே மூன்று பிள்ளைகள் மட்டும் இருக்கின்றார்கள்.
நான் சில பாடசாலைக்கு சென்ற போது இந்த புதிய கட்டடம் என்ன என்று கேட்டால் இது எங்களுக்கு விசேட தேவையுடையோருக்க்காக தந்தது என்பார்கள். 
சரி பிள்ளைகள் எங்கே? என கேட்டால் அவர்கள் ஒழுங்கா வருவதில்லை நாங்கள் தற்பொழுது வேறு தேவைக்காக பயன்படுத்துகின்றோம் என சொல்லுகின்றார்கள்.
ஒவ்வொரு வலையத்திலும் பல கட்டடங்கள் கட்டப்பட்டு அவை அனைத்தும் பேசாப் பொருளாக உள்ளது. எனவே எங்கள் சமூகம் மாற்று வலுவுடையார்கள் குறித்து தங்கள் மனதினை மாற்றி அவர்களை பாடசாலைக்கு அனுப்பும் முயற்சியினை மேற் கொள்ள வேண்டும்.
எங்கள் மண்ணில் உள்ள நிறுவனங்கள் அவர்களிற்கு சிறு சிறு தொழில் வாய்ப்புக்களை வழங்க முன்வர வேண்டும்.
ஆறு.திருமுருகன்,
தவவர்,
துர்க்கா தேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை.
 

 

Leave a Reply