• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காசாவில் குழந்தைகள், பெண்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் - பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்

இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போர் 35-வது நாளாக நீடித்து கொண்டிருக்கிறது. காசாமீது இஸ்ரேல், வான், கடல், தரைவழி என மும்முனை தாக்குதல் நடத்திவருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

காசாமீது வான் தாக்குதல் தீவிரமாக நடந்து வரும் நிலைமையில், இஸ்ரேல் ராணுவம்-ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டையும் நடந்து வருகிறது. காசா சிட்டியில் உள்ள பள்ளி மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள அல்-புராக் பள்ளியைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

இதில் அந்த பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

இப்பள்ளியில், வீடுகளை இழந்த மக்கள் தஞ்சமடைந்து இருந்தனர் என்று கூறப்படுகிறது. காசாவில் பள்ளிகள், மருத்துவமனைகள், மசூதிகள் ஆகியவற்றை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த வாரம் ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஐ.நா. நடத்தும் பள்ளிமீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே காசாவில் உள்ள மருத்துவமனைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கி சண்டை தீவிரமாக நடந்து வருவதால் நோயாளிகள், ஊழியர்கள், பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா, அல்-குத்ஸ், அல்-ரான்டிசி ஆகிய 3 மருத்துவமனைகள் அருகில் வான் தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் அல்-ஷிபா மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு கடும் துப்பாக்கி சண்டை நடந்துவருகிறது. மருத்துவமனைகளை இஸ்ரேல் டாங்கிகள் சூழ்ந்துள்ளன. இதனால் மருத்துவமனைக்குள்ளேயே மக்கள் சிக்கித்தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறுகையில், காசாவில் குழந்தைகள், பெண்களை கொல்வதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும். பொதுமக்கள் மீது குண்டு வீசுவதற்கு எந்த நியாயமும் இல்லை. குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த மரணங்கள் அதிருப்தியை ஏற்படுத்துகின்றன என தெரிவித்தார்.
 

Leave a Reply